டிரம்ப்புக்கு பெருத்த அவமானம்! அழைப்பை நிராகரித்த கிம் ஜாங் உன்? பின்னணி என்ன?
அமெரிக்கா-வடகொரியா உறவுகள் மீண்டும் பதற்றமடைந்துள்ளன. டிரம்ப், கிம் ஜாங் உனை தொடர்புகொள்ள முயன்றும், பதில் கிடைக்காததால் கடிதம் அனுப்பினார். ஆனால், வடகொரிய அதிகாரி அந்தக் கடிதத்தை திருப்பி வீசியது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.
செய்தியாளர் - ராஜ்குமார். ர
அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே பல ஆண்டுகளாக அணு ஆயுத விவகாரம், பொருளாதாரத் தடைகள் மற்றும் ராணுவப் பாதுகாப்பு தொடர்பாகப் பதற்றம் நீடித்து வருகிறது. அணு ஆயுத திறனை பிற நாடுகள் மேம்படுத்திவருவதை அமெரிக்க விரும்புவதில்லை. இந்நிலையில் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுதங்களையும் ஏவுகணைகளையும் மேம்படுத்தி வருவது அமெரிக்காவுக்குப் பெரும் சவாலாக இருந்து வருகிறது.
இதன் காரணமாக கடந்த 2018 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக நீடித்து வந்த பதற்றத்தைக் குறைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், வடகொரியாவின் அணு ஆயுதத் திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இதனால் பேச்சுவார்த்தைகள் முடங்கின.
இந்நிலையில், கடந்த 2025ஆம் ஆண்டு முதல் மீண்டும் கிம் ஜாங் உன்னைத் தொடர்புகொள்ள டிரம்ப் முயற்சி செய்ததாக The Wall Street Journal செய்திவெளியிட்டுள்ளது. தொலைபேசி வழிகள் மற்றும் தூதரகத் தொடர்பு வழிகள் மூலமாக டிரம்ப் தொடர்புகொள்ள முயற்சி செய்துள்ளார். ஆனால், வடகொரியாவிடமிருந்து எந்தப் பதிலும் கிடைக்கவில்லை என்றும், இதையடுத்து, கிம் ஜாங் உன்னுக்கு டிரம்ப் தனிப்பட்ட முறையில் டிரம்ப் கடிதம் ஒன்றையும் எழுதியதாகவும் அந்தக் கடிதத்தை நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான வடகொரியாவின் தூதரக அதிகாரி ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதன்பிறகு ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தின்போது, அந்த அதிகாரி அந்த கடிதத்தைத் திறக்காமலேயே அமெரிக்கப் பிரதிநிதி முன்னிலையில் திருப்பி வீசியதாக WSJ செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சமீபத்திய ட்ரும்பின் ஆசியப் பயணத்தின்போதும் கிம் ஜாங் உன்னை நேரில் சந்திக்க விருப்பம் தெரிவித்திருந்ததாகவும் ஆனால், வடகொரியா முன்வைத்த நிபந்தனைகளை அமெரிக்காவால் ஏற்றுக்கொள்ள முடியாததால் இந்தச் சந்திப்பு நடைபெறவில்லை என WSJ செய்தி வெளியிட்டுள்ளது. இருப்பினும், டிரம்ப் நிர்வாக அதிகாரி ஒருவர், கிம் ஜாங் உன்னைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என இந்த தகவல்களை முற்றிலும் மறுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஒருகாலத்தில் கடிதங்கள் பரிமாறிக்கொண்டு, நேரில் சந்தித்து நட்புறவை வெளிப்படுத்திய டிரம்ப் மற்றும் கிம் ஜாங் உன் இடையே தற்போது இத்தகைய நிலை உருவாகியுள்ளது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

