ஈரான் மீதான தாக்குதல் ரத்து.. ட்ரம்பின் திடீர் மாற்றம்.. காரணம் என்ன?
அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து, ஈரான் மீது இதுவரை இல்லாத அளவிலான மிகப்பெரிய ராணுவத் தாக்குதலை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக ஆங்கில ஊடகங்கள் சமீபத்தில் செய்தி வெளியிட்டிருந்தன. ஏற்கனவே, மத்திய கிழக்கில் பதற்றம் நீடித்து வரும் நிலையில், இந்த புதிய தாக்குதல் நடைபெற்றால் வளைகுடாவில் முழுமையான போர் சூழல் உருவாகும் என கூறப்பட்டது. இந்தசூழலில் தான், ஈரான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் விடுத்த கோரிக்கையையடுத்து திட்டமிடப்பட்டிருந்த ராணுவ தாக்குதல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, தமது சமூக வலைதளமான ட்ரூத் சோஷியல் (Truth Social)-இல் பதிவிட்டுள்ள அமெரிக்க டிரம்ப், இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு பார்த்திராத அளவிலான ராணுவ வலிமை, அதிகாரம் மற்றும் ஆற்றலுடன் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா முற்றிலும் தயார் நிலையில் இருந்தது.
ஆனாலும், ஒரு ஒப்பந்தத்திற்கான அடிப்படை வரைமுறைகள் எட்டப்பட்டுள்ளதால் தாக்குதலை நிறுத்தி வைக்குமாறு ஈரான் மற்றும் இதர மத்திய கிழக்கு நாடுகள் அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்தன. இதன் அடிப்படையில் தாக்குதலை ரத்து செய்ய நான் ஒப்புக் கொண்டுள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, சர்வதேச கப்பல் போக்குவரத்திற்கு மிக முக்கிய பாதையான ஹார்மூஸ் நீரிணையை உடனடியாகவும் முழுமையாகவும் திறக்க வேண்டும் எனவும் ஈரானின் அணுசக்தி அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ள அவர், உலக நன்மைக்காகவும், ஈரானின் எதிர்கால செழிப்புக்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த உறுதிப்பாட்டில் இஸ்ரேல் நாடும் என்னுடன் இணைந்து செயல்படுகிறது எனத் தெரிவித்திருக்கிறார்.
சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் நேற்று (சனிக்கிழமையன்று) டிரம்புடன் தொலைபேசியில் பேசியிருந்தார். அப்போது, ஈரான் மீது அமெரிக்கா திட்டமிட்டிருந்த தாக்குதல் குறித்து கவலை தெரிவித்ததாக தகவல் வெளியாகியிருந்தது. இந்தச்சூழலில் தான், ஈரான் மீது நடத்தவிருந்த தாக்குதல்களை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.

