தொடர் தாக்குதல் | ஈரானை அமெரிக்கா வீழ்த்துவது எப்படி? வெளியான ரகசியம்!
அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் அமெரிக்க ராணுவத்தில் ஏஐ தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்துவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக, 2023 அக்டோபர் முதல் 72,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களைக் கொன்று, பெரும்பாலான பிரதேசங்களை இடிபாடுகளாக மாற்றிய காஸா மீதான இனப்படுகொலைப் போரின்போது இஸ்ரேல் AI தொழில்நுட்பத்தையே பெரிதும் நம்பியிருந்தது என்பதை பல அறிக்கைகள் உறுதிப்படுத்தியுள்ளன.
அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திடாத நிலையில், இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் தாக்குதலைத் தொடுத்தன. இந்த தாக்குதலில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஈரானை ஆட்சி புரிந்துவந்த அந்நாட்டின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இது, உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து ஈரானும் பதிலுக்குத் தாக்கத் தொடங்கியது. இதனால், வளைகுடா நாடுகளில் தொடர்ந்து போர்ப் பதற்றம் நிலவி வருகிறது. இன்றுடன் 14ஆவது நாளை எட்டியுள்ள இந்தப் போர், மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் பரவியுள்ளது. இந்த நிலையில், ஈரானுக்கு எதிரான் போரில் அமெரிக்கா, ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவின் (CENTCOM) தலைவரான பிராட் கூப்பர், “எங்கள் போர் வீரர்கள் பல்வேறு மேம்பட்ட AI கருவிகளைப் பயன்படுத்துகின்றனர். பல மணிநேரம் அல்லது நீண்ட நாட்கள் எடுக்கக்கூடிய தரவு ஆய்வுகளை, ஏஐ மூலம் சில நொடிகளில் முடிக்க முடிகிறது. இதனால் எங்கள் வீரர்கள் சத்தத்தைக் குறைத்து எதிரி எதிர்வினையாற்றுவதைவிட வேகமாக புத்திசாலித்தனமான முடிவுகளை எடுக்கிறார்கள். ஆனால் இலக்குகளைத் தாக்குவது குறித்த இறுதி முடிவை எப்போதும் ராணுவ வீரர்களே எடுப்பார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் அமெரிக்க ராணுவத்தில் ஏஐ தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்துவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக, 2023 அக்டோபர் முதல் 72,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களைக் கொன்று, பெரும்பாலான பிரதேசங்களை இடிபாடுகளாக மாற்றிய காஸா மீதான இனப்படுகொலைப் போரின்போது இஸ்ரேல் AI தொழில்நுட்பத்தையே பெரிதும் நம்பியிருந்தது என்பதை பல அறிக்கைகள் உறுதிப்படுத்தியுள்ளன. அந்த இஸ்ரேலுக்கு முழுக்கமுழுக்க அமெரிக்காவே உதவி செய்தது குறிப்பிடத்தக்கது. அதையேதான் இந்தப் போரிலும் அமெரிக்காவும் இஸ்ரேலும் பயன்படுத்துவதாகத் தெரிய வந்துள்ளது. இதற்கிடையே, சமீபத்தில் தனது ஏஐ மாடல்களை தானியங்கி ஆயுதங்களாகவோ அல்லது உளவு வேலைகளுக்கோ பயன்படுத்தக் கூடாது என்று ஆந்த்ரோபிக் நிறுவனம் பிடிவாதம் காட்டியது. இதையடுத்து, அந்த நிறுவனத்தை Supply Chain Risk என டிரம்ப் நிர்வாகம் பட்டியலிட்டது. எனினும், அந்த ஒப்பந்தத்தை ஓபன் ஏஐ கைப்பற்றியது.
இதற்கிடையே பிப்ரவரி 28 முதல் தொடங்கி நடைபெற்று வரும் இந்த அமெரிக்க - இஸ்ரேலிய தாக்குதலில் இதுவரை 1,300 பேர் ஈரானில் கொல்லப்பட்டுள்ளனர். இதில் தெற்கு ஈரானில் உள்ள பெண்கள் தொடக்கப் பள்ளியின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 175 சிறுமிகள் கொல்லப்பட்டனர். இந்தப் பள்ளிமீது தாக்கப்பட்ட ஏவுகணை அமெரிக்காவைச் சேர்ந்தது என்பதற்கான ஆதாரங்கள் வெளியாகி உள்ளன. இது, பழைய உளவு தகவல்களால் தவறுதலாக ராணுவ தளத்திற்கு பதிலாக அருகில் உள்ள பள்ளி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அமெரிக்க ராணுவம் உள்விசாரணை நடத்தி வருகிறது. இந்த பழைய உளவு தகவலை ஏஐதான் வழங்கியதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஒருவேளை ஏஐ வழங்கிய தவறான தகவலால் இந்த தாக்குதல் நடந்திருந்தால் அது மனிதகுலத்துக்கே ஆபத்தாக முடியும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
ராணுவத்தில் கட்டுப்பாடற்ற முறையில் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து சீனா எச்சரித்துள்ளது. ”மற்ற நாடுகளின் இறையாண்மையை மீற AI-ஐப் பயன்படுத்துவது, மரணத்தை தீர்மானிக்கும் அதிகாரத்தை அல்காரிதம்களிடம் கொடுப்பது தார்மீக ரீதியான சிதைவாகும். இந்த நிலை தொடர்ந்தால், 'டெர்மினேட்டர்' திரைப்படத்தில் வருவதுபோல இயந்திரங்கள் மனிதர்களுக்கு எதிராகத் திரும்பி, உலகம் அழியும் சூழல் நிஜமாகிவிடும்" என சீன பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜியாங் பின் தெரிவித்துள்ளார்.

