\
hormuz
hormuzLewis Pugh X

கொளுந்துவிட்டு எரியும் கப்பல்கள்.... வெடித்த ஏவுகணைகள்...ஹார்முஸில் 3 நாட்கள் நீந்திய வீரர்

ஹார்முஸ் நீரிணையில் மூன்று நாட்கள் நீந்திய வீரர்: போரின் பாதிப்புகளை உலகிற்கு எடுத்துரைக்கும் முயற்சி
Published on: 
Summary

ஈரான்-அமெரிக்கா மோதலால் ஹார்முஸ் நீரிணை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எண்ணெய் கப்பல்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்கள், குண்டுவெடிப்புகள் தொடர்ந்து நிகழ்கின்றன. சுற்றுச்சூழல் பாதிப்புகளை உலகின் கவனத்திற்குக் கொண்டு செல்ல பிரிட்டன் நீச்சல் வீரர் லூயிஸ் பக் மூன்று நாட்கள் நீந்தி சாதனை படைத்தார்.

செய்தியாளர் - M.மீரா

ஈரான் போர் காரணமாக உலகின் முக்கியமான கடல் வர்த்தகப் பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் நீரிணை கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறது. இங்கு கப்பல் போக்குவரத்தைக் கண்காணித்து, பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் அமெரிக்கக் கடற்படையும் தனது ராணுவப் படைகளைக் குவித்துள்ளது. இதனால் ஈரான் – அமெரிக்கா இடையே நேரடி மோதல் நடந்து வருகிறது. அண்மையில், ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற எண்ணெய்க் கப்பல்கள் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளன. சில கப்பல்கள் கடல் கண்ணிவெடிகளில் சிக்கியதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு ஈரான் போர்... ஏவுகணைத் தாக்குதல்கள், குண்டுவெடிப்புகள், எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் எனப் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

இதனால் ஏற்படும் பாதிப்புகள் இத்துடன் நிற்கவில்லை. ஐ.நா. பல்கலைக்கழகம் வெளியிட்ட ஆய்வின்படி, 2026 ஆகஸ்டில் ஈரான் அருகே சுமார் 100 சதுர கி.மீ. கடல் பரப்பில் எண்ணெய் மாசுபாடு கண்டறியப்பட்டது. இதனால் மீன்கள், கடல் ஆமைகள், டுகாங் உள்ளிட்ட உயிரினங்களும், பவளப்பாறைகள், சதுப்புநிலக் காடுகளும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்றும் இந்தச் சேதங்கள் பல ஆண்டுகள் நீடிக்கலாம் என்றும் இந்த ஆய்வில் தெரிவந்துள்ளது.

இந்நிலையில் ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்புகளை உலகின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் வகையில், பிரிட்டனைச் சேர்ந்த நீச்சல் வீரர் லூயிஸ் பக், அந்தக் கடல் பகுதியில் மூன்று நாட்கள் நீந்தி சாதனை படைத்துள்ளார்.

56 வயதான லூயிஸ் பக், ஐக்கிய நாடுகள் சபையின் பெருங்கடல் பாதுகாப்புத் தூதராக உள்ளார். உலகின் பல்வேறு கடல்களில் நீண்ட தூரம் நீந்திய அனுபவம் கொண்ட இவர், தற்போது ஈரான் போர் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள ஹார்முஸ் நீரிணை வழியாக சுமார் 15 கிலோமீட்டர் தூரம் நீந்தியுள்ளார்.

ஓமன் நாட்டின் முசந்தம் தீவில் இருந்து, அங்குள்ள தீபகற்பத்தின் வடக்கு முனையான ஹார்முஸ் நீரிணை முனை வரை அவர் தனது பயணத்தை மேற்கொண்டார். கடந்த மார்ச் மாதம் போர் தொடங்கியதற்குப் பிறகு, இந்தப் பகுதியில் நீண்ட தூரம் நீந்திய முதல் நபராக அவர் கருதப்படுகிறார்.

இந்த நீச்சல் பயணத்தைக் குறித்து அவர் தனது X தளத்தில் நீந்தத் தொடங்கிய 30 நிமிடங்களிலேயே, சில கிலோமீட்டர் தொலைவில் எண்ணெய் கப்பல் ஒன்று தாக்கப்பட்டதால் அந்த கடற்பகுதியே அதிர்ந்ததாக கூறியிருக்கிறார். போர் மிகப்பெரிய மனிதத் துயரத்தை ஏற்படுத்துகிறது. உயிர்கள் பறிபோகின்றன. குடும்பங்கள் சிதைகின்றன. வீடுகள் அழிக்கப்படுகின்றன. ஆனால், போதிய கவனம் பெறாத மற்றொரு பாதிப்பும் இருக்கிறது. அதுதான் இயற்கைக்கு ஏற்படும் பாதிப்பு என்றும் கூறியிருக்கிறார்.

இதுவரை பார்த்த இடங்களிலேயே மிகவும் அழகான இடங்களில் ஒன்று ஹார்முஸ் நீரிணை . உயரமான மலைகள், பிரமிக்க வைக்கும் கடல் முகத்துவாரங்கள், பவளப்பாறைகள், சதுப்புநிலக் காடுகள் என இயற்கை எழில் கொஞ்சும் பகுதி இது. டால்பின்கள், கடல் ஆமைகள், டுகாங் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களும் இங்கு வாழ்கின்றன. உலகின் மிகச் சிறந்த இயற்கை அதிசயங்களில் இதுவும் ஒன்று.

ஆனால், இப்போது இந்த அற்புதமான பகுதி போரின் பிடியில் சிக்கியுள்ளது. எண்ணெய் கப்பல்கள், எரிவாயுக் கப்பல்கள் மற்றும் பிற வணிகக் கப்பல்கள் தாக்கப்படுகின்றன. இதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் பல தசாப்தங்களுக்குத் தொடரும்.

போரை நிறுத்துங்கள். ஹார்முஸ் நீரிணையைத் திறக்க வேண்டும் கடலில் ஏற்பட்டுள்ள மாசுபாட்டை அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

hormuz
24 மணி நேரத்தில் 8 எச்சரிக்கைகள்.. சவுதியை உலுக்கிய ஹவுதி தாக்குதல்கள்!