நயினாரை சுற்றி NDA அரசியல்.. பாஜகவின் கணக்கு கூட்டணிக்கு கைகொடுக்குமா? TTV மோதலுக்கு காரணம் என்ன?
பாஜக கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேற வேண்டுமென திட்டமிட்டே செயல்பட்டார் நயினார் நாகேந்திரன் என அனலைக் கக்கியிருக்கிறார் டிடிவி தினகரன். நயினார் நாகேந்திரன் செலக்டிவ் அம்னிஷியாவில் இருக்கிறார்; ஆணவத்தில் ஆடுகிறார்; அகம்பாவத்தில் பேசுகிறார் எனப் பழனிசாமி மீதுள்ள கோபத்தை விடவும் பெரும் கோபத்தை நயினார் மீது கொட்டியிருக்கிறார் தினகரன். என்னவெல்லாம் காரணம்? அரசியல் தளத்தில் பேசப்படும் விஷயங்கள் இவைதான்!
அதிமுக – பாஜக கூட்டணி முறிவுக்கு முக்கியமான காரணங்களில் ஒன்று, பழனிசாமிக்கும் அண்ணாமலைக்கும் இடையிலான யுத்தம் என்பது ஊர் அறிந்த கதை. இதன் தொடர்ச்சியாகவே பன்னீர்செல்வம், தினகரனை பாஜக கூட்டணி நோக்கி அழைத்து வந்தார் அண்ணாமலை. ஆக, பன்னீர்செல்வம், தினகரன் இவர்கள் இருவருக்கும் பாஜகவில் தூதர்போல செயல்படுகிறார் அண்ணாமலை என்ற எண்ணம் பழனிசாமிக்கு எப்போதுமே உண்டு. பாஜக மாநிலத் தலைமை பதவியிலிருந்து அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்ற அதிமுகவின் எண்ணத்துக்கு இதுவும் ஒரு காரணம். இத்தகு சூழலில்தான் பாஜக தலைமை பதவிக்கு நயினார் கொண்டு வரப்பட்டார். விளைவாக நயினார் வந்ததுமே பழனிசாமி – பாஜக இடையே ஓர் இணக்கம் வந்தது. அதேசமயம், பன்னீர்செல்வம், தினகரன் இருவருக்கும் பாஜகவுடனான பழைய அணுக்கம் தகர்ந்தது.
சோழர் கொண்டாட்டத்துக்காக பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது, இது வெட்ட வெளிச்சம் ஆனது. பழனிசாமி –பன்னீர்செல்வம் இருவருமே மோடியைச் சந்திக்க விரும்பினார்கள். ஆனால், பிரதமர் பயணத் திட்டத்திலோ இருவருக்குமே இடம் அளிக்க நேரம் இல்லை. இப்படிப்பட்ட சூழல்களின்போது, விமான நிலையத்தில் மோடியை வரவேற்க ஒருவர்; வழியனுப்ப ஒருவர் என்று வாய்ப்பளிப்பது பாஜகவின் வழக்கம். இந்த முறையும் அப்படித்தான் திட்டமிடப்பட்டது. ஆனால், மோடியை பன்னீர்செல்வம் சந்திப்பதை பழனிசாமி விரும்பவில்லை. இது மேலிடத்துக்குக் கடத்தப்பட்டது. விளைவாக, பழனிசாமி வரவேற்க வந்தார்; ஆனால், வழியனுப்ப பன்னீர்செல்வத்துக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. நயினார் நாகேந்திரன்தான் இதன் பின்னணியில் இருந்தார் என்றே பன்னீர்செல்வமும் தினகரனும் நம்புகிறார்கள். அந்தசமயத்தில், டெல்லி பாஜகவிடம் பேசுவதற்காக, மாநிலத் தலைமையில் உள்ள நயினாரை 6 முறை அழைத்தும், குறுஞ்செய்தி அனுப்பியும் அவரிடமிருந்து எந்த எதிர்வினையும் இல்லை என, செல்பேசியையே காட்டி அதிருப்தியை வெளிப்படுத்தினார் பன்னீர்செல்வம்.
இதை தனக்கு இழைக்கப்பட்ட அவமானமாக பன்னீர்செல்வம் கருதினார். விரைவில் கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தார். கிட்டத்தட்ட இதேநிலைதான் தினகரனுக்கும்... பிரதமர் மோடி ஏப்ரலில் பாம்பன் வந்தபோதும் ஜூலையில் கங்கைகொண்ட சோழபுரம் வந்தபோதும் கூட்டணியில் உள்ள தனக்கு அழைப்பு வருமென எதிர்பார்த்தார். அழைக்கப்படவில்லை. ஆகஸ்ட் 30 அன்று சென்னையில் மூப்பனாரின் நினைவிடத்தில் நடந்தது, நினைவு தின நிகழ்ச்சி என்றாலும், பாஜகவினர், தங்கள் கூட்டணி நிகழ்ச்சியாகவே ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சிக்கும் அழைக்கப்படாததால் கடும் அதிருப்திக்கு ஆளானார் தினகரன். தொடர்ந்து தினகரனும் வெளியேறினார்.
பன்னீர்செல்வம், தினகரன் இருவருடைய வெளியேற்றத்தையுமே அண்ணாமலை விரும்பவில்லை. இருவருக்கும் செல்பேசியில் அழைத்துப் பேசி, முடிவை மறுபரிசீலிக்குமாறு கேட்டுக்கொண்டதோடு, பொதுவெளியிலும் இதை வெளிப்படுத்தினார் அண்ணாமலை.
நயினார் நாகேந்திரன் ஏற்கனவே, அதிமுகவில் இருந்தவர். எம்ஜிஆர் மறைவுக்குப் பின் கட்சியை முழுமையாக ஜெயலலிதா கையில் எடுத்த 1989இல் அதிமுகவில் அடியெடுத்து வைத்தவர் நயினார். 2001இல் முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினரானவர் அப்போதே அமைச்சராகவும் ஆக்கப்பட்டார். இதற்குபின் 2011, 2016 இருமுறை அதிமுக ஆட்சியமைத்த காலகட்டங்களிலும் நயினாரும் சட்டமன்ற உறுப்பினர் ஆனார். ஆனால், அமைச்சர் ஆகவில்லை. நயினாருக்கு கிடைத்த வாய்ப்புகள், கிடைக்காத வாய்ப்புகள் இரண்டுக்குமே சசிகலா குடும்பமும் ஒருகாரணம் என்று சொல்வோர் உண்டு. இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என்றாலும், முக்குலத்தோர் வட்டத்துக்குள் வருபவர்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. எதுவாயினும் சசிகலா குடும்பத்தினரின் கீழ் தொடர்ந்து நீடிக்க நயினார் விரும்பவில்லை என்று சொல்லலாம். அதனால்தான், 2016இல் ஜெயலலிதா இறக்க, அடுத்த ஓராண்டிலேயே பாஜக நோக்கி நகர்ந்துவிட்டார் நயினார்
பாஜக மாநிலத் தலைவர் பதவியில் இப்போது நயினார் அமர்த்தப்பட்டதன் பின்னணியில், டெல்லிக்கு இருகணக்குகள் உண்டு. முதலாவது, அண்ணாமலை மாதிரியில்லாமல், பழனிசாமியுடன் இணக்கத்தை பராமரிக்க வேண்டும்; இரண்டாவது, அதிமுகவில் பழனிசாமி – பன்னீர்செல்வம் இடையில் விழுந்த விரிசலின் விளைவாக முக்குலத்தோர் சமூக வட்டத்துக்குள் உருவாகியுள்ள சரிவை ஈடுகட்ட வேண்டும். தனித்து செயல்பட்டால், எப்படியும் பன்னீர்செல்வம் – தினகரன் அணி 4 சதவீதம் வரை ஓட்டுகளை பிரிக்கலாம் என்று கணக்கிடுகிறது பாஜக டெல்லி தலைமை. கூட்டணியில் பன்னீர்செல்வம், தினகரன் இல்லையென்றாலும், இந்த ஓட்டுகளை தன் முகத்தைக் காட்டி பாஜக கூட்டணிக்குள் கொண்டுவரும் பொறுப்பு நயினார் முன் இருக்கிறது. பன்னீர்செல்வம், தினகரனுக்கும் சரி; நயினாருக்கும் சரி; தென் தமிழகம்தான் ஆதரவு களம். அங்கே யார் பெரியாள் என்ற பனிப்போரும் இந்த ஆட்டத்தில் உள்ளுறையாக இருக்கிறது. டெல்லியின் வியூகமும் அதுதான்! இத்தகு பின்னணியில்தான் இரு தரப்புக்கும் இடையிலான யுத்தத்தைப் பார்க்க வேண்டியிருக்கிறது என்கிறார்கள் பழைய கதைகளை அறிந்தவர்கள்!