தென்கொரியா: அதிபர் பதவிநீக்கத்தைத் தொடர்ந்து ஆளும்கட்சித் தலைவரும் ராஜினாமா!
தென்கொரியாவின் அதிபரான யூன் சுக் இயோல், கடந்த டிசம்பர் 3ஆம் தேதி, நாட்டுமக்களிடம் உரையாற்றியபோது, அவசரநிலை ராணுவச் சட்டத்தை அமல்படுத்துவதாக அறிவித்தார். அரசின் இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்தன.
தொடர்ந்து, இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி தேசிய சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, அந்த அறிவிப்பை அதிபர் திரும்பப் பெற்றார். என்றாலும் இதுதொடர்பாக, தென்கொரிய அதிபரை பதவிநீக்கம் செய்யும் தீர்மானத்தை அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தன. ஆனால் அது தோல்வியில் முடிந்ததை அடுத்து, யூன் சுக் இயோல் அதிபர் பதவியில் நீடித்தார்.
ஆனாலும், விடாத எதிர்க்கட்சிகள் மீண்டும் ஒரு தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தன. இதன் வாக்கெடுப்பு கடந்த டிசம்பர் 14ஆம் தேதி நடைபெற்றது. அதன்படி, நாடாளுமன்ற வாக்கெடுப்பில் மொத்தமுள்ள 300 உறுப்பினர்களில் 204 பேர் அவருக்கு எதிராகவே வாக்களித்தனர். இதையடுத்து, அவரை பதவிநீக்கம் செய்ய ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து யூன் சுக் இயோல், தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, புதிய அதிபரை தேர்ந்தெடுக்கும் வரை அந்நாட்டின் பிரதமர் ஹான் டக்-சூ அதிபருக்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அவரே இடைகால அதிபராகவும் செயல்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தென்கொரியா மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரத்தில், அவர்களை அமைதி காக்கும்படி எதிர்க்கட்சி வலியுறுத்தியுள்ளது.
இந்த நிலையில், அந்நாட்டின் ஆளுங்கட்சித் தலைவர் ஹான் டாங்-ஹூன், தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “மக்கள் சக்தி கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்து நான் விலகிக் கொள்கிறேன். கட்சியின் உயர் குழு உறுப்பினர்கள் ராஜினாமா செய்திருப்பது கட்சியின் உயர் குழுவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, கட்சித் தலைவராக என்னுடைய பணிகளை தொடர இயலாத சூழல் இப்போது உருவாகியுள்ளது. இப்போது நிலவும் அவசரகால நிலையால் அவதியுறும் அனைத்து மக்களிடமும் உளப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொண்டு ராஜினாமா செய்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் அதிபர் பதவி நீக்கம் தொடர்பான தீர்மானம் வெற்றி பெற்றுள்ள நிலையில், யூன் சுக் இயோலை மீண்டும் பதவியில் அமர்த்தலாமா அல்லது முறையாகப் பதவி நீக்கம் செய்வதா என்பதை முடிவெடுக்க அரசியலமைப்பு நீதிமன்றம் இன்று விசாரணையைத் தொடங்கியுள்ளது. அரசியலமைப்பு நீதிமன்றம் இவ்விவகாரத்தில் 6 மாதங்களுக்குள் முடிவெடுத்து அறிவிக்க கால அவகாசம் உள்ளது.