அமெரிக்காவை வாட்டும் கடும் பனிப்புயல்.. பள்ளிகள், அரசு அலுவலகங்கள் மூட வேண்டிய நிலை!
புத்தாண்டுக்குப்பிறகான முதல் பனிப்பொழிவை சந்தித்துக் கொண்டிருக்கிறது அமெரிக்கா. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பனி மூடி படர்ந்துள்ளன. வடதுருவத்தை சுற்றிச்சுழலும் குளிர்ந்த துருவச்சுழல் காரணமாக அமெரிக்கா, ஐரோப்பா, மற்றும் சில ஆசிய நாடுகளில் கடுமையான பனிப்பொழிவு நிலவுகிறது.
Kansas, மேற்கு Nebraska, Indiana-வின் சில பகுதிகளில் பனிமூடிய சாலைகளால், பல வாகனங்கள் ஆங்காங்கே நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. Kentucky, Indiana, Virginia, West Virginia, Illinois and Missouri மாகாணங்களில் சுமார் 3 லட்சம் பேர் மின்விநியோகம் இன்றி தவிக்கும் நிலை காணப்பட்டது. மணிக்கு 72 கிலோமீட்டர் வேகத்தில் பனிக்காற்று வீசக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இங்கு பல பகுதிகளில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பனிப்பொழிவு காணப்பட்டது.
அமெரிக்காவின் கிழக்குப்பகுதிகளில் எலும்பை நடுங்க வைக்கும் அளவுக்கு ஆபத்தான பனியும், குளிர்காற்றும் இருக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. பனிப்பொழிவு காரணமாக பல பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. 100க்கணக்கான கார்கள் விபத்துக்குள்ளாகின.
சாலையில் படிந்துள்ள பனித்துகள்களை அகற்றினால் அடுத்த அரைமணி நேரத்திற்குள் மீண்டும் பனியால் மூடப்படும் நிலை இருப்பதால் வாகனம் ஓட்டுவதில் கடும் சிரமங்களை சந்தித்தனர். கன்சாஸ் நகர சர்வதேச விமானநிலையத்தில் 11 அங்குலம் அளவுக்கு பனிப்பொழிவு பதிவானதால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. மத்திய அட்லாண்டிக்கை நோக்கி பனிப்பொழிவு நகர்ந்ததால் பல பகுதிகளிலும் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது. ஒரேநாளில் 1400 விமானங்கள் சேவை ரத்து செய்யப்பட்டன. 740 விமான சேவைகளில் தாமதம் ஏற்பட்டது. மத்திய அட்லாண்டிக்கை நோக்கி பனிப்புயல் நகர்ந்து கொண்டிருப்பதால் வாஷிங்டன் டி.சி. கனத்த பனிப்பொழிவாலும், கடுமையான குளிரிலும் நடுங்கிக் கொண்டிருக்கிறது.