”ட்ரம்பின் அடுத்த இலக்கு ஈரான்தான்” - உறுதியாகச் சொன்ன பொருளாதார நிபுணர்.. காரணம் என்ன?
”ட்ரம்பின் அடுத்த இலக்கு ஈரான்தான்” என பிரபல பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ் தெரிவித்துள்ளார். கிரீன்லாந்து எனப் பலரும் கணிக்கப்பட்டு வரும் நிலையில், அவருடைய இந்தக் கருத்து வந்துள்ளது.
போதைப் பொருட்களை அமெரிக்காவுக்குள் கடத்த வெனிசுலா உறுதுணையாக இருந்ததாக அமெரிக்கா குற்றஞ்சாட்டிய நிலையில், கடந்த 3ஆம் தேதி அந்நாட்டு ராணுவம் வெனிசுலாவில் தாக்குதல் நடத்தி, அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோரைக் கைது செய்து அமெரிக்காவிற்கு நாடு கடத்தியது. அங்கு அவர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். விசாரணை நடைபெற்று வருகிறது. மதுரோவைக் கைது செய்திருப்பதற்கு எதிராக ட்ரம்ப் உலக நாடுகளின் எதிர்ப்பைச் சந்தித்திருக்கும் நிலையில், அடுத்ததாக அவர், டென்மார்க் அரசின் கீழ் சுயாட்சியுடன் இயங்கும் கிரீன்லாந்து மீது கவனம் செலுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்பின் அடுத்த இலக்கு ஈரானாக இருக்கலாம் என பிரபல பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இந்தியா டுடேவுக்கு ஊடகத்திற்கு பிரத்யேகமாக அளித்துள்ள பேட்டியில், “ஈரான் அடுத்ததாக இருக்கலாம். இஸ்ரேல் ஈரான் மீது வெறிகொண்டு அந்நாட்டின் அரசாங்கத்தை கவிழ்க்க விரும்புகிறது. 100 சதவீதம் தெளிவாக இல்லாத காரணங்களுக்காக, அமெரிக்கா அடிப்படையில் இஸ்ரேலுக்குக் கடமைப்பட்டுள்ளது. இஸ்ரேல் சொல்லும் போர்களை அமெரிக்கா நடத்துகிறது. உண்மையில், இது மிகவும் இருண்டது. ஈரான் பல பெரிய வல்லரசுகளுக்கு நடுவில் உள்ளது. ஈரான் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளைக் கொண்டுள்ளது மற்றும் நிறைய தீங்கு விளைவிக்கும் திறனைக் கொண்டுள்ளது. இஸ்ரேல் ஓர் அணு ஆயுத நாடு. மொத்தத்தில், இது சாத்தியமான பேரழிவுக்கான ஒரு செய்முறையாகும். ஆகையால், ஈரான் தலைவர்கள் இப்போதே அமெரிக்காவிடம் சென்று இதைத் தடுத்த நிறுத்த வேண்டும். இது நகைச்சுவையும் அல்ல; ஒரு விளையாட்டும் அல்ல. முழுக்க முழுக்க உண்மை. விஷயங்கள் கட்டுப்பாட்டை மீறுவதற்கு முன்பு நிறுத்தப்பட வேண்டும்” என அவர் எச்சரித்துள்ளார்.
தொடர்ந்து வெனிசுலா குறித்து பேசிய அவர், “வெனிசுலாவைப் பொறுத்தவரை, அமெரிக்கா 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த ஆட்சியை மாற்ற முயற்சித்து வருகிறது, ஏனெனில், அது ஒரு இடதுசாரி அரசாங்கம் மற்றும் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் விரும்புவதை அது பறிக்கிறது. மேலும், எந்த இடதுசாரி அரசாங்கமும் அமெரிக்காவின் இலக்காகும். தவிர, அதன் அடுத்த இலக்கு எண்ணெய் என்பது தெளிவாகிறது.
வெனிசுலாவில் மிகப்பெரிய எண்ணெய் இருப்பு உள்ளது - இது உலகிலேயே மிகப்பெரியது, சவுதி அரேபியாவை விடவும் பெரியது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு தரவுகள் தெரிவிக்கின்றன. வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமானால், மிக நீண்ட காலமாக வெனிசுலா அரசாங்கத்தை கவிழ்க்க விரும்பிய ஓர் ஆழமான அரசின் ஒரு பகுதியாகும். தவிர, ட்ரம்ப் ஒரு வெறி பிடித்தவர். அவர் அந்நாட்டின் எண்ணெய் வளம் குறித்து ’அது எங்களுடையது’என்கிறார்” எனத் தெரிவித்துள்ளார்.

