அதிபரின் பதவி நீக்கம்.. எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த தீர்மானம்.. தென்கொரியா அரசியலில் அடுத்த திருப்பம்
அவசர ராணுவச் சட்டம் கொண்டுவந்த அதிபர்
கொரிய தீபகற்பத்தில் இரு நாடுகளுக்கு இடையே எல்லைப் பிரச்னை நீண்டகாலமாக நீடித்துவரும் நிலையில் வடகொரியா, தொடந்து அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் தென்கொரியா அதிபா் யூன் சுக் இயோல் பதவியிலிருந்து நீக்கப்படுவதாக அந்நாட்டு நாடாளுமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்கொரியாவின் அதிபரான யூன் சுக் இயோல், கடந்த டிசம்பர் 3ஆம் தேதி, நாட்டுமக்களிடம் உரையாற்றியபோது, அவசரநிலை ராணுவச் சட்டத்தை அமல்படுத்துவதாக அறிவித்தார். ”வடகொரியாவின் கம்யூனிஸ்ட் படைகளின் அச்சுறுத்தல்களிலிருந்து தென்கொரியாவை பாதுகாக்கவும் உள்நாட்டில் தேச விரோத சக்திகளை ஒழிக்கவும், அவசரகால ராணுவ சட்டத்தை பிரகடனப்படுத்துகிறேன்” எனத் தெரிவித்தார். இந்த அறிவிப்பு வெளியானதும் தென்கொரியாவின் நாணயம் மதிப்பு கடும் வீழ்ச்சி கண்டது. அதேநேரத்தில், அரசின் இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்தன. ராணுவ சட்ட அமலுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றம் முன்பாக ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேபோல், மக்கள் பிரதிநிதிகளும் இந்த உத்தரவைத் திரும்பப் பெற வலியுறுத்தி வாக்களித்தனர். சட்டத்தைத் திரும்பப் பெற தேசிய சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மொத்தமுள்ள 300 பேரில் 190 பேர் தீர்மானத்திற்கு ஆதரவு அளித்தனர். இதையடுத்து, அந்த அறிவிப்பை அதிபர் திரும்பப் பெற்றார்.
அதிபரை பதவிநீக்கம் செய்ய தீர்மானம்
அதேநேரத்தில், தென்கொரிய அதிபரை பதவிநீக்கம் செய்யும் தீர்மானத்தை அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தன. இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 6ஆம் தேதி நடைபெற்றது. அப்போது நாடாளுமன்றத்தில் உள்ள, 300 எம்பிக்களில், எதிர்க்கட்சிகளின் சார்பில், 192 பேர் வாக்கெடுப்பில் பங்கேற்றனர். ஆளும் கட்சியில் மூன்று பேர் மட்டுமே பங்கேற்ற நிலையில், மற்றவர்கள் புறக்கணித்தனர். இதனால், ஓட்டுகள் எண்ணப்படாமல், தீர்மானம் நிராகரிக்கப்பட்டது. இதனால், பதவி நீக்கும் தீர்மானம் தோல்வியில் முடிந்தது. அதாவது, அந்நாட்டில், 200 பேரின் ஆதரவு தெரிவித்தால் மட்டுமே தீர்மானம் நிறைவேறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து ’நாடாளுமன்றத்தையும் பொதுமக்களையும் அச்சுறுத்தும் விதத்தில் வன்முறையை தூண்டும் விதத்தில் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அதிபரை பதவி நீக்கம் செய்யக்கோரி மீண்டும் ஒரு தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்தன. இதன் வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. அதன்படி, நாடாளுமன்ற வாக்கெடுப்பில் மொத்தமுள்ள 300 உறுப்பினர்களில் 204 பேர் அவருக்கு எதிரகவே வாக்களித்தனர். இதையடுத்து, அவரை பதவிநீக்கம் செய்ய ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இடைகால அதிபராக ஹான் டக்-சூ
முன்னதாக, தென் கொரியாவில் அவசரநிலை ராணுவச் சட்டத்தை அமல்படுத்துவதாக யூன் சுக் இயோல் கடந்த 3-ஆம் தேதி அறிவித்து பெரும் அதிா்வலையை ஏற்படுத்தியதே அவரது பதவி நீக்கத்துக்கான முக்கிய காரணமாக அமைந்துள்ளது. நாடாளுமன்றத்தையும் பொதுமக்களையும் அச்சுறுத்தும் விதத்தில் வன்முறையை தூண்டும் விதத்தில் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அதிபருக்கு எதிராக வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட பதவி நீக்கத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், புதிய அதிபரை தேர்ந்தெடுக்கும் வரை அந்நாட்டின் பிரதமர் ஹான் டக்-சூ அதிபருக்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அவரே இடைகால அதிபராகவும் செயல்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ”இப்போதைய அரசியல் சூழலில் தன்னிடமிருந்து அதிபர் பதவி பறிக்கப்பட்டாலும், அரசியலில் தொடர்ந்து இருப்பேன்” என பதவி விலகியுள்ள யூன் சுக் இயோல் தெரிவித்துள்ளார்.