தென் கொரியா | முன்னாள் அதிபருக்கு காவல் நீட்டிப்பு.. ஆதரவாளர்கள் எதிர்ப்பு!
தென்கொரியாவின் அதிபராக இருந்த யூன் சுக் இயோல், கடந்த ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி, நாட்டுமக்களிடம் உரையாற்றியபோது, அவசரநிலை ராணுவச் சட்டத்தை அமல்படுத்துவதாக அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு எழுந்தது. தொடர்ந்து அவருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் பதவிநீக்க தீர்மானத்தைக் கொண்டு வந்தன. டிசம்பர் 14ஆம் தேதி இதற்கான வாக்குப்பதிவு தோல்வியில் முடிந்தாலும், 27ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில் அவருக்கு எதிராக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, அவசரநிலை ராணுவச் சட்டத்தை அமல்படுத்தியதற்காக முன்னாள் அதிபர் யூன் சுக் இயோல் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கு சியோல் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், ஜனவரி மாத தொடக்கத்தில் யூன் சுக் இயோலை கைதுசெய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
அதேநேரத்தில், அவரைக் கைது செய்யவிடாமல் அவரது ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆதரவாளர்களுக்கும் காவல் துறையினருக்கும் மோதல் நிலவியது. இதைத் தொடர்ந்து தென் கொரியாவில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட அதிபருக்கு ஆதரவாக பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்தச் சூழலில் அவரை கைது செய்ய இரண்டாவது முறையாக அதிகாரிகள் ஜனவரி 15ஆம் தேதி முயற்சித்தனர். அதுதொடர்பாக ஊழல் தடுப்பு பிரிவின் உயர்மட்ட அதிகாரிகள், அதிபர் மாளிகை அதிகாரிகளுடன் நீண்டநேரம் பேச்சுவார்த்தை நடத்தி யூன் சாக் இயோலை கைது செய்தனர். இதன்மூலம் கைதாகும் முதல் தென் கொரிய அதிபர் என இயோல் அறியப்படுகிறார்.
கைதுக்குப் பின் இயோலுக்கு தடுப்புக் காவலை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு சியோல் மேற்கு மாவட்ட நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அவரது காவல் 20 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும், காவல் துறையினரின் விசாரணைக்கு அவர் பதிலளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
அதேநேரத்தில், நீதிமன்றத்தின் கைது வாரண்டை எதிர்த்து இயோலின் வழக்கறிஞர்கள் மனுத் தாக்கல் செய்துள்ளனர். மறுபுறம், அவரது கைதை எதிர்த்து ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், நீதிமன்ற வாயிலில் கூடிய 60க்கும் மேற்பட்டவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.