பதவிகளைப் பறித்த நிலையில், செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்காதது ஏன்?
அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களை மீண்டும் இணைக்க கட்சித் தலைமைக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 10 நாட்கள் கெடுவிதித்திருந்தார். இல்லையெனில் அனைவரையும் ஒருங்கிணைக்கும் பணியை தாம் தொடரப் போவதாகவும் அவர் கூறியிருந்தார்.
செங்கோட்டையன் அதிமுக தலைமை மீது கடும் அதிருப்தியில் இருப்பது இதன்மூலம் உறுதியான நிலையில், அடுத்தக்கட்டம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி திண்டுக்கலில் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். ஆலோசனைக்கு பிறகு அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், கட்சியின் அமைப்பு செயலாளர் பொறுப்பு, ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையன் விடுவிக்கப்படுவதாக தெரிவித்திருந்தார். இதேபோன்று, ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தில் கட்சி பொறுப்பில் இருக்கும் செங்கோட்டையனின் ஆதரவாளர்களின் பதவிகளும் பறிக்கப்பட்டன. தனது பதவி நீக்கம் விவகாரம் தொடர்பாக பேசிய செங்கோட்டையன், அதனை எதிர்பார்க்கவில்லை எனவும், ஜனநாயக முறைப்படி தனது கருத்தைகேட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டுமெனவும் தெரித்திருந்தார்.
ஆனால், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அவரை நீக்கவில்லை. இதற்கு காரணம், கோபிச்செட்டி பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக செங்கோட்டையன் இருப்பதே... ஒரு சட்டமன்ற உறுப்பினர், அவர் சார்ந்த கட்சியில் இருந்து நீக்கப்பட்டாலும், சட்டசபையில் ஒரு சுயேச்சை உறுப்பினராக கூட செயல்பட முடியும். ஆனால், அதே எம்எல்ஏ தானாகவே கட்சியை விட்டு விலகினால், அதையே காரணமாக கொண்டு, சபாநாயகரிடம் புகார் அளித்து அவரது பதவியை பறிக்ககட்சிக்கு அதிகாரம் உள்ளது. இந்த சட்டப்பின்னணியை கருத்தில் கொண்டே, செங்கோட்டையனின் கட்சி பதவிகளை மட்டும் பறித்த பழனிசாமி, அவரை கட்சியில் நீக்கவில்லை என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.