ஆசாராம் பாபுவுக்கு இடைக்கால ஜாமீன்! யார் இவர்? பாலியல் வழக்கின் பின்னணி என்ன?
2013-ம் ஆண்டு பாலியல் பலாத்கார வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஆசாராம் பாபுவிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.
நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ராஜேஷ் நிண்டால் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், 86 வயதான அவரது உடல்நிலையைக்கருத்தில் கொண்டு மார்ச் 31 வரை இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது. 10 ஆண்டுகளில் ஆசாராம் பாபு ஜாமீன் பெறுவது இதுவே முதல்முறை.. ஜாமீன் காலத்தில் சாட்சியங்களை சிதைக்கவோ அல்லது ஆதரவாளார்களை சந்திக்கவோ முயற்சி செய்யக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவர் மீது சுமத்தப்பட்ட வழக்கு என்ன?
2013 ஆம் ஆண்டு சூரத்தை சேர்ந்த பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் காந்திநகர் செஷன்ஸ் நீதிமன்றம் ஜனவரி 2023 இல் ஆசாராம் குற்றவாளி என தீர்ப்பளித்து ஆயுள் தண்டனை வழங்கியது. ஆயுள் தண்டனையை எதிர்த்து அவர் உயர் நீதிமன்றத்தை அணுகினார் இருப்பினும் உயர்நீதிமன்றம் அதை தள்ளுபடி செய்தது.
இருப்பினும் வயது மூப்பு மற்றும் பிற நோய்களால் அவரின் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைகளுக்கு வழிவகுக்கலாம் என்றும் சிறைக்கு வெளியே சிகிச்சை பெறுவதற்காக இடைக்கால ஜாமீன் வழங்க நீதிமன்றத்தை வலியுறுத்தினார். இதனை கருத்தில் கொண்டு நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமீன் கொடுத்துள்ளது.
யார் இந்த ஆசாராம்
பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் உள்ள நவாப்ஷா மாவட்டத்தில் பெரானி கிராமத்தில் 1941-ம் ஆண்டு, ஏப்ரல் 17-ம் தேதி பிறந்தவர் இந்த ஆசாராம் பாபு. இவரின் இயற்பெயர் அன்சுமால் துமால் ஹர்பலானி. கடந்த 1947-ம் ஆண்டுக்கு பின் இந்தியா பிரிக்கப்பட்டபோது, இவரது குடும்பம் பாகிஸ்தானிலிருந்து குஜராத்தின் அஹமதாபாத் நகரில் குடியேறியது. ஆசாராம் பாபுவின் தந்தை துமால் சிறுமலானி நிலக்கரி மரம் வியாபாரம் செய்து வந்துள்ளார்.
ஆசாராம் பாபு அகமதாபாத்தில் உள்ள ஜெய்ஹிந்த் உயர்நிலைப்பள்ளியில் 4-ம் வகுப்புவரை மட்டுமே படித்தார். இவரின் தந்தை இறந்தபின் ஆசாராம் பாபு, தந்தையின் தொழில் செய்யாமல் சிறு சிறு வேலைகளை செய்து வந்துள்ளார். பிறகு லட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார் இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.
ஆன்மீக வாழ்க்கை
குடும்ப வாழ்க்கைக்குபிறகு ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட ஆசாரம் பாபு இயமலைக்கு சென்றார். அங்கு லீலாஷா பாபு என்ற துறவியை கண்டு அவரிடம் தீட்சை பெற்று தனது பெயரை ஆசாரம் பாபு என்று மாற்றிக்கொண்டு சன்யாசியாக வாழ்க்கையை நகர்த்தியுள்ளார். கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் இவரை நம்ப ஆரமித்தனர். 1970களில் பல்வேறு சொற்பொழிவுகள் ஆன்மீக கூட்டங்களை நடத்தி வந்தவர் 1972-ம் ஆண்டு ஜனவரி 29-ம் தேதி சபர்மதி ஆற்றங்கரையில் உள்ள மோதிரா எனும் கிராமத்தில் சிறிய குடில் அமைத்து தனது ஆசிரமத்தை ஆசாராம் பாபு தொடங்கினார். இவரின் ஆன்மீக சொற்பொழிவில் விருப்பம் கொண்ட மக்கள் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கத் தொடங்கியது.
பின்னர் படிப்படியாக வளர்ந்து, 40 ஆண்டுகளில் சுமார் 10 ஆயிரம் கோடிக்கு மேலான சொத்துக்களுக்கு அதிபதியாகியுள்ளார்.
அதன்பின் கடந்த 1981 மற்றும் 1992 ஆகிய ஆண்டுகளில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு ஆசாராம் பாபுக்கு ஆசிரமம் அமைக்க நிலம் வழங்கியது. 1997ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பாஜக அரசு ஆசாராம் பாபுவின் ஆசிரமத்தை விரிவாக்கம் செய்ய அனுமதி வழங்கி இடத்தையும் அளித்தது.
அதன்பின் ஆசாராம் பாபு குஜராத் மட்டுமல்லாது ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் தனது ஆசிரமத்தின் கிளைகளையும், குருகுலங்களையும் தொடங்கினார். பின்னர், தனது சீடர்களால், குழுக்களால் தயாரிக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்தார்.
முதல் சம்பவம்
கடந்த 2008-ம் ஆண்டு ஆசிரமத்தில் தங்கி இருந்த இரு சகோதரர்கள் தீபேஷ், அபிஷேக் வகேலா ஆகிய இருவரும் ஆசிரமத்துக்கு அருகே இருக்கும் சபர்மதி ஆற்றங்கரையில் சடலமாக கரை ஒதுங்கினார்கள். உடலை கைப்பற்றிய போலிசார் உடற்கூறாவின் முடிவில் அதிர்ச்சியான தகவல் ஒன்று தெரியவந்தது. இறந்த இருவரின் உடலில் முக்கியமான உறுப்புகள் அனைத்தும் ஏற்கனவே எடுக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இறந்த தீபேஷ் மற்றும் அபிஷேக் குடும்பத்தினர், தனது மகன்கள் நரபலி கொடுக்கப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகத்தை எழுப்ப... ஆச்சாராமிற்கு பிரச்சனை ஆரம்பித்தது. பின்னர் சிபிசிஐடி விசாரணையில் நரபலி ஏதும் நடக்கவில்லை என்பது தெரியவந்தது இருப்பினும் இந்த வழக்கில் 7 பேர் மட்டும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ஏற்பட்ட கலவரத்தில் 200க்கும் மேற்பட்ட ஆசாராம் பாபுவின் ஆதரவாளார்கள் கைதாகினர்.
பாலியல் வழக்கு
அதன்பிறகு கடந்த 2013-ம் ஆண்டு ராஜஸ்தானின் ஜோத்பூர் ஆஸிரமத்தில் 16 வயது மைனர் சிறுமியை ஆசாராம் பாபு பலாத்காரம் செய்ததாக புகார் செய்யப்பட்டது. இந்தப் புகாரை விசாரணை செய்த போலீஸார் அதில் முகாந்திரம் இருந்ததைத் தொடர்ந்து, கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் 13-ம் தேதி ஆசாராம் பாபுவைக் கைது செய்தனர். மேலும் சூரத் நகரைச் சேர்ந்த சகோதரிகள் இருவர் ஆசாராம் மீதும் அவரின் மகன் நாராயண் சாய் மீதும் பாலியல் புகாரை அளித்தனர். இதனை அடுத்து ஆசாராம் பாபுவின் மகன் நாராயண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இடைக்கால ஜாமீன்
இந்நிலையில் வயது மூப்பினால் வந்த உடல் உபாதைகளைக் கருத்தில் கொண்ட நீதிபதி, ஆசாராம் சிகிச்சை எடுத்துக்கொள்ள மார்ச் 31ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.