ரஷ்யா|குலுங்கிய கட்டிடங்கள்; 8.7 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்... சுனாமி எச்சரிக்கை!
ரஷ்யாவின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் இன்று (ஜூலை 30 2025) காலை மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8.7 என்ற அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
4 மீட்டர் (13 அடி) உயரத்தில் சுனாமி அலைகள் ஏற்பட்டதாகவும் இதனால், சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, அங்கு வசித்துவரும் மக்கள் கடும் பீதியடைந்துள்ளனர். இந்த பலத்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் பயங்கர சேதமடைந்தன. அச்சத்தில் மக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர்.
இந்தநிலையில், அங்கு வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றும் பணி நடந்து வருகிறது.அப்பகுதியில் உள்ள மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிகாரிகள் விரைவாக செயல்பட்டு வருகின்றனர். அதிகாரிகள் குடியிருப்பாளர்கள் விழிப்புடன் இருக்கவும், அனைத்து அவசர வழிமுறைகளையும் பின்பற்றவும் வலியுறுத்தினர். இதனால், அமெரிக்கா, ஜப்பான் மற்றும் அருகிலுள்ள பிற நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் இதுகுறித்து தெரிவிக்கையில், இந்த நிலநடுக்கம் 19.3 கிலோமீட்டர் (12 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாகவும், அவாச்சா விரிகுடாவில் சுமார் 1,65,000 மக்கள்தொகை கொண்ட கடலோர நகரமான பெட்ரோபாவ்லோவ்ஸ்க் - கம்சாட்ஸ்கியிலிருந்து கிழக்கு-தென்கிழக்கில் சுமார் 125 கிலோமீட்டர் (80 மைல்) தொலைவில் மையம் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானின் வானிலை ஆய்வு நிறுவனம் , முதற்கட்டமாக 8.0 ரிக்டர் அளவில் பதிவாகியதாகவும் தெரிவித்துள்ளது. ஜப்பானின் பசிபிக் கடற்கரையில் 1 மீட்டர் (யார்டு) வரை சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளதாக அது எச்சரிக்கை விடுத்துள்ளது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, கம்சட்கா பிராந்தியத்தின் சில பகுதிகளில் 3 முதல் 4 மீட்டர் உயர அலைகளுடன் சுனாமி ஏற்பட்டதாக ரஷ்யாவின் அவசரகால சூழ்நிலைகளுக்கான பிராந்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அடுத்த மூன்று மணி நேரம்?
அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் "ஆபத்தான சுனாமி அலைகள்" ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பும் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென் கொரியா, வட கொரியா மற்றும் தைவான் கடற்கரைகளில் சிறிய சுனாமி அலைகள் - அலை மட்டத்திலிருந்து 0.3 மீட்டருக்கும் (சுமார் 1 அடி) ஏற்பட கூடும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இது 2022 ஆம் ஆண்டுக்குப் பிறகு 8.0 க்கு ரிக்டர் அளவிற்கு மேல் பதிவான முதல் நிலநடுக்கம் மற்றும் 2011 க்குப் பிறகு ஏற்பட்ட மிக வலிமையான நிலநடுக்கம் என்று USGS தெரிவித்துள்ளது.
நவம்பர் 4, 1952 அன்று, கம்சட்காவில் 9.0 ரிக்டர் அளவில் நிலநடுக்க ஏற்பட்டது. இது ஹவாயில் 9.1 மீட்டர் (30 அடி) அலைகளை ஏற்படுத்திய போதிலும், இறப்பு எதுவும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.