தண்டனையை நிறுத்தி வைத்த நீதிமன்றம்; ஆனாலும் இம்ரான் கான் சிறையிலிருந்து விடுதலையாவதில் சிக்கல்!

அரசின் முக்கிய ஆவணம் காணாமல் போன விவகாரம் தொடர்பான வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கான நீதிமன்றக் காவல் செப்டம்பர் 14ஆம் நாள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இம்ரான் கான்
இம்ரான் கான்கோப்புப் படம்

நம் அண்டை நாடான பாகிஸ்தானில், பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான் ஆட்சி கவிழ்ப்புக்குப் பிறகு, அந்நாட்டின் பிரதமராக ஷபாஸ் ஷெரீப் உள்ளார். ஷபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக இம்ரான்கான் அவ்வப்போது தன் ஆதரவாளர்களைத் திரட்டி போராட்டத்தில் ஈடுபட்டும் வருகிறார்.

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் இம்ரான் கானுக்கு எதிராக, ஊழல், பண மோசடி உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பிரதமராக பதவி வகித்த காலத்தில் கிடைத்த பரிசுப் பொருள்களை விற்று சொத்தாக்கிய வழக்கில் அவர் குற்றவாளி என்று இஸ்லாமாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இம்ரான் கான் தேர்தலில் போட்டியிட 5 ஆண்டுகள் தடையும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். தனக்கு எதிராக வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து இம்ரான் நீதிமன்றத்தில் வழக்கை நடத்தி வருகிறார்.

இந்த வழக்கில் இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு கால சிறைத் தண்டனையை நிறுத்திவைத்து நேற்று (ஆகஸ்ட் 29) இஸ்லாமாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இருப்பினும் தற்போது அரசு ஆவணம் காணாமல்போன வழக்கில் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், இம்ரான் கான் சிறையில் இருந்து வெளிவருவதில் சிக்கல் நீடிக்கிறது.

வரும் செப்டம்பர் 2ஆம் தேதி இம்ரான் கான் தரப்பில் பிணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு வருவதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், இம்ரான் கான் அடைக்கப்பட்டுள்ள அட்டோக் சிறைக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com