லட்சக்கணக்கில் படையெடுக்கும் அகதிகள்.. சுவர் எழுப்பி தடுக்கும் ஸ்பெயின்.. நெருக்கடியில் ஐரோப்பா!!
மொராக்கோவில் இருந்து ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் கடல் வழியாக சியூட்டா எல்லைக்குள் நுழைய முயன்றதில் இதுவரை குறைந்தது 67 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சட்டவிரோத கடல் வழி நுழைவுகளைத் தடுக்கும் நோக்கில், சியூட்டா (Ceuta) நகரின் கடல் பகுதியில் மிதக்கும் பாதுகாப்புத் தடுப்புகளை அமைக்கும் பணியில் ஸ்பெயின் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
வட ஆப்பிரிக்கக் கடற்கரையில் அமைந்துள்ள ஸ்பெயினின் சியூட்டா (Ceuta) நகரம், தற்போது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள முக்கிய எல்லைப் பகுதியாக மாறியுள்ளது.
கடந்த ஒரு வாரமாக, மொராக்கோவைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர், வறுமை, வேலையின்மை மற்றும் சிறந்த வாழ்க்கையைத் தேடும் நோக்கில் ஐரோப்பாவுக்குள் நுழைய முயன்று வருகின்றனர். இதற்காக, கடல் வழியாகவும், நீந்தியும், உயிரையே பணயம் வைத்து ஸ்பெயினின் சியூட்டா எல்லையைக் கடக்கும் ஆபத்தான முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
வெறும் 83 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட சியூட்டா நகருக்குள், இதுவரை 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எல்லையைக் கடந்து நுழைந்துள்ளதாகவும் 48 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மொராக்கோவிற்கே திருப்பி அனுப்பட்டுள்ளதாகவும் ஸ்பெயின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த ஆபத்தான பயணத்தின் போது இதுவரை 67 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சூழலில் தான், இந்த நெருக்கடியை கட்டுப்படுத்தும் நோக்கில், ஸ்பெயின் ராணுவமும், எல்லைப் பாதுகாப்புப் படையினரும் தீவிரமாக களமிறக்கப்பட்டுள்ளனர். அதன் ஒருபகுதியாக, ஸ்பெயின் அரசு தற்போது சியூட்டா கடற்கரையில் சுமார் 500 மீட்டர் நீளமுள்ள மிதக்கும் கடல் தடுப்பை அமைத்துள்ளது.
இந்த மிதக்கும் பாதுகாப்புத் தடுப்புகள், நீர்மட்டத்திற்கு மேலே 30 முதல் 70 சென்டிமீட்டர் உயரத்திலும், நீருக்குக் கீழே ஒரு மீட்டர் ஆழம் வரை நீளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
கடல் வழியாக சட்டவிரோதமாக எல்லையைக் கடக்கும் முயற்சிகளைத் தடுப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். அதே நேரத்தில், கடலோரக் காவல் மற்றும் பாதுகாப்புப் படைகளின் ரோந்துப் படகுகள் தடையின்றி இயங்கும் வகையில், தடுப்பின் நடுப்பகுதியில் சிறப்பு வழித்தடமும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மிதக்கும் தடுப்புகள் மூலம் கடல் வழி புலம்பெயர்வைக் கட்டுப்படுத்துவதோடு, எல்லைப் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தவும் ஸ்பெயின் அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கிடையில், ஐரோப்பிய ஒன்றியமும் அவசர ஆலோசனைகளை தொடங்கியுள்ளது. சியூட்டா எல்லையில் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடி, ஐரோப்பாவின் குடியேற்றக் கொள்கை மீதான விவாதத்தை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது. மனிதாபிமான பொறுப்புக்கும், எல்லைப் பாதுகாப்புக்கும் இடையே சமநிலையை எவ்வாறு ஏற்படுத்துவது என்பது தற்போது ஐரோப்பிய நாடுகளுக்கு மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது.

