அதிபரைத் தொடர்ந்து இடைக்கால அதிபரும் பதவி நீக்கம்.. தென்கொரியாவில் என்னதான் நடக்கிறது?
தென்கொரியாவின் அதிபரான யூன் சுக் இயோல், கடந்த டிசம்பர் 3ஆம் தேதி, நாட்டுமக்களிடம் உரையாற்றியபோது, அவசரநிலை ராணுவச் சட்டத்தை அமல்படுத்துவதாக அறிவித்தார். அரசின் இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்தன. பெரிய அளவில் போராட்டங்களும் நடந்தன. தொடர்ந்து, இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி தேசிய சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, அந்த அறிவிப்பை அதிபர் திரும்பப் பெற்றார்.
என்றாலும் இதுதொடர்பாக, தென்கொரிய அதிபரை பதவிநீக்கம் செய்யும் தீர்மானத்தை அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தன. ஆனால் அது தோல்வியில் முடிந்ததை அடுத்து, யூன் சுக் இயோல் அதிபர் பதவியில் நீடித்தார். ஆனாலும், விடாத எதிர்க்கட்சிகள் மீண்டும் ஒரு தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தன.
இதன் வாக்கெடுப்பு கடந்த டிசம்பர் 14ஆம் தேதி நடைபெற்றது. அதன்படி, நாடாளுமன்ற வாக்கெடுப்பில் மொத்தமுள்ள 300 உறுப்பினர்களில் 204 பேர் அவருக்கு எதிராகவே வாக்களித்தனர். இதையடுத்து, அவரை பதவிநீக்கம் செய்ய ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து யூன் சுக் இயோல், தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, புதிய அதிபரை தேர்ந்தெடுக்கும் வரை அந்நாட்டின் பிரதமர் ஹான் டக்-சூ அதிபருக்கான அதிகாரம் வழங்கப்பட்டது. அவரே இடைகால அதிபராகவும் செயல்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே தென்கொரிய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ள நிலையில், இடைக்கால அதிபராக நியமிக்கப்பட்டுள்ள ஹான் டக்-சூவை பதவிநீக்கம் செய்யும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த தீர்மானம் 192-0 என்ற அடிப்படையில் அதிகபட்ச ஆதரவை பெற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆளுங்கட்சி எம்.பி.க்கள் வாக்கெடுப்பை புறக்கணித்தனர். இதன்படி இடைக்கால அதிபர் ஹான் டக்-சூ பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் அதிபர் யூன் சுக் இயோல் குற்றச்சாட்டு விசாரணைக்காக ஒன்பது பேர் கொண்ட பெஞ்சில் காலியாக உள்ள மூன்று அரசியலமைப்பு நீதிமன்ற நீதிபதிகளின் நியமனத்திற்கு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளிக்க மறுத்ததை அடுத்து ஹானின் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளது. நாட்டில் இடைக்கால அதிபர் ஒருவருக்கு எதிராக பதவி நீக்கத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு, தேசிய சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படுவது இதுவே முதல் முறையாகும். இதையடுத்து, பொருளாதார விவகாரங்களுக்கான துணைப் பிரதமராக இரட்டைப் பதவி வகிக்கும் பொருளாதாரம் மற்றும் நிதி அமைச்சர் சோய் சாங்-மோக், தற்காலிக அதிபராக பதவியேற்கவுள்ளார்.