\
Hormuz
HormuzAI

உயிரைப் பணயம் வைத்தால்.. ரூ.1 கோடி சம்பளம்.. 50 லட்சம் போனஸ் அள்ளிவீசும் நிறுவனங்கள்!

கப்பல் நிறுவனங்கள் பெரிய ஊதியத் தொகுப்புகளை வழங்கினாலும், சில சமயங்களில் அபாயப் பகுதி வழியாகக் கப்பல் செலுத்த விரும்பாத மாலுமிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது என்கிற குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது.
Published on: 
Summary

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிர போர்ப் பதற்றம் மற்றும் கடல்வழித் தாக்குதல்களுக்கு இடையே, உலகின் மிகவும் ஆபத்தான எரிசக்தி நெரிசல் மிகுந்த பகுதியான ஹார்முஸ் நீரிணையைக் (Strait of Hormuz) கடக்கும் எண்ணெய் டேங்கர் கப்பல் கேப்டன்களுக்கு மிகப்பெரிய தொகையைச் சம்பளமாக வழங்க கப்பல் நிறுவனங்கள் முன்வந்துள்ளன. மேலும், ஒவ்வொரு பயணத்துக்கும் போனஸைக் கொடுக்கவும் முன்வந்துள்ளன.

உலகின் மொத்த கச்சா எண்ணெய் மற்றும் திரவ இயற்கை எரிவாயு (LNG) போக்குவரத்தில் சுமார் 20% ஹார்முஸ் நீரிணை வழியாகவே நடைபெறுகிறது. ஈரானின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த நீரிணை, மத்திய கிழக்கில் நடைபெறும் தாக்குதலால் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அப்படி, தங்களுக்கு எதிரான கப்பல்கள் ஹார்முஸை நீரிணையைக் கடக்கும்பட்சத்தில் அதையும் தாக்கியும் வருகின்றன. அதேநேரத்தில், அந்த எண்ணெய்க் கப்பல்களைக் காக்கும் நோக்கில் அமெரிக்காவின் கப்பற்படையும் ஈடுபட்டுள்ளது. இதனால், இருதரப்பிலும் நாள்தோறும் பதற்றம் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே, அவ்வழியாக எண்ணெய்யை எடுத்துச் செல்ல ஒருசில நாட்டுக் கப்பல்களைத் தவிர பிற நாட்டுக் கப்பல்கள் அஞ்சுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், உயிரைப் பணயம் வைத்து கப்பல்களை இயக்கும் மாலுமிகளுக்கு அதிகபட்ச ஊதியம் வழங்க கப்பல் நிறுவனங்கள் முன்வந்துள்ளன.

hormuz
hormuzreuters

சாதாரண காலங்களில் எண்ணெய் டேங்கர் கப்பல் கேப்டன்களுக்கு மாதம் சுமார் $15,000 ( இந்திய மதிப்பில் ரூ.13 - 15 லட்சம்) சம்பளமாக வழங்கப்படும். ஆனால், தற்போது தாக்குதல் அபாயம் அதிகரித்துள்ளதால், அவர்களுக்கு மாதம் $100,000 (இந்திய மதிப்பில் ₹84 - ₹96 லட்சம்) வரை சம்பளம் வழங்கப்படுகிறது. ஆபத்தான ஹார்முஸ் நீரிணையைக் கடந்துசெல்லும் ஒவ்வொரு முறைக்கும் அடிப்படைச் சம்பளத்துடன் சேர்த்து கூடுதலாக $50,000 (சுமார் ₹42 - ₹50 லட்சம்) வரை ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது.

கேப்டன்கள் மட்டுமின்றி, அக்கப்பலில் பணிபுரியும் இதர மாலுமிகள் மற்றும் ஊழியர்களுக்கும் வழக்கமான ஊதியத்தைவிட 4 முதல் 6 மடங்கு வரை கூடுதல் ஊதியம் அளிக்கப்படுகிறது. மறுபுறம், கப்பல் நிறுவனங்கள் பெரிய ஊதியத் தொகுப்புகளை வழங்கினாலும், சில சமயங்களில் அபாயப் பகுதி வழியாகக் கப்பல் செலுத்த விரும்பாத மாலுமிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது என்கிற குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது.

boats in hormuz
boats in hormuz Reuters

பிப்ரவரி 28 அன்று ஈரான் போர் தொடங்குவதற்கு முன்பு, எண்ணெய்க் கப்பல்கள், எரிவாயு ஏற்றிச் செல்லும் கப்பல்கள், மொத்த சரக்குக் கப்பல்கள் மற்றும் கொள்கலன் கப்பல்கள் உட்பட தினமும் சுமார் 125 பெரிய வர்த்தகக் கப்பல்கள் இந்த நீர்வழிப்பாதை வழியாகக் கடந்துசென்ற நிலையில், அது வரவர குறைந்து வருவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, கடந்த அக்.6ஆம் தேதி 14 கப்பல்கள் கடந்த நிலையில், நேற்று அது 8ஆகக் குறைந்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com