அதிபர் தேர்தலில் வெற்றி.. ரஷ்ய வரலாற்றில் புதிய சாதனைக்கு தயாராகும் புடின்! யுஎஸ் கருத்து இதுதான்!

ரஷ்யாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அந்நாட்டின் அதிபரான விளாடிமிர் புடினே, மீண்டும் வெற்றிபெற்றுள்ளார்.
putin
putinpt desk

ரஷ்யாவில் 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் நடத்தப்படுகிறது. அந்நாட்டின் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த மார்ச் 15ஆம் தேதி தொடங்கி மூன்று நாள்கள் நடைபெற்றது. இந்தத் தேர்தலுக்காக ரஷ்யாவின் 11 நேர மண்டலங்களிலும் அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதேபோல் வெளிநாடுகளில் வாழும் ரஷ்யர்கள் அந்தந்த நாடுகளில் உள்ள தூதரகங்கள், துணை தூதரகங்களுக்கு சென்று வாக்களித்தனர். இந்தியாவில்கூட கேரளாவில் ரஷ்யர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும், மின்னஞ்சல் வாயிலாகவும் வாக்குகள் செலுத்தப்பட்டன.

இந்தத் தேர்தலில், முதன்முறையாக ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட உக்ரைன் பகுதிகளில் உள்ள மக்கள் வாக்களித்தனர். இவ்விரு நாடுகளுக்கு இடையே கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக போர் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. எனினும், கவனத்தை ஈர்த்த இந்த தேர்தலில் நான்குமுனை போட்டி நிலவியது. அதிபர் புதின் சுயேட்சையாக போட்டியிடும் சூழலில் கம்யூனிஸ்ட் கட்சி, தேசிய சுதந்திர ஜனநாயக கட்சி, புதிய மக்கள் கட்சி ஆகியவை களத்தில் இருந்தன. வலுவான எதிர்க்கட்சி வேட்பாளர் இல்லாததால் புதினே மீண்டும் அதிபராக வெற்றி பெறுவார் என்று கருத்துக்கணிப்புகளும் தெரிவித்தன.

இந்த நிலையில், ரஷ்யாவில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான பொதுத் தேர்தல் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, தேர்தல் முடிவுகள் வெளியாகின. அதன்படி, ரஷ்ய அதிபர் தேர்தலில் விளாடிமிர் புடின் 88 சதவீத வாக்குகளுடன் வெற்றிபெற்றிருப்பதாக அதிகாரப்பூர்வ முடிவுகள் தெரிவித்துள்ளன.

இதன்மூலம் விளாடிமிர் புடின் 5வது முறையாக வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு, வருகிற மே மாதம் 7ஆம் தேதி பதவி பிரமாணம் செய்து வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் தேர்தலில் வெற்றிபெற்ற புடினுக்குப் பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். இந்தியப் பிரதமர் மோடி, ‘ரஷ்ய கூட்டமைப்பின் அதிபராக விளாடிமிர் புதின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ’ரஷ்யாவைத் தாக்கினால்..’ அமெரிக்கா, NATO-க்கு எதிராக களத்தில் குதித்த சீனா.. திடீர் ஆதரவு ஏன்?

கடந்த 24 ஆண்டுகளாக உலகின் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவராகப் பார்க்கப்படும் புடின், அடுத்த 7 ஆண்டுகளுக்கும் அதிபராக நீடிக்கவுள்ளார். இதன்மூலம், ரஷ்ய வரலாற்றில் கடந்த 200 ஆண்டுகளில் எந்த தலைவரும் இல்லாத வகையில், நீண்டகாலம் உச்சபட்ச பதவியில் இருந்தவர் என்ற பெருமையை புதின் பெற்றுள்ளார். 71 வயதான புடின், ஜோசப் ஸ்டாலினைவிட அதிக காலங்களுக்கு ஆட்சி செய்த பெருமையை இதன்மூலம் பெறுகிறார்.

புடின்
புடின்

அதேநேரத்தில், ரஷ்ய தேர்தல்களின் நம்பகத் தன்மை குறித்து அமெரிக்கா கேள்வி எழுப்பியுள்ளது. அதிபர் புடின் வெற்றி பெற்றது குறித்து வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர், "புடின் அரசியல் எதிரிகளை சிறையில் அடைத்து, மற்றவர்கள் தனக்கு எதிராகப் போட்டியிடுவதைத் தடுத்துள்ளதால், தேர்தல்கள் சுதந்திரமாகவோ அல்லது நியாயமானதாகவோ நடக்க வாய்ப்பில்லை என்பது தெளிவாகிறது" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ’இங்கே கத்தாதீங்க..இது கோர்ட்’ - தேர்தல்பத்திர வழக்கில் வழக்கறிஞரை எச்சரித்த தலைமை நீதிபதி! வீடியோ

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com