தொடரும் போர் | 3 நிபந்தனைகள் விதித்த ஈரான்.. ஒப்புக்கொள்ளுமா அமெரிக்கா?
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக, ஈரானை அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்கி வருகின்றன. எனினும், ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில், போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியன் மூன்று நிபந்தனைகளை விதித்துள்ளார்.
அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திடாத நிலையில், இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் தாக்குதலைத் தொடுத்தன. இந்த தாக்குதலில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஈரானை ஆட்சி புரிந்துவந்த அந்நாட்டின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இது, உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து ஈரானும் பதிலுக்குத் தாக்கத் தொடங்கியது. இதனால், வளைகுடா நாடுகளில் தொடர்ந்து போர்ப் பதற்றம் நிலவி வருகிறது. இன்றுடன் 13ஆவது நாளை எட்டியுள்ள இந்தப் போர், மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் பரவியுள்ளது.
உலகளாவிய எண்ணெய் ஏற்றுமதியில் சுமார் 40% பங்கு மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து குறிப்பாக வளைகுடா நாடுகளில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் நிலையில், அந்த வர்த்தகம் பெரும்பாலும் முடங்கியுள்ளது. இதனால் கச்சா எண்ணெய்க்கு உலகளவில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. இதனால், இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் சமையல் எரிவாயுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், ”சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் எண்ணெய்ப் போக்குவரத்தை நிறுத்தும் முயற்சியில் ஈரான் ஈடுபட்டால், இதுவரை எதிர்கொண்டதைவிட 20 மடங்கு மிகக் கடுமையான தாக்குதலை அமெரிக்கா தொடுக்கும். மேலும் அத்தகைய தாக்குதலுக்குப் பிறகு, ஈரான் மீண்டும் ஒரு நாடாக உருவெடுப்பது என்பது நினைத்துக்கூடப் பார்க்க முடியாத ஒன்றாக மாறிவிடும்” என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். ஈரானும் அதற்குத் தக்க பதிலடி கொடுத்திருந்தது. உலகப் பொருளாதாரத்தை அழிக்கும் வகையிலான நீண்டகாலப் போருக்கு தயாராக இருப்பதாக அறிவித்த ஈரான், ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் கப்பல்களைத் தாக்குவோம் எனவும் மிரட்டியது. இதற்கிடையே, ஈரானிய அதிபர் மசூத் பெசஸ்கியன், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான மூன்று நிபந்தனைகளை அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், “சியோனிச ஆட்சி மற்றும் அமெரிக்காவால் தூண்டிவிடப்பட்ட இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரே வழி, ஈரானின் சட்டபூர்வமான உரிமைகளை அங்கீகரிப்பது, இழப்பீடுகளை வழங்குவது மற்றும் எதிர்கால ஆக்கிரமிப்புக்கு எதிரான உறுதியான சர்வதேச உத்தரவாதங்கள்தான்" எனத் தெரிவித்துள்ளார். ஈரானின் சட்டப்பூர்வமான உரிமைகள் குறித்து அவர் விரிவாகக் கூறவில்லை என்றாலும், அமைதியான அணுசக்தி திட்டத்தை உருவாக்குவதற்கான உரிமை அதற்கு உள்ளது என்று அந்த நாடு பலமுறை வலியுறுத்தி வருகிறது. தவிர, இதற்கான அமெரிக்க ஒப்பந்தத்திலும் ஈரான் கையெழுத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில், ஈரானின் இந்த 3 நிபந்தனைகள் குறித்து அமெரிக்கா எந்தப் பதிலும் தெரிவிக்கவில்லை.

