உக்ரைனுக்கு ஆயுத ஏற்றுமதியை இருமடங்காக அறிவித்த ஜெர்மனி.. இஸ்ரேலுக்குக் குறைப்பு!
நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் நிதி உதவி மற்றும் ஆயுத உதவி அளித்து வருவதால், உக்ரைனும் ரஷ்யாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.
இதற்கிடையே, ரஷ்யாவுக்கு அதன் நட்பு நாடான வடகொரியா ஏவுகணைகள், அணு ஆயுதம் மற்றும் ராணுவ வீரர்கள் உள்ளிட்ட உதவிகளைச் செய்திருப்பதாக அமெரிக்கா, உக்ரைன், தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் உறுதிப்படுத்தியிருந்தன. இதன் காரணமாக இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர், இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில்கூட, இந்தப் போரினால் ரஷ்யாவின் அணு ஆயுதப் படை தளபதி கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ஜெர்மானிய அரசு, நடப்பாண்டில் உக்ரைனுக்கான ஆயுத ஏற்றுமதியை இருமடங்காக அதிகரித்து, இஸ்ரேலுக்கு அதை பாதியாகக் குறைத்துள்ளது. ஜெர்மானிய பொருளாதார அமைச்சகத்தின் டிசம்பர் 18, 2024 வரை வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில், இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஜெர்மனியில் இருந்து மொத்தம் 8.1 பில்லியன் யூரோக்கள் மதிப்பிலான ஆயுதங்கள் மற்றும் ராணுவ உபகரணங்கள் உக்ரைனுக்கு வழங்கப்பட்டுள்ளன. இது 2023-இல் வழங்கப்பட்ட 4.4 பில்லியன் யூரோக்களைவிட இருமடங்கு அதிகம். இஸ்ரேலுக்கு ஏற்றுமதி 2024-இல் 161 மில்லியன் யூரோக்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. இது 2023-இல் இருந்த 326.5 மில்லியன் யூரோக்களுடன் ஒப்பிடுகையில் பாதியாக குறைந்துள்ளது.
சிங்கப்பூருக்கு 1.2 பில்லியன் யூரோக்களுக்கும், அல்ஜீரியாவுக்கு சுமார் 559 மில்லியன் யூரோக்களுக்கும் ஏற்றுமதி அனுமதிக்கப்பட்டுள்ளது. துருக்கிக்கு 230 மில்லியன் யூரோக்கள் மதிப்பிலான ஆயுத ஏற்றுமதி அனுமதி பெறப்பட்டுள்ளது. ஜெர்மானிய அரசு ஒவ்வொரு ஆயுத ஏற்றுமதிக்கும் தனிப்பட்ட ஆய்வுகளை மேற்கொண்டு அனுமதி வழங்குகிறது. உக்ரைனுக்கு ராணுவத் தளவாடங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடுகளில் ஜெர்மனியும் ஒன்று.
அந்த வகையில், நடப்பாண்டில் ஜெர்மனியின் முக்கிய ஆயுத ஏற்றுமதி நாடாக உக்ரைன் உள்ளது. இதுவரை உக்ரைனுக்கு ராணுவ டாங்கிகள், IRIS-T மற்றும் பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்புகள், MARS II மற்றும் M142 HIMARS MLRS, சுயமாக இயக்கப்படும் விமான எதிர்ப்பு துப்பாக்கிகள், கவச வாகனங்கள் எனப் பலவகையான தளவாடங்களை ஜெர்மனி வழங்கியுள்ளது. இதுதவிர, ஜெர்மனியில் 10,000க்கும் மேற்பட்ட உக்ரைன் வீரர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். இதற்காக ஜெர்மனி அரசு 282 மில்லியன் யூரோக்களை செலவிட்டுள்ளது.