''உங்களது காரை இடித்தது என் பள்ளி வேன்'' - வைரலான பள்ளிக்குழந்தையின் குறிப்பு!
''உங்களது காரை இடித்தது என் பள்ளி வேன்'' தான் என்று குறிப்பெழுதி வைத்த பள்ளிக்குழந்தையின் குறிப்பு இணையத்தில் ஹிட் அடித்துள்ளது.
நிறுத்தப்பட்டிருக்கும் காரை யாராவது இடித்து சென்றுவிடுவது பொதுவான ஒன்று. இடித்தது யார் என்று தெரியாமல் காரின் உரிமையாளர்களும் கடந்து சென்றுவிடுவர். ஆனால் அமெரிக்காவில் இடிக்கப்பட்ட காருக்கு அருகே வைக்கப்பட்ட குறிப்பில் காரை இடித்தது யார்? எப்படி இடித்தது? உள்ளிட்ட அனைத்து தகவல்களும் எழுதப்பட்டிருந்தது. பள்ளிக்குழந்தை எழுதி வைத்த அந்த குறிப்பு தற்போது வைரலாகியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஆண்டிரிவ், தனது கார் ஓரம் இடிக்கப்பட்டு நெளிந்துள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அருகில் சென்று பார்த்த போது காகிதத்தில் எழுதப்பட்ட குறிப்பு ஒன்று இருந்துள்ளது. அந்த குறிப்பை எழுதியது ஒரு பள்ளிக்குழந்தை என்பது அந்த எழுத்து நடையிலேயே தெரிகிறது. ஆண்டிரிவ் தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த குறிப்பை பகிர அது தற்போது வைரலாக பரவியுள்ளது.
அந்த குறிப்பில், ''உங்கள் காருக்கு என்ன நடந்தது தெரியுமா? 449 எண்ணையுடைய பேருந்து உங்களது காரை இடித்தது. அந்த பேருந்து என்னை தினமும் மாலை 5 மணிக்கு இங்கே அழைத்துவரும். பேருந்தை வெளியே எடுக்கையில் உங்கள் காரை அவர் (ஓட்டுநர்) இடித்துவிட்டார். அவர் தப்பிவிட்டார். நான் நடந்ததை பார்த்துக்கொண்டு இருந்தேன் ''என்று அந்த குறிப்பில் குழந்தைகளுக்கே உரிய எழுத்துநடையில் எழுதி இருந்தது. அதுமட்டுமல்லாமல் அருகே பேருந்தின் படம் வரையப்பட்டு பேருந்தில் ஜன்னல் வழியாக மாணவர்கள் அதிர்ச்சி அடைவது போன்ற முகபாவங்களும் வரையப்பட்டுள்ளது.
Read Also -> மீ டூ விவகாரம்: நடிகர் மோகன்லாலை சாடிய ரேவதி!
இந்த குறிப்பை ட்விட்டரில் பகிறும் பலரும் இந்த குறிப்பை எழுதிய குழந்தை மிகப்பெரிய ஓவியனாக வருவார். காரை பேருந்து இடித்தபோது மாணவர்கள் அதிர்ச்சியில் வேடிக்கை பார்த்துள்ளனர். அந்த ஓவியத்தில் மாணவர்களின் அதிர்ச்சி முகமும் பேருந்து ஜன்னலில் தெரிகிறது என்று நகைச்சுவையாக தெரிவித்து வருகின்றனர்.