அண்டார்டிகாவில் பில்லியனில் எண்ணெய் இருப்பு கண்டுபிடிப்பு.. உலக போருக்கு வழிவகுக்குமா? எப்படி?
செய்தியாளர் - வைஜெயந்தி.எஸ்
சர்வதேச அரசியலை, உலகின் இயக்கப் போக்கை ஒவ்வொரு காலத்திலும் ஏதேனும் ஒரு ஆற்றல் தான் தீர்மானித்து வந்திருக்கிறது. மனிதர்கள்தான் எல்லாவற்றையும் செய்கிறார்கள் என்றாலும் யார் வசம் ஆற்றல் வளங்கள் இருக்கிறது என்பதை பொறுத்தே சர்வதேச அரசியல் சதுரங்கம் அமைகிறது. தற்காலத்தில் சோலார் எனர்ஜி, க்ரீன் எனர்ஜி என பல வகையான ஆற்றல்கள் உலகின் இயக்கப் போக்கை தீர்மானிப்பவையாக உருவாகிவிட்டாலும் இன்றளவும் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆற்றல் தான் முன்னிலையில் இருக்கிறது. இந்த எண்ணெய் மற்றும் எரிவாயு ஆற்றலுக்காக உலக அளவில் பல மோதல்கள், ஆட்சி கவிழ்ப்புகள் நிகழ்ந்துள்ளன. அமெரிக்கா அரபு நாடுகளில் ரத்தக் களரியை உண்டாக்கியதும் இந்த எண்ணெய்க்காகத்தான். அந்த அளவிற்கு எண்ணெய் வளங்களானது சர்வதேச அரசியலில் முக்கியத்தும் பெற்று வருகிறது.
இத்தகைய சூழலில் தான், அண்டார்டிகாவில் உலகின் மிகப்பெரிய எண்ணெய் இருப்பை ரஷ்யா கண்டுபிடித்துள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. இந்த எண்ணெய் வள கண்டுபிடிப்புகளானது அடுத்த போருக்கே கூட வழிவக்கும் என்று கூறப்படுகிறது. அண்டார்டிகாவில் எண்ணெய் வளம் கண்டுபிடிப்பு, உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பு, புவிசார் அரசியல் நிலைப்பாடு மற்றும் அண்டார்டிகாவின் சூழல் பாதுகாப்பு ஆகியவற்றுடன் தொடர்புடைய ஒரு சிக்கலான விஷயமாக மாறி வருகிறது.
கண்டுபிடிக்கப்பட்ட எண்ணெய் அளவு என்ன உலக அளவில் இது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இங்கே விரிவாக பார்க்கலாம்..
அண்டார்டிகாவில் எண்ணெய் வளம் கண்டுபிடிப்பு
அண்டார்டிகாவில் உள்ள வெட்டல் கடலில் ( Weddell Sea) எண்ணெய் இருப்புக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. நியூஸ் வீக் என்ற பத்திரிக்கை வெளியிட்டுள்ள தகவலில், ரஷ்ய ஆராய்ச்சியாளர்களால் உறைந்த நிலத்தில் 511 பில்லியன் பீப்பாய்களில் உள்ள எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்தப் பகுதி அண்டார்டிகாவின் "பிரிட்டிஷ் பகுதியில்" அமைந்துள்ளது. அர்ஜென்டினா மற்றும் சிலியும் ஒன்றுடன் ஒன்று பிராந்திய உரிமைகோரல்களைக் கொண்டுள்ளன. போட்டியிடும் உரிமைகோரல்கள் இருந்தபோதிலும், ரஷ்யா தொடர்ந்து இந்தப் பகுதியை ஆராய்ச்சி செய்து வருகிறது. ரஷ்யாவின் இந்த செயல்கள் நிபுணர்களை சந்தேகிக்க வைத்தது..
சர்வதேச ரீதியான விளைவுகள் என்ன?
1959 அண்டார்டிக் ஒப்பந்தத்தின்படி, அண்டார்டிகாவை யாரும் சுரண்டக்கூடாது என ஒப்புக்கொள்ளப்பட்டது. அதன்படி, அண்டார்டிகா அறிவியல் ஆராய்ச்சிக்கான இடம்தானே தவிர, இங்கு எந்த இராணுவ நடவடிக்கையோ அல்லது வளச் சுரண்டலோ மேற்கொள்ளப்படக்கூடாது என்றும் பொருளாதார ஆதாயத்திற்காக அண்டார்டிகாவின் வளங்களை சுரண்டுவதைத் தடுப்பதே இந்த ஒப்பந்தத்தின் நோக்கமாக இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதனால் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற பல நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. ஆனால் ரஷ்யாவின் "அறிவியல் பயணங்கள்" (scientific expeditions) என்று அழைக்கப்படும் ஆராய்ச்சியாளர்கள் இந்த ஒப்பந்தத்தை மீறுவதாக கருதப்படுகிறது..
அண்டார்டிகாவின் எண்ணெய் கண்டுபிடிப்பு சர்வதேச போரை தூண்டும்..
புவிசார் அரசியலில் நிபுணரான பேராசிரியர் கிளாஸ் டாட்ஸ் (Klaus Dodds ) நியூஸ் வீக்கிடம் கூறுகையில், ரஷ்யா அண்டார்டிகாவில் நில அதிர்வு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.. இது நில அதிர்வு ஆய்வுகளைச் சுற்றியுள்ள சர்வதேச விதிமுறைகளை குறைந்த மதிப்பிற்கு உட்படுத்தக்கூடும். ரஷ்ய விஞ்ஞானிகள் ஆராய்ச்சியை மேற்கொள்வதற்குப் பதிலாக அங்குள்ள வளங்ககளில் கவனத்தை செலுத்துகின்றனர் என்று அவர் எச்சரித்துள்ளார்.
மேலும் இது பற்றி கூறியவர், இது முழு அளவிலான வளத்தை பிரித்தெடுக்கும் நடவடிக்கைகளைத் தூண்டும் என்றும் இது அண்டார்டிகாவில் சுரங்கம் மற்றும் துளையிடுதலுக்கான தடையை குறைத்து மதிப்பிடுவதற்கு வழிவகுக்கும் என்றும் கூறுகிறார். மேலும் எரிசக்தி வளங்கள் இத்தகைய சூழ்நிலைகளுக்கு ஒரு முக்கிய தூண்டுதலாக இருப்பதால் இது சர்வதேச மோதல்களுக்கு வழிவகுக்கும் என்ற கவலைகளை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தார்.. ரஷ்யாவும் மேற்கத்திய நாடுகளும் உக்ரைன் மற்றும் 2022 முதல் நடந்து வரும் போரைப் பற்றி முரண்படுவதால் இது வருகிறது என்றும் அவர் கூறினார்.
எண்ணெய் இருப்புக்களை சுரண்டுகிறோமா? - மறுக்கும் ரஷ்யா
இது குறித்து ரஷ்யா கூறுகையில், அண்டார்டிகாவில் தனது நடவடிக்கைகள் அண்டார்டிக் ஒப்பந்தத்துடன் ஒத்துப்போவதாக கூறியுள்ளது.. மேலும் இது பற்றி அறிக்கை வெளியிட்ட ரஷ்ய அரசாங்கம் பிராந்தியத்தில் தனது ஆராய்ச்சி முற்றிலும் அறிவியல் பூர்வமானது என்றும், கண்டுபிடிக்கப்பட்ட எண்ணெய் இருப்புக்களை சுரண்டுவதற்கு அது செயல்படவில்லை என்றும் கூறியுள்ளது. அண்டார்டிகாவில் ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் வெளியுறவு அலுவலகம் உததவிட்டுள்ளது.
இதற்கிடையில், சீனாவில் தனது ஐந்தாவது ஆராய்ச்சி தளத்தை அமைத்துள்ளது, இது பதட்டங்களை அதிகரிக்கிறது. இது இரு நாடுகளும் பிராந்தியத்தில் நெருக்கமான கூட்டாண்மையை உருவாக்க முடியும் என்று நிபுணர்கள் ஊகிக்க வழிவகுத்துள்ளது. அதனால் இது உலக போரை ஏற்படுத்தலாம் என்று நிபுணர்கள் கூறி வருகின்றனர்.
உலகளாவிய மொத்த இருப்புகள்:
BP Plc 2021 அறிக்கையின்படி, 2020 ஆம் ஆண்டில் உலகளவில் 1.73 டிரில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் இருப்பு இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. Worldometer 2016 ஆம் ஆண்டின் நிலவரப்படி, உலகளவில் 1.65 டிரில்லியன் பீப்பாய்கள் நிரூபிக்கப்பட்ட எண்ணெய் இருப்புக்கள் இருப்பதாகக் குறிப்பிடுகிறது.
பெட்ரோலியம் ஏற்றுமதி நாடுகளின் அமைப்பு (OPEC) 2022 ஆம் ஆண்டின் நிலவரப்படி, உலகளவில் 1.56 டிரில்லியன் பீப்பாய்கள் இருப்பதாக மதிப்பிட்டுள்ளது. உலகளாவிய எண்ணெய் இருப்புகளில் தோராயமாக 80% எண்ணெய் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பு (OPEC) அமைப்பில் உள்ள நாடுகளால் கட்டுப்படுத்தப்படுகிறது.
அதிகபட்ச இருப்பு கொண்ட நாடுகள்:
வெனிசுலா: 303.8 பில்லியன் பீப்பாய்களுடன் அதிகபட்ச எண்ணெய் இருப்பு கொண்ட நாடாக உள்ளது.
சவுதி அரேபியா: 297.5 பில்லியன் பீப்பாய்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
கனடா: 168.1 பில்லியன் பீப்பாய்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
ஈரான், ஈராக், ரஷ்யா, குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அமெரிக்கா மற்றும் லிபியா ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன