அமெரிக்கா | வெளிநாட்டு மாணவர்களுக்கு சிக்கல்.. டிரம்ப் அரசின் புதிய நடவடிக்கை!!
அமெரிக்காவின் அதிபராக 2-வது முறை, டிரம்ப் பதவியேற்றதில் இருந்து குடியேற்ற விதிகள் மற்றும் விசா நடைமுறைகளில் பல்வேறு கெடுபிடிகளை விதித்து வருகிறார். அந்தவகையில் தான், வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கான விதிகளில் மாற்றத்தை கொண்டுவரும் புதிய திட்டத்தை டிரம்ப் நிர்வாகம் முன்மொழிந்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
அதாவது, அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள், படிப்பை முடித்த பிறகு தங்களது துறையில் பணியாற்றி அனுபவம் பெற உதவும் திட்டம்தான் OPT எனப்படும் ஆப்சனல் பிராக்டிகல் டிரெயினிங் (Optional Practical Training). குறிப்பாக STEM எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதப் பிரிவுகளில் படிக்கும் மாணவர்களுக்கு, கூடுதல் காலம் பணியாற்றும் வாய்ப்பும் இந்தத் திட்டத்தில் உள்ளது.
இந்நிலையில், OPT திட்டத்தின் கீழ் ஒரு சர்வதேச மாணவரை பணியமர்த்துவதற்கு, 500 அமெரிக்க டாலர் அதாவது, இந்திய மதிப்பில் சுமார், 48,000 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்தச்சூழலில் தான், இந்தத் திட்டத்தில் சேர்வதற்கான தொகையை 70 ஆயிரம் அமெரிக்க டாலராக உயர்த்த ட்ரம்ப் நிர்வாகம் முன்மொழிந்துள்ளது. இந்திய மதிப்பில் இது சுமார் 63 லட்சம் ரூபாய். மேலும், இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால், OPT-ஐ புதுப்பிக்கும்போது 30 ஆயிரம் டாலர், அதாவது சுமார் 27 லட்சம் ரூபாய் கட்டணம் விதிக்கப்படலாம்.
இந்த நடவடிக்கை OPT திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுப்பதற்கும், அமெரிக்க தொழிலாளர்களின் வேலைவாய்ப்பைப் பாதுகாப்பதற்கும் அவசியம் என அமெரிக்க நிர்வாகம் கூறுகிறது.
ஆனால், இந்த அதிகப்படியான கட்டணம் சர்வதேச மாணவர்களுக்கு கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தும் என்றும், அமெரிக்காவில் படிக்க விரும்பும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை பாதிக்கக்கூடும் என்றும் கல்வித்துறை அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன. அதேசமயம், இது வெறும் முன்மொழிவு மட்டுமே, இன்னும் நடைமுறைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

