Donald Trump, Mark Carney
Donald Trump, Mark Carneypt web

“அமெரிக்கா மீதான நேரடித் தாக்குதல்” கனடாவுடன் வர்த்தகப் பேச்சுவார்த்தையை முடித்துக்கொண்ட ட்ரம்ப்

கனடாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தை இனி கிடையாது என அதிபர் ட்ரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். அமெரிக்க தொழில் நிறுவனங்கள் மீது நியாயமற்ற வரிகளை விதித்திருப்பது அமெரிக்கா மீதான நேரடி மற்றும் அப்பட்டமான தாக்குதல் எனவும் ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.
Published on

கனடாவுடனான வர்த்தகம் நிறுத்தம்

கனடா உடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளை உடனடியாக நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது டிஜிட்டல் சேவை வரியை விதிப்பதாக கனடா அறிவித்திருப்பது, அமெரிக்கா மீதான நேரடியான மற்றும் அப்பட்டமான தாக்குதல் என்றும் அவர் விமர்சித்துள்ளார். “வர்த்தகம் செய்வதற்கு மிகவும் கடினமான நாடான கனடா, பால் பொருட்கள் மீது பல ஆண்டுகளாக 400% வரியை விதித்து வருகிறது. தற்போது நமது அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது டிஜிட்டல் சேவை வரியை விதிப்பதாக அறிவித்துள்ளது, இது நமது நாட்டின் மீது நேரடி மற்றும் அப்பட்டமான தாக்குதலாகும்” எனத் தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்காவுடன் வணிகம் செய்வதற்காக கனடா செலுத்த வேண்டிய வரியை அடுத்த ஏழு நாட்களுக்குள் தெரிவிக்க உள்ளதாகவும் அதிபர் ட்ரம்ப் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வெள்ளை மாளிகையில் இதுதொடர்பாக பேசிய ட்ரம்ப், “அவர்கள் தங்கள் செயலை சரி செய்யும் வரை பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்காது” என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார். ட்ரம்பின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அமெரிக்க பங்குச் சந்தைகள் சற்றே சரிந்தாலும் S&P 500 மற்றும் Nasdaq போன்றவை உச்சத்தில் முடிந்தன. டிஜிட்டல் சேவை வரி என்பது அமெரிக்க நிறுவனங்களுக்கு எதிரானது என்றும், USMCA உடன்படிக்கைக்கும், WTO விதிகளுக்கும் முரணானது என்றும் அமெரிக்க வாணிகத் துறை தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Donald Trump, Mark Carney
‘விஜய் ஸ்பாய்லரா? வின்னரா?’ தேர்தலை ஒட்டிய சுற்றுப்பயணம்.. கட்சிகளின் நடவடிக்கைகள் ஒரு பார்வை..

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் இந்த அறிவிப்பை அடுத்து கனட அரசாங்கமும் பதிலளித்திருக்கிறது. “கனடாவின் தொழிலாளர்கள் மற்றும் வணிகங்களின் நலன்களுக்காக அமெரிக்காவுடன் இந்த சிக்கலான பேச்சுவார்த்தைகளில் கனேடிய அரசாங்கம் தொடர்ந்து ஈடுபடும்” எனத் தெரிவித்துள்ளது.

டிஜிட்டல் சேவை வரி

ட்ரம்பின் இந்தக் கோபத்திற்குக் காரணம் ஜூன் 20, 2024 அன்று கனடாவில் இயற்றப்பட்ட டிஜிட்டல் சேவை வரி. இந்த வரியின் கீழ் கனடாவின் டிஜிட்டல் பயணர்களிடமிருந்து ஒரு நிறுவனம் ஆண்டுக்கு 20 மில்லியன் கனடிய டாலர்களுக்கும் மேல் சம்பாதிக்கும் நிலையில், அந்த நிறுவனம் தனது டிஜிட்டல் சேவை வருவாயில் 3 சதவீதத்தை கனட அரசுக்கு செலுத்த வேண்டும். இதன் காரணமாக, ஆல்பாபெட், அமேசான் மற்றும் மெட்டா உள்ளிட்ட அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் 3 பில்லியன் டாலர் வரை வரியாக செலுத்த வேண்டுமென மதிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த சட்டத்தை திரும்பப் பெற கனட அரசாங்கம் மறுத்து வரும் நிலையில் அந்த சட்டம் வரும் திங்கட்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.

Donald Trump, Mark Carney
"நான் எந்த தவறும் செய்யவில்லை.." - நடிகர் கிருஷ்ணா ஜாமீன் கேட்டு மனு தாக்கல்!

பேச்சுவார்த்தை தோல்வி

அமெரிக்கா உலகளவில் வர்த்தகம் செய்யும் முதல் இரண்டு நாடுகளில் கனடாவும் ஒன்று. இத்தகைய சூழலில்தான் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக கனடாவுடன் பல மாதங்களாக அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இம்மாதத் தொடக்கத்தில் நடைபெற்ற G7 உச்சி மாநாட்டின்போதுகூட கனட பிரதமர் மார்க் கார்னி ட்ரம்பைச் சந்தித்தார். சந்திப்பின் முடிவில் அடுத்த 30 நாட்களுக்குள் புதிய பொருளாதார ஒப்பந்தத்தை நோக்கிய பேச்சுவார்த்தையை நடத்த ட்ரம்ப் ஒப்புக்கொண்டதாகவும் கார்னி அறிவித்திருந்தார். ஆனால், டிஜிட்டல் சேவை வரி தொடர்பான பேச்சு வார்த்தை மட்டும் தோல்வியடைந்ததாக கூறப்படுகிறது.

அமெரிக்கா மற்றும் கனடா இடையே பல ஆண்டுகளாக நெருக்கமான வர்த்தக உறவுகள் நிலவினாலும், டிஜிட்டல் சேவை வரியை ஒட்டிய தற்போதைய மோதல்கள் இருநாடுகளுக்கும் இடையேயான நட்புறவை பெரிதும் பாதித்துளன. உலகளவில் டிஜிட்டல் வரிவிதிப்பில் ஒருமித்த கருத்து எட்டப்படாத சூழலில் ஒவ்வொரு நாடும் தனிப்பட்ட முடிவுகளை எடுத்து வருவதாக சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த புதிய குழப்பம் சர்வதேச பொருளாதார சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.

Donald Trump, Mark Carney
ஆஸ்கார் குழுவில் இணைய கமல்ஹாசனுக்கு அழைப்பு.. மேலும் 8 இந்தியர்களுக்கும்..! - முழுவிபரம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com