‘விஜய் ஸ்பாய்லரா? வின்னரா?’ தேர்தலை ஒட்டிய சுற்றுப்பயணம்.. கட்சிகளின் நடவடிக்கைகள் ஒரு பார்வை..
சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், தனது சுற்றுப்பயணத்தை தொடங்க இருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. தேர்தலுக்கு இன்னும் 9 மாத கால இடைவெளி இருக்கும் நிலையில், பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மக்களைச் சந்திக்க தீவிரமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ஒரு பக்கம் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்று திமுக தேர்தல் பணிகளில் தீவிரம் காட்ட, மறு பக்கம் ‘மக்களை காப்போம்.. தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் சுற்றுப்பயணத்தை தொடங்க இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதே நேரம் அரசியலுக்கு புது வரவாக இருக்கும் விஜயும் விரைவில் மக்கள் சந்திப்பை தொடங்க இருக்கிறார். அரசியல் களம் அனல் பறக்கத் துவங்கியுள்ள இந்நேரத்தில், கட்சிகள் போடும் கணக்குகள் என்ன? அந்தக் கணக்குகள் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும்.. விரிவாகப் பார்க்கலாம்.
மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்
2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 9 மாதகாலம் மட்டுமே அவகாசம் இருக்கும்பட்சத்தில் அரசியல் கட்சிகள் மக்கள் சந்திப்பை தீவிரப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, ஜூலை 7ம் தேதி முதல் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். இதுதொடர்பாக அதிமுக தரப்பில் இருந்து வெளியான அறிவிப்பில், ‘மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் ஜூலை 7 முதல் ஜூலை 21 வரை முதற்கட்டமாக 21 மாவட்டங்களை உள்ளடக்கிய சுற்றுப்பயணத்தை எடப்பாடி தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் அமைப்பு ரீதியாக உள்ள இந்த மாவட்டங்களில் தொகுதி வாரியாக தொடர் பிரச்சார சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்டா முதல் குறி
மறுபக்கம் அரசியல் களத்தில் புதிய வரவான தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யும் மக்கள் சந்திப்பை திட்டமிட்டுள்ளார். அவர் தன்னுடைய முதல் சுற்று பயணத்தை ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதியில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. டெல்டாவில் இருந்து விஜய்யின் சுற்றுப்பயணம் தொடங்கும் வகையில் அட்டவணை உருவாக்கப்பட்டுள்ளதாகவும், முதற்கட்டமாக 100 தொகுதிகளில் அவரது சுற்றுப்பயணம் இருக்கும் என்றும் தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விஜயின் மக்கள் சந்திப்பு மற்றும் அக்கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஜூலை 4 ஆம் தேதி நடைபெறும் மாநில செயற்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஓரணியில் தமிழ்நாடு
எதிர்க்கட்சிகள் இப்படி என்றால் ஆளும் கட்சியான திமுகவும் மக்கள் சந்திப்பை தொடங்கியுள்ளது. ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொளி வாயிலாக இன்று நடைபெறுகிறது. இதன்படி, ஜூலை 3 ஆம் தேதி தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 68 ஆயிரம் வாக்குச்சாவடிகளிலும் உறுப்பினர் சேர்க்கை முகாம்களை வாக்குச்சாவடி முகவர்கள், தகவல் தொழில்நுட்பத்துறை முகவர்கள், துணை அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு வீட்டிலும் தலா10 நிமிடங்கள் அமர்ந்து வாக்காளர்களைச் சந்திப்பர். அவர்களை உறுப்பினர்களாகச் சேர்க்கும் பணியில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இபிஎஸ் குழப்பத்தை தெளிவுபடுத்த வேண்டும்
இந்நிலையில் அரசியல் கட்சிகளின் வியூகங்கள் எப்படி இருக்கும்... களத்தில் அவர்களுக்கான வரவேற்பு எப்படி இருக்கிறது என்பது குறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியனைத் தொடர்பு கொண்டு பேசினோம். அவர் கூறுகையில், “ஆளுங்கட்சியான திமுக, பூத் கமிட்டி அளவில் பொதுமக்களை சந்திக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக முதல்வர் இப்போதிலிருந்தே மக்களைச் சந்தித்து வருகிறார். சுமார் 30 சதவீத வாக்காளர்களை கட்சியின் உறுப்பினராக்க திட்டமிட்டு வருகின்றனர்.
அதே நேரம் எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். ஆனால், அவர் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நிலவும் குழப்பத்தை முதலில் களைய வேண்டும். வென்றால் நடக்கப்போவது அதிமுக ஆட்சியா? அல்லது தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சியா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். குறிப்பாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை மையப்படுத்தி மக்களைச் சந்திக்கிறாரா அல்லது அதிமுக ஆட்சி என்று கூறி சந்திக்கிறாரா என்பதை முதலில் அவர் தெளிவு படுத்த வேண்டும். ஆளும் கட்சியை விமர்சித்து வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று பிரச்சாரம் செய்தாலும், இந்த விளக்கம் அவசியமானது. ஏனென்றால், கூட்டணி ஆட்சி என்ற பாஜக தலைவர்களின் அறிவிப்பால், அதிமுகவினர் ஏற்கனவே குழப்பத்தில் உள்ளனர்.
விஜய் ஸ்பாய்லரா? வின்னரா?
அதே நேரத்தில், தவெக தலைவர் விஜயும் சுற்றுப்பயணத்தை முன்னெடுக்கிறார். அதிமுக, பாஜகவிடம், தவெக கூட்டணி சேருமா என்ற கேள்வி ஏற்கனவே எழுப்பப்படுகிறது. இந்த கூட்டணியில் அங்கம் வகிக்கப்போவதில்லை என்றால், இப்படி ஒரு கேள்வியே எழாத வகையில் தவெக தெளிவுபடுத்த வேண்டும்; உற்சவர்களான கட்சிக்காரர்களைத் தாண்டி, மூலவரான விஜய்யே இதை தெளிவுபடுத்த வேண்டும். முருகர் மாநாட்டில் பெரியாரை விமர்சித்ததற்கு அவர் பதிலடி கொடுக்க வேண்டும். இதை தெளிவுபடுத்தாமல் மக்கள் சந்திப்பை முன்னெடுப்பது பயனளிக்காது. இந்த தேர்தலில் விஜய் ஒரு ஸ்பாய்லராக இருப்பாரா அல்லது வெற்றிபெறுவாரா என்பதை மக்கள் சந்திப்பு உணர்த்தும்.
அதிமுகவும் சரி.. விஜய்யின் தவெகவும் சரி இந்த கேள்விகளை விளக்காமல் சுற்றுப்பயணம் செல்வது அவர்கள் எதிர்பார்க்கும் பலனை தராது. இதை தெளிபடுத்தினால், சுற்றுப்பயணம் நிச்சயம் அனைவருக்கும் மக்களிடம் சென்று சேர.. ஆதரவை பெற உதவியாக இருக்கும்” என்று தெரிவித்தார்.