ஜப்பானில் சுனாமி.. பலித்தது புதிய பாபா வாங்காவின் கணிப்பு!
உலகின் சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் ஒன்று ரஷ்யாவில் இன்று அதிகாலை பதிவான நிலையில் அந்நாட்டிலும் ஜப்பானிலும் சுனாமி அலைகள் 12 அடி உயரத்திற்கு உயர்ந்தன. ரஷ்யாவின் கிழக்குப்பகுதியில் உள்ள கம்சட்கா தீபகற்பத்தில் 8.8 ரிக்டர் அலகில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக கடலிலும் பேரலைகள் எழுந்தன, இதனால் ரஷ்யாவின் கிழக்குப்பகுதி கடற்கரைகள் ஜப்பானின் வடக்குப்பகுதி கடற்கரைகள் பாதிக்கப்பட்டன.
இந்த நிலையில், ஜப்பானில் ஜூலை மாதம் பெரும் நிலநடுக்கம் மற்றும் அதைத்தொடர்ந்து சுனாமி வரும் என்ற, தீர்க்கதரிசி ரியோ டட்சுகியின் கணிப்பு இம்முறையும் பலித்துவிட்டதாக ஜப்பானியர்கள் கூறுகின்றனர். எதிர்காலத்தை கணிக்கும் கணிப்பதில் உலகப்புகழ் பெற்ற நாஸ்ட்ராடமஸ், பாபா வாங்கா வரிசையில் தங்கள் நாட்டின் ரியோ டட்சுகியையும் ஜப்பானியர்கள் சேர்த்துள்ளனர். புதிய பாபா வாங்கா என்றே இவரை அழைக்கின்றனர்.
2011இல் ஜப்பானில் பெரும் நிலநடுக்கம், சுனாமி வரும் என்ற கணிப்பு அப்படியே பலித்தது. இதுபோல அவரது பல கணிப்புகள் பலித்த நிலையில் 2025 ஜூலை 5ஆம் தேதி ஜப்பானை பெரும் பூகம்பம், சுனாமி தாக்கும் என கணித்திருந்தார். இதனால் அந்த நாளில் ஜப்பானில் மக்கள் மிகவும் உஷாராக இருந்தனர். வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவதுகூட குறைந்தது. ஆனால் அன்று எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்கவில்லை.
ஆனால் அதே ஜூலை மாதம் சில வாரங்கள் கழித்து பெரும் நிலநடுக்கமும் சுனாமியும் ஜப்பானின் வட பகுதியை தாக்கியுள்ளது. ரஷ்யாவில் நிலநடுக்கம் ஏற்பட்டாலும் அதன் அதிர்வுகள் ஜப்பானிலும் பாதிப்பை ஏற்படுத்தின. டட்சுகியின் கணிப்பு தாமதமாக நடந்தாலும் நிஜமாகிவிட்டதாக சமூக வலைதளங்களில் ஜப்பானியர்கள் வியப்புடன் பகிர்ந்து வருகின்றனர்.