\
Global Hunger Eases, Recovery Still Incomplete: UN Report
Global HungerREUTERS

பசியால் வாடும் ஆப்பிரிக்க மக்கள்.. ஆசியாவின் நிலை என்ன? - ஐநா அறிக்கை

உலகம் முழுவதும் பசியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் 'உலகில் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து நிலை' 2026 அறிக்கை தெரிவித்துள்ளது.
Published on

2025-ஆம் ஆண்டில் உலகளாவிய பசி தொடர்ந்து மூன்றாவது ஆண்டாகக் குறைந்துள்ளதுடன், ஆசியா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட அனைத்துக் கண்டங்களிலும் முன்னேற்றங்கள் பதிவாகியுள்ளன என உலகில் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்தின் நிலை குறித்து ஐ.நா அமைப்புகள் இணைந்து தயாரித்த அறிக்கை ஒன்று தெரிவித்திருக்கிறது. எனினும், இது கோவிட் காலத்திற்கு முந்தைய நிலையை எட்டவில்லை எனவும் எச்சரித்திருக்கிறது.

அந்த அறிக்கையின் படி, 2025ஆம் ஆண்டில் உலகளவில் 64.5 கோடி மக்கள், அதாவது உலக மக்கள்தொகையில் 7.8 சதவீதம் பேர், பசியை எதிர்கொண்டுள்ளனர். இது 2024ஆம் ஆண்டில் இருந்த 65.9 கோடியிலிருந்து 1.4 கோடி குறைவு. மேலும் 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 4.3 கோடி பேர் குறைந்துள்ளனர் என அந்த அறிக்கை சுட்டிக் காட்டியிருக்கிறது.

”காசா முதல் சூடான் வரையிலும் அதற்கு அப்பாலும் மோதல்கள் தொடர்ந்து பசியைத் தூண்டுகின்றன. பசியானது எதிர்கால ஸ்திரத்தன்மையின்மையை மேலும் வளர்த்து, அமைதியைக் குலைக்கிறது" என்றும் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், நேற்றைய தினம் எத்தியோப்பியாவில் நடைபெற்ற ஐ.நா. உணவு உச்சி மாநாட்டில் உரையாற்றியிருந்த நிலையில் இந்த அறிக்கை வெளியாகியிருக்கிறது.

Global Hunger Eases, Recovery Still Incomplete: UN Report
ஆப்கன் அரசுக்கே ஆட்டத்தைக் காட்டிய புதிய தலிபான் எதிர்ப்புக் குழு.. மாவட்டத்தை கைப்பற்றி மிரட்டல்!

ஆப்பிரிக்காவில் 5-ல் ஒருவருக்கு ஊட்டச்சத்து குறைபாடு

இந்த அறிக்கையின் படி, ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்கா – கரீபியன் நாடுகள் பசியைக் குறைப்பதில் முன்னேற்றம் கண்டுள்ளன. ஆனால் ஆப்பிரிக்கா இன்னும் பசி மற்றும் ஊட்டச்சத்து அதிகமாக கண்டமாகவே உள்ளது. 2025ஆம் ஆண்டில் ஆப்பிரிக்காவில் பசியின் விகிதம் 20.3 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக சிறிதளவு குறைந்தாலும், மக்கள்தொகை அதிகரித்ததால் பசியால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்துள்ளது. அதன்படி, இதில் 309 மில்லியன் மக்கள், அதாவது ஐந்து ஆப்பிரிக்கர்களில் ஒருவர் பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

2030ஆம் ஆண்டுக்குள் உலகளவில் ஊட்டச்சத்து குறைபாடு கொண்டவர்களின் எண்ணிக்கை தற்போது இருப்பதை விட 20 சதவீதம் வரை குறையும் என்று ஐ.நா. கணித்துள்ளது. இருந்தாலும், 51 முதல் 52 கோடி மக்கள் வரை இன்னும் பசியுடன் வாழ நேரிடும் என்றும், அதில் 56 சதவீதம் பேர் ஆப்பிரிக்காவில் இருப்பார்கள் என்றும் அறிக்கை கூறுகிறது.

ஆசிய முன்னேற்றத்தில் இந்தியாவின் பங்கு

மேலும், ஆசியாவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தின் பெரும்பகுதி, உலகின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்கைக் கொண்ட நாடான இந்தியாவில் குவிந்துள்ளது எனவும்அங்கு, இலக்கு வைக்கப்பட்ட நலத்திட்டங்கள் மற்றும் அதிகரித்து வரும் விவசாய உற்பத்தித்திறன் ஆகியவற்றின் கூட்டு உதவியால், பசி 10%க்கும் கீழ் குறைந்துள்ளது என அந்த அறிக்கை சுட்டிக் காட்டியிருக்கிறது.

ஆரோக்கியமான உணவு இல்லாத 32.7% சதவீதம் பேர்

ஆரோக்கியமான உணவை வாங்க முடியாத மக்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது என ஐநாவின் அறிக்கை தெரிவித்திருந்தாலும், உலக மக்கள்தொகையில் 32.7 சதவீதம் பேருக்கு இன்னும் சத்தான உணவு எட்டாத ஒன்றாகவே உள்ளது என அறிக்கை கவலை தெரிவித்துள்ளது.

அதன்படி, ஆசியாவில் 140 கோடி பேர், ஆப்பிரிக்காவில் 103 கோடி பேர், லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதியில் 17.2 கோடி பேர், ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் 7.75 கோடி பேர், ஓஷியானியாவில் 23 லட்சம் பேர் ஆரோக்கியமான உணவை வாங்க முடியாத நிலையில் உள்ளனர். குறிப்பாக ஆப்பிரிக்காவில் மக்கள் தொகையின் மூன்றில் இரண்டு பங்கு, அதாவது சுமார் 66 சதவீதம் பேர், சத்தான உணவை வாங்க முடியாத சூழலில் உள்ளனர்.

ஊட்டச்சத்து குறித்து ஐநா வரையறை

ஐ.நா. மற்றும் உலக வங்கி வரையறையின்படி, ஒரு ஆரோக்கியமான உணவுக் கூடை என்பது ஒரு நபருக்குத் தினமும் சுமார் 2,330 கிலோகலோரி சக்தியையும், தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்களையும் வழங்கும் வகையில், உள்ளூரில் கிடைக்கும் ஆறு உணவுக் குழுக்களில் இருந்து 11 வகை உணவுப் பொருட்களை குறைந்த செலவில் கொண்டிருக்கும் உணவுத் தொகுப்பாகும்.

இந்தசூழலில் தான், சர்வதேச மோதல்கள், பொருளாதார அதிர்வுகள், காலநிலை மாற்றம் மற்றும் 2026ஆம் ஆண்டில் ஏற்பட்ட புதிய புவிசார் அரசியல் பதற்றங்கள் போன்றவை, உலகின் பசி ஒழிப்பு முயற்சிகளை மீண்டும் பாதிக்கக்கூடும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

Global Hunger Eases, Recovery Still Incomplete: UN Report
உலகின் மகிழ்ச்சியான நகரங்கள்.. 6ஆவது இடம்பிடித்த இந்தியாவின் இளஞ்சிவப்பு நகரம்!

விரைவில் புதிய தலைமுறையில் புதிய தொடர்கள்!

உங்களுக்குப் பிடித்தமான எழுத்தாளர்கள் எழுதும் மனதைக் கவரும் தொடர்கள், விரைவில் நமது ’புதிய தலைமுறை’யில் இணையதளத்தில் வெளிவர இருக்கிறது. அந்த வகையில், திங்கள்தோறும் பி.கே.பழனிக்குமார் எழுதும் ’ஒரு மருந்து விற்பனைப் பிரதிநிதியின் டைரிக்குறிப்பு’ம், புதன்தோறும் டாக்டர் வி.அமுதன் எழுதும் ’சக்கரங்கள் சொல்லும் கதை’யும், வெள்ளிதோறும் சுகுணா திவாகர் எழுதும் ’நிறம் மாறும் சினிமா’ ஆகிய தொடரும் இடம்பெற இருக்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com