அமெரிக்காவில் கொலை செய்யப்பட்ட இந்தியப் பெண்.. தமிழகத்தில் கைதான Ex Lover!
அமெரிக்காவில் இந்தியப் பெண் ஒருவர் அமெரிக்காவில் கொலை செய்யப்பட்ட வழக்கில், அதுதொடர்பாக தமிழகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவின் மேரிலாந்தில் உள்ள எலிகாட் நகரில் வசித்து வந்தவர் நிகிதா ராவ் கோடிஷாலா (27). இந்திய-அமெரிக்க தரவு ஆய்வாளரான இவர், 2025 முதல் வேதா ஹெல்த் நிறுவனத்தில் தரவு மற்றும் உத்தி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார். இவருடைய முன்னாள் காதலர் அர்ஜுன் சர்மா. இந்த நிலையில், ஜனவரி 2ஆம் தேதி முதல் நிகிதா ராவ் காணாமல் போனதாகக் கூறப்பட்டது. அவரது முன்னாள் காதலரான அர்ஜுன் சர்மா, புத்தாண்டுத் தினத்தன்று அவரைக் கடைசியாகப் பார்த்ததாகக் கூறி ஹோவர்ட் கவுண்டி காவல்துறையில் புகார் அளித்திருந்தார். இதற்கிடையே, அடுக்குமாடி குடியிருப்பில் நிகிதா ராவ் கோடிஷாலாவின் உடலைக் கண்டுபிடித்தனர். அப்போது அவர், கத்துக்குத்துக்கு இரையாகி இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதையடுத்து, நிகிதாவின் காணாமல் போன வழக்கு, கொலை வழக்காகப் பதிவு செய்யப்பட்டது. நிகிதாவின் உடல் கண்டெடுக்கப்பட்ட பிறகு, அவர் காணாமல் போனதாகப் புகார் அளித்த அதே நாளில் அமெரிக்காவிலிருந்து அர்ஜுன் சர்மா இந்தியாவுக்குச் சென்றிருப்பதை போலீஸார் உறுதிப்படுத்தினர். இதனால் அவர்மீது சந்தேகம் வலுக்கத் தொடங்கியது. இதையடுத்து அமெரிக்க போலீஸார், இந்தியாவின் உதவியை நாடினர். இதைத் தொடர்ந்து, அவர் தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், அவர்தான் கொலை செய்தார் என்பதற்கான ஆதாரத்தை அவர்கள் வெளியிடவில்லை. அதேநேரத்தில் விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

