இந்தியாவின் முதல் கருணைக் கொலை : மகனுக்கு பிரியாவிடை கொடுத்த பெற்றோர்.. உருகவைக்கும் வீடியோ!
உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியை சேர்ந்தவர் ஹரிஷ் ரானா. இவர் கடந்த 2013-ம் ஆண்டு தங்கும் விடுதியில் தங்கியிருந்தபோது நான்காவது மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார். தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அவரது மூளை நிரந்தரமாக சேதமடைந்தது. அதோடு விபத்து நடந்த சிறிது நேரத்திலேயே, அவரது உடல் செயலிழந்து, அவர் ஆழ்ந்த கோமா நிலைக்குச் சென்றார். அதிலிருந்து 13 ஆண்டுகள் உயிர்காக்கும் கருவிகள் பொருத்தப்பட்ட நிலையில், மருத்துவ ரீதியில் உணவும், நீரூட்டமும் அளிக்கப்பட்டு வந்துள்ளது. சுய நினைவுக்கு திரும்பாமல் கோமா நிலையிலேயே அவர் தொடர்ந்து இருந்து வந்த நிலையில் என்றாவது ஒரு நாள் அவர் மீண்டு வருவார் என அவரின் பெற்றோர் அவரை தொடர்ந்து கவனித்து வந்துள்ளனர்.
ஆனால், ஒரு கட்டத்தில் அவர்களின் நம்பிக்கை குறைந்த நிலையில், அவர்கள் தனது மகனுக்கு இயற்கை மரணத்தை அளிக்க விரும்பி அவரை கருணைக் கொலை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, கே.வி.விஸ்வநாதன் அடங்கிய அமர்வு விசாரித்தது.
கோமா நிலையில் உள்ள ஹரிஷ்க்கு தொடர்ச்சியான சிகிச்சைகளை அளித்தபோதிலும், அவர் குணமடைந்து, சுயநினைவை எட்ட சாத்தியக்கூறுகள் குறைவு என மருத்துவர்கள் தங்கள் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.
அதனைத் தொடர்ந்து ஹரிஷ் ரானாவை சிவ் யூதனேசியா என்று அழைக்கப்படும் கருணை கொலை செய்ய நீதிபதிகள் அனுமதி அளித்தனர். இந்த தீர்ப்பின் படி ஹரிஷ் ரானா டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு அவருக்கு அளிக்கப்பட்டு வந்த உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்கள் அகற்றப்படும்.
மேலும், அவருக்கு உணவு குழாய் மூலம் அளிக்கப்பட்டு வந்த உணவும் நிறுத்தப்படும். அதே நேரம் அவருக்கு அடிப்படை மருத்துவம் மட்டும் தொடர்ந்து வழங்கப்படும். எனினும் ஹரிஷ் ரானாவின் உயிர் உடனே பிரியாது என்றும், உணவு, உயிர்காக்கும் கருவிகள் நீக்கப்பட்டதால் இயற்கையான முறையில் அவர் எப்போது வேண்டுமானாலும் மரணமடையலாம் என்றும் மருத்துவர்கள் சார்பில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே உயிர்காக்கும் கருவிகள் அகற்றப்பட்டு , தங்கள் மகனுக்கு அவரின் தாய் பிரியாவிடை கொடுக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

