ஹார்முஸை கடக்க 6 மடங்கு ஊதியம்..மாலுமிகளுக்கு அழைப்பு.. கப்பல் நிறுவனம் அதிரடி ஆஃபர்!!
ஈரான் - அமெரிக்கா இடையேயான பதற்றம் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்முஸ் நீரிணை முடங்கியிருக்கிறது. இதன்காரணமாக, ஹார்முஸ் மற்றும் அதனை ஒட்டிய கடற்பகுதிகளில் பயணிக்கும் வணிகக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால், ஹார்முஸ் நீரிணை மிகவும் ஆபத்தான பகுதியாக மாறியுள்ளது. சமீபத்தில், ஐ.நா. கடல்சார் அமைப்பு (UN shipping agency) வெளியிட்ட தகவலின்படி, கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து தற்போது வரை பாரசீக வளைகுடா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 59 வணிகக் கப்பல்கள் ராணுவத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன எனவும் இந்தத் தாக்குதல்களில் 17 மாலுமிகள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்திருக்கிறது.
அதேபோல, கடந்த வாரம் நடைபெற்ற தாக்குதலில் 2 மாலுமிகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களால் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்களில் இந்திய மாலுமிகளை புதிதாக பணியமர்த்த வேண்டாம் என இந்திய அரசு கப்பல் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
இத்தகைய பதற்றமான சூழலில், ஹார்முஸ் நீரிணை வழியாக பயணிக்க உலகம் முழுவதிலும் உள்ள பல மாலுமிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் தான், உலகின் மிகப்பெரிய சூப்பர் டேங்கர் கப்பல் நிறுவனங்களில் ஒன்றான சினோகோர் குழுமம் (Sinokor Group), ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பயணிக்க முன்வரும் மாலுமிகளுக்கு ஆறு மாத சம்பளத்திற்கு இணையான சிறப்பு போனஸ் வழங்கப்படும் என அதிரடி ஆஃபர் ஒன்றை அறிவித்திருக்கிறது.
அதன்படி, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சென்று, சவுதி அரேபியா அல்லது ஈராக்கில் இருந்து கச்சா எண்ணெயை ஏற்றி, ஓமான் வளைகுடா பகுதியில் இறக்கும் ஒரு முழு சுற்றுப் பயணத்தை வெற்றிகரமாக முடித்தால், இந்த போனஸ் வழங்கப்படும். இந்தப் பயணம் பொதுவாக ஒரு மாதம் வரை நீடிக்கும் என்று கூறப்படுகிறது. அதேசமயம், ஹார்முஸில் பயணிக்கும் மாலுமிகளுக்கு அபாயத்தைக் கருத்தில் கொண்டு தற்போது இரட்டிப்பு சம்பளத்தை பல்வேறு கப்பல் நிறுவனங்கள் வழங்கி வருவதாக கூறப்படுகின்றன.
எனினும், இத்தகைய அறிவிப்புகள் ஹார்முஸ் நீரிணையில் பயணிப்பதற்கான ஆபத்தையை குறிப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

