இம்ரான் கான் பற்றிய செய்தி | உண்மையை வெளியிட்ட பாகி... உலகிற்கு மகன் வைத்த கோரிக்கை!
முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மரணம் குறித்த செய்தியில் பாகிஸ்தான் உண்மை சரிபார்ப்பை மேற்கொண்டுள்ளது. அதேநேரத்தில், தனது தந்தையின் ஆரோக்கியம் குறித்த செய்தியை வெளியிட இம்ரானின் மகன் கோரிக்கை வைத்துள்ளார்.
பாகிஸ்தானில் பரவிய இம்ரான் பற்றிய செய்தி!
அண்டை நாடான பாகிஸ்தானில் கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறியவர் இம்ரான் கான். முன்னாள் பிரதமரான இவர், ஊழல் உட்பட பல வழக்குகளில் சிக்கி, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகத் தனிமைச் சிறையில் உள்ளார். இதற்கிடையே, ’இம்ரான் கான் சிறையில் மர்மமான முறையில் கொல்லப்பட்டார் என்றும் அவரது உடல் சிறையிலிருந்து வெளியே கொண்டு செல்லப்பட்டது’என்றும் ஆப்கானிஸ்தான் டைம்ஸ் தெரிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து இம்ரான் கான் மரணம் குறித்த செய்தி உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதற்குத் தகுந்தாற்போல் அவருடைய சகோதரிகள் மூவர், ’இம்ரானைக் கானைச் சந்திக்க நீதிமன்ற ஆணைகள் இருந்தும் சந்திக்க முடியவில்லை. சிறை நிர்வாகம் அனுமதிக்க மறுக்கிறது’ எனக் குற்றஞ்சாட்டியிருந்தது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
ஆனால், இதை மறுத்த சிறை நிர்வாகம் ’இம்ரான் கான் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும், சிறையிலேயே இருப்பதாகவும் அவருடைய உடல்நிலை குறித்த ஊகங்கள் ஆதாரமற்றவை என்றும், அவருக்கு முழுமையான மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது. தவிர, இம்ரான் கானுடன் அவரது சகோதரிகள் சந்திக்க ஒரு ஏற்பாடு செய்யப்படு எனவும் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், இம்ரான் கானின் மகன் காசிம் கான், தனது தந்தை உயிரோடு இருப்பதற்கான ஆதாரத்தையும், அவரது விடுதலையையும் கோரியுள்ளார்.
உலகிற்கு இம்ரான் கான் மகன் வைத்த கோரிக்கை
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தனது தந்தை சிறையில் அடைக்கப்பட்டு 845 நாட்கள் ஆகின்றன. கடந்த ஆறு வாரங்களாக, அவர் முழுமையான தனிமைப்படுத்தப்பட்ட சூழலில் ஒரு மரண அறையில் தனியாக வைக்கப்பட்டுள்ளார். தெளிவான நீதிமன்ற உத்தரவுகள் இருந்தபோதிலும், அவரது சகோதரிகள் அவரைச் சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளனர். தொலைபேசி அழைப்புகள் இல்லை, சந்திப்புகள் இல்லை, அவரது ஆரோக்கியம் பற்றிய செய்தியும் இல்லை. என் சகோதரனும் நானும் எங்கள் தந்தையை எந்த வகையிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்த முழுமையான இருள், எந்த பாதுகாப்பு நெறிமுறையின் ஒரு பகுதியாகவும் இல்லை.
இது எனது தந்தையின் நிலையை மறைத்து, அவரது குடும்பத்தினர் அவர் இருக்கும் இடத்தை அறிந்துகொள்வதைத் தடுக்கும் வகையில் வேண்டுமென்றே மேற்கொள்ளப்படும் ஒரு முயற்சி ஆகும். எனது தந்தையின் பாதுகாப்பிற்கும் இந்த மனிதாபிமானமற்ற தனிமைப்படுத்தலின் ஒவ்வொரு விளைவுக்கும் பாகிஸ்தான் அரசாங்கமும் அதன் ஆட்சியாளர்களும் முழு சட்ட, தார்மீக மற்றும் சர்வதேச பொறுப்பையும் ஏற்க வேண்டும். இந்த விஷயத்தில், சர்வதேச சமூகமும், சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் தலையிட வேண்டும்” என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
இம்ரான் கானின் சகோதரியான நோரீன் நியாசி, ”சிறையில் தனது சகோதரரின் நிலை குறித்த தகவல்களை அதிகாரிகள் வேண்டுமென்றே மறைத்து வருகின்றனர். கடந்த நான்கு வாரங்களாக அவரைச் சந்திக்க எங்களுக்கு அனுமதி இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
இம்ரான் கான் குறித்து பாகி. உண்மை சரிபார்ப்பு!
இதற்கிடையே, ’இம்ரான் கான் சிறையில் கொல்லப்பட்டார்’ என்ற தவறான கூற்றுக்களை பாகிஸ்தானின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் (MOIB) மறுத்துள்ளது. "இம்ரான் காவலில் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் மாற்றப்பட்டதாகவும் ஒரு சரிபார்க்கப்படாத வதந்தியை பெயர் குறிப்பிடாத ஆப்கானிய கணக்குகள் பரப்பின. 2013 மற்றும் 2022ஆம் ஆண்டுகளின் இரண்டு பழைய புகைப்படங்களை 'புதிய ஆதாரமாக' பயன்படுத்தி இந்த வதந்தி மீண்டும் மீண்டும் பரப்பப்பட்டன" என்று அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ உண்மைச் சரிபார்ப்புப் பிரிவு எக்ஸ் தளத்தில் தெரிவித்ததாக டான் செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்ட்ரெச்சரில் இருக்கும் இம்ரானின் புகைப்படம், நவம்பர் 4, 2022 அன்று வஜிராபாத்தில் அவர் மீதான கொலை முயற்சியின்போது எடுக்கப்பட்டது என்று அதில் கூறப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் இம்ரான் சிறையில் அடைக்கப்படுவதற்கு முந்தையது மற்றும் சிறை அல்லது காவலுடன் எந்த தொடர்பும் இல்லை என்று அது கூறியுள்ளது.
அதேபோல் பிரதமரின் அரசியல் விவகார ஆலோசகர் ராணா சனாவுல்லாவும், இம்ரான் கான் நன்றாக இருப்பதாகவும், அவரது உடல்நிலை கவனித்துக் கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இம்ரான் கான் மரணம் பற்றிய செய்திகளை PTI தலைவர் அலி ஜாஃபரும் நிராகரித்துள்ளார். அவர், "இந்த செய்தி ஆதாரமற்றது, ஆனால் இந்த அறிக்கைக்குப் பிறகு அரசாங்கம் உடனடியாக எங்களைச் சந்திக்கும் வாய்ப்பை அனுமதிப்பது இன்னும் முக்கியமானது. அதன்மூலம் நாங்கள் சென்று அவரைப் பார்க்க முடியும்" என்றார்.

