உக்ரைனுக்கு எதிரான போர் | “சமரசத்திற்குத் தயார்” - புதின் திடீர் அறிவிப்பு! காரணம் இதுதானா?
நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது.
உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் நிதி உதவி மற்றும் ஆயுத உதவி அளித்து வருவதால், உக்ரைனும் ரஷ்யாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதற்கிடையே, ரஷ்யாவுக்கு அதன் நட்பு நாடான வடகொரியா ஏவுகணைகள், அணு ஆயுதம் மற்றும் ராணுவ வீரர்கள் உள்ளிட்ட உதவிகளைச் செய்திருப்பதாக அமெரிக்கா, உக்ரைன், தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் உறுதிப்படுத்தியிருந்தன.
இதன் காரணமாக இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர், இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில்கூட, இந்தப் போரினால் ரஷ்யாவின் அணு ஆயுதப் படை தளபதி கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா உள்பட பலநாடுகள் முயன்றன. ஆனால் ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் இன்றுவரை முடிவுக்கு வரவில்லை.
இதற்கிடையேதான் அமெரிக்க அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்ற டொனால்டு ட்ரம்ப் போரை நிறுத்தும் முயற்சியில் ஆர்வம் காட்டி வருகிறார். தாம் பதவியேற்ற அடுத்த 24 மணிநேரத்தில் போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன், ரஷ்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளதாகவும் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் உக்ரைன் விவகாரத்தில் சமரசம் செய்துகொள்ள தயார் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி, அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு ட்ரம்புடன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தவும், உக்ரைன் விவகாரத்தில் சமரசம் செய்துகொள்ளத் தயாராக இருப்பதாகவும், உக்ரைன் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த எந்த நிபந்தனையும் இல்லை என்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்நாட்டு அரசு ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் இத்தகவல் வெளியாகி இருப்பதாகக் கூறப்படுகிறது.
அதேநேரத்தில், ரஷ்யா பலவீனமான நிலையில் உள்ளது என்ற கூற்றுகளை நிராகரித்துள்ள புதின், 2022 உக்ரைன் மீது படையெடுத்ததில் இருந்து நாடு வலுவாக வளர்ந்துள்ளது எனத் தெரிவித்துள்ளார். “இந்தப் போரினால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. மில்லியன் கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் மற்றும் ரஷ்யாவிற்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மோசமாக்கியுள்ளது” எனத் தெரிவித்துள்ள புதின், “உக்ரைனின் ஐந்தில் ஒரு பகுதியை ரஷ்யா கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது” என அவர் தெரிவித்துள்ளார்.