ரஷ்ய தளபதி உயிரிழப்பு| பொறுப்பேற்ற உக்ரைன்.. எச்சரிக்கை விடுத்த ரஷ்யா!
ரஷ்யாவில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் சிக்கி அணுஆயுத பாதுகாப்புப் படையின் தளபதி உயிரிழந்தார். தலைநகர் மாஸ்கோவில் உள்ள குடியிருப்புப் பகுதிக்கு வெளியே இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு ஒன்று வெடித்துச் சிதறியது.
ரஷ்யாவின் அணுஆயுத, ரசாயன பாதுகாப்புப் படைகளின் தலைமை தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் ஐகர் கிரில்லாவ் இந்த குண்டுவெடிப்பில் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இந்த குண்டுவெடிப்பால் குடியிருப்பு கட்டடத்தின் முன்பகுதி இடிந்து சேதமடைந்தது. இதில், மேலும் ஒருவரின் உடல், கட்டட இடிபாடுகளில் இருந்து கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து ரஷ்ய அரசு தீவிரமாக விசாரித்துவந்த நிலையில், கிரில்லாவ் படுகொலைக்கு உக்ரைன் பொறுப்பேற்பதாக அறிவித்து இருப்பதால் பெரும் பரபரப்பு நிலவுகிறது. தங்களது படை வீரருக்கு எதிரான ரசாயன குண்டு தாக்குதல்களின் பின்னணியில் இகோர் கிரில்லாவ் இருப்பதாக உக்ரைன் தொடர்ந்து குற்றச்சாட்டி வந்த நிலையில், அவர் படுகொலை செய்யப்பட்டது ரஷ்யாவை ஆத்திரமடைய செய்துள்ளது. இகோர் படுகொலை தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கும் ரஷ்ய பாதுகாப்புப் படை இதற்கான பின்விளைவுகளை உக்ரைன் விரைவில் சந்திக்கும் எனக் கூறியுள்ளது. இதனால், போர் மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து புடினின் செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ், "கீவ் ஆட்சி பயங்கரவாத முறைகளில் இருந்து பின்வாங்கவில்லை என்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு யார் உத்தரவிட்டது என்பது இப்போது தெளிவாகத் தெரிகிறது. உக்ரைன் மீது 2022-இல் ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியது சரிதான் என்பதற்கு கிரில்லாவின் மரணம் ஒரு சான்று" என கண்டனம் தெரிவித்துள்ளார்.