கம்போடிய வரலாற்றில் ராஜேந்திர சோழன்: கோயிலை சுற்றிய போர்? 11ஆம் நூற்றாண்டின் வரலாறு..!
கோயிலே பிரச்னை!
தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையிலான மோதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. தங்களது தற்காப்பிற்காகவே மோதல் நடவடிக்கை மேற்கொண்டதாகவும், எதிர் தரப்பே சண்டையை நிறுத்தி பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்றும் இருநாடுகளும் தெரிவித்திருக்கின்றன.
தாய்லாந்து மற்றும் கம்போடியா என இருநாடுகளும் 817 கி.மீ தொலைவிற்கு எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன. தற்போதைய எல்லைப் பிரச்னை 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரெஹ் விகெர் (Preah Vihear) எனும் சிவன் கோவிலை மையமாகக் கொண்டிருக்கிறது. அப்போதைய ஆட்சியாளர்கள் சிவனை வழிபடுபவர்களாக இருந்தபோது இந்தக் கோயில் கட்டப்பட்டது. ஆனால், அடுத்தடுத்து வந்த கெமர் ஆட்சியாளர்கள் பௌத்த மதத்திற்கு மாறியதால், கோயில் வளாகம் பௌத்த மத கூறுகளையும் உள்ளடக்கியிருக்கிறது.
900 ஆண்டுகள் பழமையான இந்த சிவன் கோயில் டாங்க்ரெக் மலைத்தொடரில் ஒரு குன்றின் மீது அமைந்திருக்கிறது. இந்தக் கோயில் ஒரே நேரத்தில் கட்டப்படவில்லை; பல நூற்றாண்டுகளாக கெமர் ஆட்சியாளர்களால் பல்வேறு மாற்றங்களுக்கு இந்த கோயில் உள்ளாகியிருக்கிறது. குறிப்பாக, 9 ஆம் நூற்றாண்டில் முதலாம் யசோவர்மன் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்டு 11 ஆம் நூற்றாண்டில் முதலாம் சூர்யவர்மன் ஆட்சிக்காலத்தில் அந்தக் கோயில் தனது உச்சபட்ச புகழை எட்டியது. முதலாம் யசோவர்மன் ஆட்சிக்காலத்தில் இந்தக் கோயில் சிகரீஸ்வரர் என அழைக்கப்பட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இரண்டு பெரிய மதங்களோடு கம்போடியா
பின்னர் பௌத்த மன்னரான ஏழாம் ஜெயவர்மன் ஆட்சிக்காலத்தில் பௌத்த செயல்பாடுகளுக்கான தலமாக மாறியது. ஆனாலும், இதற்கு முந்தைய மன்னர்களால் கட்டப்பட்ட கட்டடக்கலைக்கு ஊறு விளைவிக்காமலே பௌத்தமதக் கூறுகள் கோயிலின் நடைமுறைகளில் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கின்றன. இந்த மாற்றங்கள் தொடர்பாக கோயிலில் இருக்கும் கல்வெட்டுகள் இரு பெரிய மதங்களை கம்போடியா எவ்வாறு ஏற்றுக்கொண்டது என்பதற்கான சான்றுகளாக இருக்கின்றன.
9 முதல் 13 ஆம் நூற்றாண்டு வரையில் நடந்த இந்த மாற்றங்களெல்லாம் இக்கோயிலை சிறந்த படைப்புகளில் ஒன்றாக ஆக்கியிருக்கின்றன. இதை அடிப்படையாகக் கொண்டே 2008 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய தலங்களில் ஒன்றாக இந்தக் கோவிலை அறிவித்தது.
அந்தக் காலக்கட்டத்தில் கெமர் பேரரசு இன்றைய தாய்லாந்தின் பகுதிகளையும் உள்ளடக்கி ஆண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே, கம்போடிய மற்றும் தாய்லாந்து என இருநாட்டு மக்களும் பிரெஹ் விகெர் கோயிலை புனிதமாகக் கருதுகின்றனர்.
தற்போது மோதல் நடைபெறும் இடத்திலிருந்து 95 கிலோமீட்டர் மேற்கே 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட டா முவென் தோம் கோயில் இருக்கிறது. இந்தக் கோயில் கெமர் பேரரசின் மன்னர் இரண்டாம் உதயாதித்யவர்மனின் கீழ் கட்டப்பட்டது. இந்த இரு கோயிலும் வரலாறு நெடுகிலும் பல்வேறு மோதல்களைக் கண்டிருக்கின்றது.
உருவான பிராந்திய எதிரி
பிரெஹ் விகெர் கோயிலின் சில பகுதிகள், கெமர் மன்னன் முதலாம் சூரியவர்மன் காலத்தில் விரிவுபடுத்தப்பட்டவை. முதலாம் சூர்யவர்மன் பௌத்த மதத்தினைப் பின்பற்றுபவர் என்றாலும், சிவன், ராமர் போன்ற கடவுள்களையும் வணங்கியிருக்கிறார். தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் விதமாகவும், பழம்பெரும் கெமர் பேரரசை வலுப்படுத்தும் விதமாகவும், பிரெஹ் விகெர் கோயிலை சமய, அரசியல் மற்றும் இராணுவ சின்னமாக உருவாக்கினார்.
இதற்கிடையே தெற்கு தாய்லாந்தில் உள்ள தம்ப்ரலிங்க ராஜ்ஜியத்தின் எதிர்ப்பை சூர்யவர்மன் எதிர்கொண்டார். ஏனெனில் சூர்யவர்மன் தனது பேரரசை வடமேற்கு எல்லையில் விரிவுபடுத்தினார். இந்த எல்லைக்குள்தான் பிரெஹ் விகெர் கோயில் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், ராஜ்ஜியத்தினை விரிவுபடுத்துதலின் விளைவாக தம்பிரலிங்கா ராஜ்ஜியத்தின் கீழ் இருந்த பகுதிகளுக்குள்ளும் கெமர் பேரரசு நுழைந்ததாகக் கூறப்படுகிறது.
அத்தோடு, கடல் சார் வணிகம் மட்டுமே ஒருநாட்டின் பொருளாதார வளர்ச்சியை தீர்மாணிக்கும் காரணிகளாக இருந்த காலக்கட்டத்தில் கெமர் பேரரசின் வளர்ச்சி, ஸ்ரீ விஜய பேரரசுக்கு அச்சுறுத்தலாகக் கருதப்பட்டது. எனவே, ஸ்ரீ விஜய பேரரசு தம்ப்ரலிங்கா ராஜ்ஜியத்தியத்திற்கு ஆதரவளிக்க அந்நாடோ கெமர் பேரரசுக்கு பிராந்திய எதிரியாக மாறியது.
பிரெஞ்சு காலணியவாதிகளால் உருவான பிரச்னை
இத்தகைய சூழலில் முதலாம் சூர்யவர்மன், தென்னிந்தியாவில் இருந்த சோழர் பேரரசின் மன்னன் முதலாம் ராஜேந்திர சோழனின் உதவியை நாடினார். ஏனெனில், ராஜேந்திர சோழன் ஏற்கனவே, ஸ்ரீ விஜயாவுக்கு எதிராக ஒரு கடல்சார் தாக்குதலைத் தொடங்கியிருந்தார். தாக்குதல்களின் முடிவாக சோழர்களின் ஆதரவுடன் முதலாம் சூர்யவர்மன் தம்ப்ரலிங்க ராஜ்ஜியத்தினை வெற்றிகண்டார். இது, தெற்காசிய அதிகாரச் சூழலை மாற்றியமைத்தது. இந்தக் காலத்தில் சூரியவர்மன் மற்றும் சோழர்களுக்கிடையே ஏற்பட்ட கூட்டணியே, தம்பிரலிங்காவை வீழ்த்த உதவியது. இந்த நன்றியுணர்வின் காரணமாக ராஜேந்திர சோழனுக்கு சூர்யவர்மன் போர் ரதத்தை அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.
மன்னர்கள் காலத்திலான பதற்றங்கள் எல்லாம் போர் மூலம் சற்றே ஓய்ந்திருந்தாலும் நவீன காலத்தில் அந்த இரண்டு கோயில்களை சுற்றிலும் மீண்டும் பதற்றங்கள் வேறு வடிவத்தில் எழுந்திருக்கின்றன. இந்தக் கோயில்கள் தாய்லாந்து மற்றும் கம்போடியா என இருநாட்டு எல்லைகளுக்கு இடையில் சர்ச்சைக்குரிய பகுதியில் அமைந்திருக்கின்றன. மிக முக்கியமாக கோயிலை இருநாடுகளும் சொந்தம் கொண்டாடுகின்றன.
இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இருநாடுகளுக்கு இடையேயான எல்லைகளைப் பிரிப்பதற்காக பிரெஞ்ச் காலணிய ஆட்சியாளர்களால் வரைபடம் ஒன்று உருவாக்கப்பட்டது. இந்த வரைபடத்தின்படி கோயில் கம்போடிய எல்லைக்குள் இருக்கிறது. ஆனால், இந்த வரைபடமே தவறானது என தாய்லாந்து வாதிடுகிறது. ஒருவேளை பிரெஞ்ச் காலணியவாதிகளால் வரையப்பட்ட வரைபடமே தற்போதைய பிரச்னைகளுக்கு காரணமாக இருக்கலாம்.
மீண்டும் தொடங்கிய பிரச்னை
1962ஆம் ஆண்டு, சர்வதேச நீதிமன்றம் இந்த கோயிலை கம்போடியாவுக்கே உரியதாகத் தீர்ப்பளித்தது. அதற்கு அவர்கள் மேற்கோள் காட்டியது பிரெஞ்ச் காலணியவாதிகளின் வரைபடத்தை. ஆனால், கோயிலை சுற்றியுள்ள நிலம் எந்த நாட்டுக்கு உரியது? என்ற பிரச்னை தொடர்ந்து நீடித்தது. இதனையடுத்து 2008ஆம் ஆண்டு கம்போடியா, கோவிலை UNESCO உலக பாரம்பரிய தளமாக பதிவு செய்ய முயற்சி செய்ததால் அதனை தாய்லாந்து கடுமையாக எதிர்த்தது. 2008 ஆம் ஆண்டு அக்டோபரில் இரு தரப்பினருக்கும் இடையே நடந்த மோதலில் 2 கம்போடிய வீரர்கள் உயிரிழந்தனர். பின் 2011 ஆம் ஆண்டு பிப்ரவரியில் இருதரப்பினருக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்தது. 7 நாட்கள் நீடித்த இந்த மோதலில் 15 பேர் உயிரிழந்தனர். 10 ஆயிரம் பொதுமக்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்தனர். இதற்கிடையே, 2011 ஆம் ஆண்டு ஜூலையில் இருநாடுகளும் எல்லைப்பகுதியில் இருக்கும் தங்களது ராணுவத்தினரை திரும்பப்பெற வேண்டுமென சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இத்தகைய சூழலில்தான் கடந்த மே மாதம் 28 ஆம் தேதி இரு நாடுகளுக்கும் இடையே சிறிய துப்பாக்கி சண்டை நிகழ்ந்தது. இதில், கம்போடிய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். இந்த உயிரிழப்பு இருநாடுகளுக்கு இடையிலான எல்லை பிரச்னைகளை மேலும் மோசமடைய வைத்தது. இதனையடுத்து இரு தரப்பினரும் எல்லைப் பகுதிகளில் தங்களது ராணுவத்தினரைக் குவித்தனர். கம்போடிய பிரதமர் ஹன் மானெட், 2026 முதல் கட்டாய இராணுவ சேவை செயல்படுத்தப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.
மாறி மாறி சுமத்தப்படும் குற்றம்
இருநாடுகளுக்கும் இடையே நீடித்த பதற்றங்கள் வர்த்தக நடவடிக்கைகளுக்கும் வழிவகுத்தன. இதற்கிடையே கடந்த புதன்கிழமை நடத்தப்பட்ட கண்ணிவெடி விபத்தில்(?) 5 தாய்லாந்து வீரர்கள் காயமடைந்தனர். இந்த கண்ணி வெடிகளை கம்போடிய துருப்புகள் வேண்டுமென்றே நட்டுவைத்ததாக தாய்லாந்து அரசாங்கம் குற்றம்சாட்டுகிறது. ஆனால், கம்போடிய அரசாங்கம் இந்த குற்றச்சாட்டை மறுத்திருக்கிறது; கடந்த நூற்றாண்டில் கம்போடியாவின் உள்நாட்டுப் போரில் வெடிக்காமல் எஞ்சியிருந்த கண்ணிவெடிகள் அவை எனத் தெரிவித்திருக்கிறது.
இதனையடுத்து தாய்லாந்து தனது தூதரை திரும்பப் பெற்றுக்கொண்டு கம்போடிய தூதரையும் நாட்டை விட்டே வெளியேற்றியது. மேலும், இருதரப்பினரும் தங்களது ராஜாங்க ரீதியான உறவுகளைக் குறைத்துக்கொண்டனர். கடந்த வியாழக்கிழமை, இருதரப்பினருக்கும் இடையே நேரடி மோதல் வெடித்தது. ஆனால், முதலில் துப்பாக்கிச்சூடு நடத்தியது தொடர்பாக இருதரப்பினரும் மாறி மாறி குற்றம்சுமத்துகின்றனர்.
பிரச்னை தீர்ந்தால் சரிதான்
இந்த மோதல் தொடர்ந்து நீடிக்கும் நிலையில், சர்வதேச அரசுகளால் தடைசெய்யப்பட்ட வெடிமருந்துகளை தாய்லாந்து பயன்படுத்துவதாக கம்போடியா குற்றம்சாட்ட, தாய்லாந்தோ நீண்ட தூரம் பயணிக்கும் ராக்கெட்டுகளை பொதுமக்கள் இருக்கும் பகுதிகளில் வீசுவதாக கம்போடியா மீது குற்றம்சுமத்துகிறது. இருநாட்டு தலைவர்களும் எதிர் தரப்பின் மீதே தவறு இருப்பதாகத் தெரிவித்து வரும் சூழலில் இருநாட்டு அதிகாரிகளும் மோதலுக்கான ஏற்பாடுகளைத் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். உதாரணத்திற்கு, 13 ஆண்டுகளில் இல்லாத அளவில், மிக கடுமையாக நடந்துவரும் இந்த மோதலில் இதுவரை 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் 12 பேர் ராணுவ வீரர்கள் மற்றும் 21 பேர் பொதுமக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 1.3 லட்சம் மக்கள் பாதுகாப்புக்காக வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
தாய்லாந்தின் சிஸகெட் மாகாணத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழக வளாகம் தற்காலிக முகாமாக மாற்றப்பட்டுள்ளது. அங்கு 5,000க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசரக் கூட்டத்தை நடத்தி, இரு நாடுகளும் பதற்றத்தைத் தணிக்கவும், நிதானத்தைக் காட்டவும், சர்ச்சையை அமைதியாக தீர்க்கவும் வலியுறுத்தியிருக்கிறது. மேலும், இரு நாடுகளையும் உள்ளடக்கிய 10 நாடுகளின் பிராந்தியக் குழுவான ASEAN குழுவின் தலைவராக இருக்கும் மலேசியாவை மத்தியஸ்தம் செய்யவும் அறிவுறுத்தியிருக்கிறது. மலேசியாவும் ஒப்புக்கொண்டு முன்வந்திருக்கிறது.
எப்படியோ யார் மத்தியஸ்தம் செய்தாவது நூற்றாண்டுகளாக நீடிக்கும் பிரச்னைகள் முடிவுக்கு வந்தால் சரிதான்.