பாலஸ்தீனத்திற்கு ஆதரவுக் கரம் நீட்டிய கனடா.. எச்சரித்த ட்ரம்ப்.. வரிகள் உயருமா?
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ளாத நாடுகளுக்குப் பதில் வரி விதிக்கப்படும் என ஏற்கெனவே அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து பிரிட்டன், ஜப்பான், ஐரோப்பிய யூனியன், இந்தோனோசியா உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவுடன் சமரசம் நடத்தி, தனித்தனியாக ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன. சீனாவுடன்கூட, அமெரிக்கா கடந்த மே மாதம் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், இந்தியாவிற்கு 25% வரி விதிக்கப்பட்டுள்ளது. இது, நாளை முதல் அமலுக்கு வர இருக்கிறது. இந்தியா தவிர, பிற நாடுகளுக்கும் இந்த வரி விதிப்பு முறை நாளை முதல் செயல்படுத்தப்பட இருக்கிறது. ‘
இந்த நிலையில், பிரான்ஸ், பிரிட்டனைத் தொடர்ந்து கனடாவும் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாகத் தெரிவித்துள்ளது. இதற்கு இஸ்ரேலுடன் நட்புணர்வுடன் இருக்கும் அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், “ஆஹா! பாலஸ்தீனத்திற்கு மாநில அந்தஸ்தை ஆதரிப்பதாக கனடா அறிவித்துள்ளது. அது, அவர்களுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்வது எங்களுக்கு மிகவும் கடினமாக்கும். ஓ கனடா" என தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் எழுதியுள்ளார்.
இதற்கிடையே, நாளைக்குள் அமெரிக்கா - கனடா இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை இறுதிசெய்ய செயல்பட்டு வருகின்றன. ஒருவேளை நாளைக்குள் ஒப்பந்தம் செய்யப்படாவிட்டால், அமெரிக்கா-மெக்சிகோ-கனடா வர்த்தக ஒப்பந்தத்தின்கீழ் வராத அனைத்து கனடா பொருட்களுக்கும் 35 சதவீத வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இந்த நிலையில், பாலஸ்தீனத்திற்கு கனடா ஆதரவு தெரிவித்திருப்பதால், இதில் எந்த சமரசமும் ஏற்படாது எனக் கூறப்படுகிறது. ஏற்கெனவே கனடா - அமெரிக்கா உறவில் விரிசல் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, ட்ரம்ப் நிர்வாகத்துடனான கட்டணப் பேச்சுவார்த்தைகள் ஆக்கப்பூர்வமாக இருந்ததாகவும், ஆனால் பேச்சுவார்த்தைகள் காலக்கெடுவிற்குள் முடிவடையாமல் போகலாம் என்று கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்திருந்தார்.
மெக்ஸிகோவிற்கு அடுத்தபடியாக, கனடா அமெரிக்காவின் இரண்டாவது பெரிய வர்த்தக நாடாக உள்ளது. பெருமளவில் அமெரிக்க ஏற்றுமதிப் பொருட்களை வாங்கும் நாடாகவும் உள்ளது. அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியக தரவுகளின்படி, கடந்த ஆண்டு இது 349 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான (540 பில்லியன் அமெரிக்க டாலர்) அமெரிக்க பொருட்களை வாங்கியுள்ளது. மேலும், 412 பில்லியன் அமெரிக்க டாலர்களை (673 பில்லியன் அமெரிக்க டாலர்) அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது. தவிர, அமெரிக்காவிற்கு எஃகு மற்றும் அலுமினியத்தை அதிகமாக வழங்கும் நாடாகவும் கனடா உள்ளது. மேலும் இரு உலோகங்கள் மற்றும் வாகன ஏற்றுமதிகள் மீதும் வரிகளை எதிர்கொள்கிறது.