”நான் குற்றவாளி இல்லை” - நீதிமன்றத்தில் வாதம் வைத்த மதுரோ.. அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன?
”நான் நிரபராதி. நான் குற்றவாளி இல்லை” என நாடு கடத்தப்பட்டிருக்கும் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ நியூயார்க் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
போதைப் பொருட்களை அமெரிக்காவுக்குள் கடத்த வெனிசுலா உறுதுணையாக இருந்ததாக அமெரிக்கா குற்றஞ்சாட்டிய நிலையில், கடந்த 3ஆம் தேதி அந்நாட்டு ராணுவம் வெனிசுலாவில் தாக்குதல் நடத்தி, அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோரைக் கைது செய்து அமெரிக்காவிற்கு நாடு கடத்தியது. அங்கு அவர், நியூயார்க்கில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீலம் மற்றும் ஆரஞ்சு நிற சிறைச் சீருடையில், ஆஜர்படுத்தப்பட்ட அவர், ”நான் நிரபராதி. நான் குற்றவாளி இல்லை. நான் ஓர் ஒழுக்கமான மனிதன். நான் இன்னும் என் நாட்டின் அதிபர்தான். தாம் ஒரு போர்க்கைதிதான். எதிரியால் பிடிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு நபர்” என வாதிட்டார். அவரது மனைவியும் தாம் குற்றமற்றவர் என வாதம் வைத்தார். ஆனால், அமெரிக்கா இதை மறுக்கிறது.
உண்மையில், மதுரோ ஒரு போர்க் கைதி என்றால், சர்வதேச சட்டத்தின்கீழ் அவருக்குப் பாதுகாப்புகள் பொருந்தும். 1949ஆம் ஆண்டு மூன்றாவது ஜெனீவா மாநாடு, போர்க் கைதிகளுக்கு மனிதாபிமான சிகிச்சை, மரியாதை மற்றும் பாதுகாப்பை கட்டாயமாக்குகிறது. இந்த மாநாட்டின்படி, ஒரு போர்க் கைதியை வேறொரு நாட்டில், குறிப்பாக தடுப்புக்காவல் அதிகாரத்தில் விசாரித்து தண்டனை விதிக்க முடியும், ஆனால் போர்க்குற்றங்கள் போன்ற சில குற்றங்களுக்கு மட்டுமே. இருப்பினும், மதுரோ மீது போர்க்குற்றங்களுக்காக அல்ல, போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பொதுவாக, மூன்றாவது ஜெனீவா மாநாடு, ’மோதல் முடிந்தவுடன் போர்க் கைதிகளை தாமதமின்றி அவர்களின் நாட்டிற்கு திருப்பி அனுப்ப வேண்டும்’ என்று கூறுகிறது. அதன்படி பார்த்தால், ஜெனீவா உடன்படிக்கைகள் மதுரோவுக்குப் பொருந்தும். ஆனால், இதை அதிபர் ட்ரம்ப் நிச்சயம் புறக்கணிப்பார் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோவும், ‘அமெரிக்காவும் வெனிசுலாவும் போரில் ஈடுபடவில்லை. நாங்கள் போதைப்பொருள் கடத்தல் அமைப்புகளுக்கு எதிராகப் போரில் ஈடுபட்டுள்ளோம். அது வெனிசுலாவுக்கு எதிரான போர் அல்ல” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், ரூபியோவின் கருத்துகள் ட்ரம்பின் கூற்றுகளுக்கு முரணாக உள்ளது.
முன்னதாக ட்ரம்ப், "பாதுகாப்பான, சரியான மற்றும் நியாயமான மாற்றம் மேற்கொள்ளப்படும் வரை அமெரிக்கா வெனிசுலாவை நடத்தும். அந்த நாடு சீரழிந்து கிடக்கிறது. உலகின் மிகப்பெரிய எண்ணெய் வளம் கொண்ட நாட்டை சோசலிச ஆட்சி நாசமாக்கிவிட்டது. இனி வெனிசுலாவின் எண்ணெய் உற்பத்தியை அமெரிக்காதான் நிர்வகிக்கும். அமெரிக்கத் திறமையால் உருவாக்கப்பட்ட அந்த எண்ணெய் வளத்தை மீண்டும் நாங்களே சரிசெய்வோம்” எனத் தெரிவித்திருந்தார். அதன்படி, பார்க்கப்போனால், ட்ரம்ப்வுக்கு வெனிசுலாவின் ஜனநாயக ஆட்சிக்கு களம் அமைத்துக் கொடுப்பதைவிட, அந்த நாட்டின் எண்ணெய் வளத்தின் மீதே கவனம் இருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதனால், மதுரோவுக்கு நிச்சயம் அமெரிக்கா கடுமையான தண்டனைகளையே வழங்கும் எனவும் கூறப்படுகிறது.
உலகின் மிகப்பெரிய எண்ணெய் வளத்தைக் கொண்ட நாடாக வெனிசுலா உள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு நிலவரப்படி, 303 பில்லியன் பீப்பாய்கள் அளவுக்கு அங்கு எண்ணெய் வளம் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது, ஒரு காலத்தில் கச்சா எண்ணெய் ஏற்றுமதியிலிருந்து பெற்ற வருவாயில் ஒரு பகுதியை மட்டுமே ஈட்டுகிறது. OEC தரவுகளின்படி, 2023ஆம் ஆண்டில் வெனிசுலா வெறும் $4.05 பில்லியன் மதிப்புள்ள கச்சா எண்ணெயையே ஏற்றுமதி செய்துள்ளது. இது சவுதி அரேபியா ($181 பில்லியன்), அமெரிக்கா ($125 பில்லியன்) மற்றும் ரஷ்யா ($122 பில்லியன்) உள்ளிட்ட முன்னணி ஏற்றுமதியாளர்களைவிட மிகக் குறைவு. இதற்கு, வெனிசுலா எண்ணெய் மீதான அமெரிக்கத் தடைகளே காரணமாகும்.

