பாலியல் வன்கொடுமை| என்னை ’கருணைக் கொலை’ பண்ணிடுங்க.. பெண் முடிவால் சோகத்தில் ஆழ்ந்த நாடு!
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த 25 வயது நோலியா காஸ்டிலோ ராமோஸ், காப்பகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பின்னர் தற்கொலை முயற்சியில் இடுப்புக்கு கீழ் செயலிழந்து கடும் வலியுடன் வாழ்ந்தார். தொடர்ந்த உடல், மன வேதனையால் கருணைக் கொலைக்கு நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார். தந்தை எதிர்ப்பை மீறி, ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் தனிநபர் முடிவை மதித்து கருணைக் கொலைக்கு அனுமதி அளித்தது.
ஸ்பெயின் நாட்டை சேர்ந்த 25 பெண் நோலியா காஸ்டிலோ ராமோஸ் (Noelia Castillo Ramos). ஸ்பெயினின் புகழ்பெற்ற பர்சிலோனா நகரை சேர்ந்த இவர், சிறுவயது முதலே மனநலப் பாதிப்புகளால் பாதிக்கப்பட்டிருந்தாக கூறப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக இவரின் பெற்றோர் இவரை ஒரு காப்பகத்தில் சேர்ந்துள்ளனர். ஆனால் கடந்த 2022-ஆம் ஆண்டு காப்பகத்தில் தங்கியிருந்தபோது அங்கு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். இதனால் கடுமையான மன உளைச்சல் அடைந்த இவர் ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
அதில் படுகாயமடைந்த அவருக்கு, இடுப்புக்கு கீழ் பக்கவாதம் ஏற்பட்டு உடல் செயலிழந்தது. மேலும் விபத்து காரணமாக ஏற்பட்ட உடல் வலியாலும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார்.
இந்த சூழலில் தான் உடல் மற்றும் மன வேதனையோடு தொடர்ந்து உயிர் வாழ விரும்பவில்லை என்றும், தன்னை கருணை கொலை செய்ய அனுமதிக்குமாறும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஸ்பெயினில் கருணை கொலை சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது என்றாலும், மகளின் கோரிக்கையை எதிர்த்து அவரின் தந்தை மேல்முறையீடு செய்தார்.
இதன் காரணமாக இவரின் வழக்கு இறுதியாக ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டது. அங்கு தொடர்ந்து விசாரணை நடைபெற்ற நிலையில், ஒரு மனிதன் தனது வாழ்க்கையைத் தொடரலாமா அல்லது வேண்டாமா என்பதைத் தீர்மானிக்கும் இறுதி அதிகாரம் அந்தத் தனிநபருக்கே உண்டு என்பதை நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. மேலும் நோலியா அனுபவித்து வந்த தாங்க முடியாத உடல் மற்றும் மன ரீதியான வலியை கருத்தில் கொண்டு, அவர் சுயநினைவோடு எடுத்த இந்த முடிவை அனைவரும் மதிக்க வேண்டும் என்று கூறி, அவரை கருணை கொலை செய்ய அனுமதி வழங்கியது.
அதனைத் தொடர்ந்து அவர், கருணை கொலை செய்ய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதலில் அவருக்கு வீரியமான மயக்க மருந்து செலுத்தப்பட்டு, அவர் வலியை உணரமுடியாத ஆழ்ந்த உறக்க நிலைக்குச் கொண்டுசெல்லப்பட்டார்.
அதன் பின்னர் அவரின் இதயத் துடிப்பு மற்றும் சுவாச மண்டலத்தைச் செயலிழக்கும் மருந்துகள் அவருக்கு செலுத்தப்பட்ட நிலையில், உறக்க நிலையிலேயே நோலியா உயிரிழந்தார். அவர் தனது மரணத்திற்கு சில நாட்களுக்கு முன் அளித்த பேட்டியில், நான் யாருக்கும் முன்மாதிரியாக இருக்க விரும்பவில்லை என்றும், அமைதியாக இந்த உலகை விட்டு போக விரும்புகிறேன் என்றும் உருக்கமாகத் தெரிவித்திருந்தார். இந்த செய்தி ஊடகங்களில் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..

