ஈரானின் ‘ஆபரேஷன் நஸ்ர் 2'.. அதிரவைத்த ஏவுகணை மழை.. உலக அரசியலில் புதிய பதற்றம்!
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ மையத்தை குறிவைத்து புதிய ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையான IRGC பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம், தெஹ்ரான் மற்றும் வாஷிங்டன் இடையேயான பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
IRGC வெளியிட்ட தகவலின்படி, ஜோர்டான்-சிரியா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ வீரர்கள் தங்கியுள்ள வளாகம் இந்த தாக்குதலின் இலக்காக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. “ஆபரேஷன் நஸ்ர் 2” என குறிப்பிடப்படும் சமீபத்திய தாக்குதல் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் கூறியுள்ளது. இதற்கிடையில், மோதலின்போது உயிரிழந்த அமெரிக்க ராணுவ வீரர்கள் தொடர்பாக அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் பீட் ஹெக்செத் வெளியிட்ட கருத்துகளுக்கு IRGC கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் அணுகுமுறையை விமர்சிக்கும் வகையில், ஈரான் ராணுவ அமைப்பு கடுமையான அறிக்கையையும் வெளியிட்டுள்ளது.
மேலும், ஈரானின் ஏவுகணை தாக்குதல்கள் தொடர்ந்த நிலையில், ஜோர்டான் தலைநகர் அம்மானில் வான்வழி தாக்குதல் எச்சரிக்கை சைரன்கள் ஒலித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிராந்தியத்தின் பல பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை, அமெரிக்க ராணுவ தளங்களை கொண்டுள்ள நாடுகளை மையமாகக் கொண்டு பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பஹ்ரைனையும் குறிவைத்து ஈரான் புதிய தாக்குதல்களை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தொடர் தாக்குதல்கள், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பு சூழலை மேலும் சிக்கலாக்கியுள்ளதாக சர்வதேச பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

