"ஊருக்கு போனா அவ்வளவுதான்" : எச்சரிக்கை விடுத்த பாக். அமைச்சர்.. அதிர்ந்து போன பெண் பத்திரிகையாளர்!
தற்போது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐக்கிய நாடுகள் அவையின் 81-வது பொதுச்சபை கூட்டம் நடைபெற்று வருகிறது.. இந்த கூட்டத்தில் பங்கேற்க உலகம் முழுவதும் இருந்து பல்வேறு நாடுகளின் தலைவர்கள் அமெரிக்காவுக்கு வருகை தந்துள்ளனர்.
அந்த வகையில் இந்த கூட்டத்தில் பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப்பும் கலந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஒரு பெண் பத்திரிகையாளர் அவரிடம், "ஆப்கானிஸ்தான் பெண்களுக்கான தலிபான்களின் கடுமையான கொள்கைகள் குறித்து பாகிஸ்தானின் தற்போதைய நிலைப்பாடு என்ன? ஆரம்பத்தில் தலிபான்கள் உங்களுடன் நட்பாக இருந்தபோதே அவர்களிடம் இதுகுறித்து பேசியிருக்கலாமே" என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு அந்தப் பெண்ணின் ஆடையைச் சுட்டிக்காட்டிய பாகிஸ்தான் அமைச்சர், "இப்படிப்பட்ட ஆடையுடன் மீண்டும் ஆப்கானிஸ்தானுக்கு திரும்பிச் செல்லாதீர்கள், இல்லையெனில் அவர்கள் உங்களை" என்று கூறி தனது கழுத்தை அறுப்பது போலச் சைகை செய்தார். இதை கேட்டு அங்கிருந்தவர்கள் சிரித்தனர்.
இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளத்தில் வெளியானதும் பல்வேறு தரப்பினரும் பாகிஸ்தான் அமைச்சரையும், உடனிருந்தோரையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தாலிபானின் நீண்ட நாள் ஆதரவு சக்தியாக இருந்த பாகிஸ்தான் தாலிபான் மீண்டும் ஆப்கானிஸ்தானை கைப்பற்ற பல்வேறு உதவிகளையும் செய்தது.
பின்னர் ஆப்கானிஸ்தானை தாலிபான் கைப்பற்றியதும் அங்கு பெண்களுக்கு கல்வி கற்க, வேலை செய்ய, ஆடை அணிய பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. எனினும் தற்போது தாலிபான் மற்றும் பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்டு இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

