கி.மு. 384இல் நடந்த சந்திர கிரகணம்.. வரலாற்றை மாற்றிய தருணம்! அரிஸ்டாட்டிலின் அறிவியல் அற்புதம்
பால வெற்றிவேல்
சந்திர கிரகணம் என்பது வானியல் நிகழ்வாக மட்டுமல்ல. நாம் வாழும் பூமியின் வடிவத்தை அறிந்துகொள்வதற்கும் அதுதான் உதவியது. விண்வெளிக்குச் செல்லாமலேயே கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே சந்திர கிரணத்தை வைத்து அரிஸ்டாட்டில் பூமியின் வடிவத்தை எப்படி கண்டுபிடித்தார் தெரியுமா?...
நீளமான சந்திர கிரகணம் இன்று இரவு 9:46 மணிக்கு இந்தியாவில் தோன்றுகிறது. மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தியாவில் சுமார் 82 நிமிடங்கள் முழு சந்திர கிரகணமாக காட்சியளிக்க உள்ள வானியல் நிகழ்வை பார்ப்பதற்காக நாடு முழுவதும் உள்ள அறிவியலாளர்கள், மாணவர்கள் ஆர்வத்தோடு இருக்கிறார்கள். சூரிய ஒளியை பூமி மறைத்து சந்திரனில் நிழல் விழும் இந்த சந்திர கிரகணம்தான் பூமி கோள வடிவமானது என்பதை மனிதர்கள் தெரிந்து கொள்வதற்கு வாய்ப்பாக அமைந்திருந்தது என்பதை உங்களால் நம்ப முடிகிறதா?...
ஆம், இப்போது இருக்கும் இஸ்ரோ, நாசா, Roscosmos, JAXA ஆகியவற்றின் செயல்பாடுகளை இன்றைக்கு நாம் பார்க்கிறோம். ஆனால், வானில் என்ன இருக்கிறது என்பதை அறியாத 4000 வருடங்களுக்கு முந்தைய உலகில் வாழ்ந்த மக்கள், வானியலை மதங்கள் மற்றும் சாஸ்திரத்தின் அடிப்படையில் கணித்தனர். அதன் காரணமாகவோ என்னவோ எகிப்து, கிரேக்கம், மொசபடோனியா, ஹரப்பா உள்ளிட்ட நாகரீகங்களைச் சேர்ந்த மக்களும், பண்டைய மதங்களும் பூமி தட்டையானது என்றும் பூமியை மையமாகக் கொண்டுதான் சூரியன், சந்திரன் உள்ளிட்டவை சுற்றி வருவதாக பெரும்பாலும் நம்பி வந்தன. ஆனால் எதையும் பகுத்தறிந்து கேள்வி கேட்க வேண்டும் என்கிற சாக்ரடீசின் வழி வந்த அறிஞர் அரிஸ்டாட்டில், பூமி உண்மையிலேயே மதங்கள் கூறுவது போல தட்டையானதா அல்லது வட்ட வடிவமானதா? வடிவமா என்பதை கண்டறிவதற்காக பல முயற்சிகள் மேற்கொண்டிருக்கிறார். அதன் இறுதியில் அவர் எண்ணத்தில் உதித்ததுதான் சந்திர கிரகணத்தை சோதனையிடுவது.
எப்படி என்றுதானே கேட்கிறீர்கள். ஒன்றும் பெரிதாக இல்லை. ஆனால் சிறுசிறு பொருட்களை வைத்து தனது கண்டுபிடிப்பை நிகழ்த்தியிருக்கிறார் அரிஸ்டாட்டில். இன்றைய நாளை போலவே அன்றொரு நாள், அதாவது அரிஸ்டாட்டில் வாழ்ந்த 2,300 ஆண்டுகளுக்கும் முந்தைய கி.மு. 384இல், ஒரு சந்திர கிரகண நாளில் பூமியின் நிழல் சந்திரனை மறைப்பதை அரிஸ்டாட்டில் கவனித்துள்ளார். பூமி ஒருவேளை தட்டையாகவோ அல்லது வட்ட வடிவமாகவோ இருந்தால், பூமியின் நிழல் சந்திரன் மீது நீள் வட்டமாகவோ அல்லது குறு வட்டமாகவோ தானே தெரிந்திருக்க வேண்டும்?. சரி இதை சோதனையிட்டு பார்ப்போம் என உடனே தனது ஆய்வகத்திற்கு சென்று ஒரு பந்தை எடுத்து அதை மெழுகுவர்த்தியின் ஒளிக்கு அருகில் காட்டியிருக்கிறார். அப்போதுதான் அவருக்கு தெரியவந்தது பூமி தட்டை அல்ல. கோள வடிவமானது என்பது. ஆனால் பூமி கோள வடிவத்தில் இருப்பதால்தான் பூமியின் நிழல் சந்திரனில் வட்டமாக தெரிகிறது என்று.
வெறும் பந்தை வைத்து பூமியின் வடிவத்தை தீர்மானிக்க முடியாதல்லவா?... எனவே மற்றொரு நாளில் கிரேக்கத்தில் வேறொரு ஊரில் இருந்து அதே சந்திர கிரகணத்தை பார்க்கும் போதும் பூமியின் வட்ட வடிவ நிழல்தான் சந்திரன் மீது விழுகிறது என்பதை உறுதி செய்திருக்கிறார். அதன் பின்னர் கப்பல் கடலில் இருந்து வரும் போது அதன் கொடி மற்றும் பாய் மரப்பகுதி நிலத்திலிருந்து முதலில் தெரிவதும் அதன் பின்னால் கப்பல் வர வர அதன் முழு உருவமும் தெரிவதுமாக இருந்துள்ளது. எனவே பூமி கோள வடிவம் ஆனதுதான் என்பதை உறுதிப்படுத்துகிறார். எப்படியோ இன்று இளஞ்சிவப்பு நிறத்தில் பூமியின் நிழல் சந்திரன் மீது விழும் இந்த நிகழ்வு பூமியின் தோற்றம் குறித்த உண்மையை மனிதர்களுக்கு விளக்கிய ஒரு அற்புத நிகழ்வாகவே இந்த சந்திர கிரகணம் இருந்தது என்பது எத்தனை அறிய நிகழ்வாக இருக்கிறது. ஆம் இதை அறிவியல் நிகழ்வு என்றும் சொல்லலாம்.