ரஷ்யா அருகே அமெரிக்க அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள் நிறுத்தம்.. அமெரிக்கா-ரஷ்யா இடையே பதற்றம்!
அணுகுண்டுகளை தாங்கிய 2 நீர்மூழ்கிக் கப்பல்களை ரஷ்யா அருகே நிறுத்துமாறு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதனால் அமெரிக்கா, ரஷ்யா இடையே உரசல் அதிகரிக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. தான் அதிபரானால் ஒரே நாளில் உக்ரைன் ரஷ்யா போரை நிறுத்துவேன் என கடந்தாண்டு கூறியிருந்தார். ஆனால் பதவிக்கு வந்து 6 மாதங்களுக்கு மேலாகியும் போர் நின்றபாடில்லை. மாறாக போரின் தீவிரம் அதிகரிக்கவே செய்துள்ளது. புடினுடன் ட்ரம்ப் பல முறை தொலைபேசியில் பேசியும் புடின் கழுவும் மீனில் நழுவும் மீனாக உள்ளார்.
சிறப்பு தூதர்களை கொண்டு 3ஆம் நாடுகளிலும் பேச்சுவார்த்தை நடத்தியும் புடின் இறங்கிவரவில்லை. புடினுக்கு என்னவோ ஆகிவிட்டது... உக்ரேனிய மக்களை கொன்று குவிக்கிறார் என்ற ரீதியில் சமூக தளத்தில் புலம்பினார் ட்ரம்ப். ரஷ்யாவுக்கு பொருளாதார தடைகளை விதிப்பதாகவும் எச்சரித்தார். ஆனால் புடினிடம் எதுவும் பலிக்கவில்லை. போரை நிறுத்துமாறு ட்ரம்ப்பின் நெருக்கடி அதிகரித்துவரும் நிலையில் அவரை நேரடியாக கடுமையாக விமர்சித்து வருகிறார்.
ரஷ்ய முன்னாள் அதிபரும் பாதுகாப்பு கவுன்சிலின் தற்போதைய துணைத் தலைவருமான மெட்வடேவ். சோவியத் யூனியன் காலத்து அணுஆயுத வலிமை குறித்து ட்ரம்ப் நினைவில் கொள்ள வேண்டும் என கூறியிருந்தார். இது ட்ரம்ப்பை வெகுவாக தூண்டிவிட்டுவிட்டது. மெட்வடேவ் தன் வார்த்தைகளை அளந்து பேச வேண்டும் என்று கூறிய ட்ரம்ப், ரஷ்யா அருகே 2 அணு ஆயுத வலிமை கொண்ட நீர்மூழ்கிகளை நிறுத்த உத்தரவிட்டுள்ளார்.
ட்ரம்ப்பை நேரடியாக எதிர்த்து ஒரு வார்த்தை கூட கூறாத புடின், தனது சகாவான மெட்வடேவ் மூலம் எச்சரிக்கை விடுக்கிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதற்கிடையே உக்ரைனுடன் போரை நிறுத்துமாறு ட்ரம்ப் விதித்த கடைசி கெடு ஒரு வாரத்தில் முடிவுக்கு வருகிறது. பல நாடுகளில் போரை நிறுத்தியதாக பெருமிதம் கொள்ளும் ட்ரம்ப்பின் சொல் புடினிடம் எடுபடுமா... காத்திருக்கிறது உலகம்...