தென் கொரியா | Ex அதிபரை கைது செய்ய தீவிரம்.. பெருகும் ஆதரவு.. வருகை தந்த அமெரிக்க அமைச்சர்!
தென்கொரியாவின் அதிபராக இருந்த யூன் சுக் இயோல், கடந்த ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி, நாட்டுமக்களிடம் உரையாற்றியபோது, அவசரநிலை ராணுவச் சட்டத்தை அமல்படுத்துவதாக அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு எழுந்தது. தொடர்ந்து அவருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் பதவிநீக்க தீர்மானத்தைக் கொண்டு வந்தன.
டிசம்பர் 14ஆம் தேதி இதற்கான வாக்குப்பதிவு தோல்வியில் முடிந்தாலும், 27ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில் அவருக்கு எதிராக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, அவசரநிலை ராணுவச் சட்டத்தை அமல்படுத்தியதற்காக முன்னாள் அதிபர் யூன் சுக் இயோல் மீது வழக்கு தொடுக்கப்பட்டது.
இதுதொடர்பான வழக்கு சியோல் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், கடந்த வாரம் யூன் சுக் இயோலை கைதுசெய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டில் அவர் மீதான நீதிமன்ற நடவடிக்கைக்கு பலரும் வரவேற்பு தெரிவித்தனர்.
இதற்கிடையே, அந்நாட்டு போலீசார் மற்றும் வழக்கறிஞர்களை உள்ளடக்கிய கூட்டு புலனாய்வுக் குழுவின் அதிகாரிகள் யூன் சுக் இயோலை கைதுசெய்ய, கடந்த ஜனவரி 3ஆம் தேதி காலை அவரது இல்லத்திற்குச் சென்றனர். ஆனால் அவரது ஆதரவாளர்கள் வீட்டிற்கு முன் குவிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் அவர்களை கைதுசெய்ய தடுத்தனர். இதையடுத்து அங்கு காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். இதனால் இருதரப்புக்கும் மோதல் நிலவியது. தவிர, அங்கு மேலும் பதற்றம் நிலவியதைத் தொடர்ந்து, இயோல் கைது செய்யப்படவில்லை.
இந்த நிலையில், தென் கொரியாவில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட அதிபருக்கு ஆதரவாக பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தலைநகர் சியோலில், அதிபர் மாளிகை அமைந்துள்ள பகுதியில், தேசிய கொடிகளை கையில் ஏந்தியபடி, அதிபருக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினர். அதிபர் மாளிகைக்கு அருகில் செல்வதைத் தடுக்கும் வகையில், காவல் துறையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டிருந்தனர். தடுப்புகள் போடப்பட்டு, காவல் துறையினர் தீவிர கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
இது ஒருபுறமிருக்க, மறுபுறம் அந்நாட்டுக்கு அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளின்கன், சியோலுக்கு வருகை தந்துள்ளார். தென் கொரியாவின் தற்காலிக அதிபராக பதவி வகித்துவரும் சோய் சாங் மாக்கைச் சந்தித்து, பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆன்டனி பிளின்கன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
இந்தச் சந்திப்பின்போது, தென் கொரிய ஜனநாயகம் மீதும், தற்காலிக அதிபர் சோய் சாங் மாக் மீதும் பிளின்கன் நம்பிக்கைத் தெரிவித்ததாக, தென் கொரிய நிதி அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, வடகொரியாவின் அச்சுறுத்தலுக்கு மத்தியில், தென் கொரியாவுக்கு முழு பாதுகாப்பு வழங்குவதில் அமெரிக்கா உறுதியாக இருப்பதாக பிளின்கன் தெரிவித்ததோடு, கூட்டு ராணுவ பயிற்சிகளில் ஈடுபடுவது குறித்தும் ஆலோசித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பின்போது, வடகொரியா ஏவுகணையை வீசி சோதனை செய்தது குறிப்பிடத்தக்கது.