எரிபொருள் தட்டுப்பாடு | இந்தியாவுக்கு சலுகை காட்டிய ஈரான்.. விரைவில் வரும் எண்ணெய்!
இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் தாக்குதல்களால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தாக்குதல் காரணமாக, ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியுள்ளது. இதனால், உலகம் முழுவதும் எண்ணெய் வர்த்தகம் பெரும்பாலும் முடங்கியுள்ளது. இந்த நிலையில், இந்தியக் கொடி ஏந்திய கப்பல்களை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்ல ஈரான் அனுமதி வழங்கியுள்ளது.
இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் தாக்குதல்களால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அதிலும், ஈரானின் உச்சபட்ச தலைவர் அலி காமேனி மரணத்திற்குப் பிறகு ஈரானின் தாக்குதல் வேகம் பிடித்துள்ளது. இன்றுடன் 13ஆவது நாளை எட்டியுள்ள இந்தப் போரால், உலகளாவிய எண்ணெய் ஏற்றுமதியில் சுமார் 40% பங்கு மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து குறிப்பாக வளைகுடா நாடுகளில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் நிலையில், அந்த வர்த்தகம் பெரும்பாலும் முடங்கியுள்ளது. குறிப்பாக, தாக்குதல் காரணமாக, ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியானது, பாரசீக வளைகுடாவையும் ஓமன் வளைகுடாவையும் இணைக்கிறது. இதன் குறுகிய பகுதி சுமார் 33 கிலோமீட்டர் அகலம் மட்டுமே கொண்டது.
இந்தப் பாதையின் வடக்குக் கரை முழுவதையும் ஈரான் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. பாரசீக வளைகுடாவின் நுழைவாயிலில் அமைந்துள்ள ஹார்முஸ் ஜலசந்தி, மத்திய கிழக்கின் எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை உலகச் சந்தைகளுக்கு கொண்டு செல்வதற்கான முக்கிய வழித்தடமாக உள்ளது. உலகின் தினசரி எண்ணெய் தேவையில் சுமார் 20 சதவீதம், அதாவது 20 மில்லியன் பீப்பாய்கள், இந்த வழித்தடத்தில்தான் கொண்டு செல்லப்படுகின்றன. சீனா, இந்தியா, தென் கொரியா, ஜப்பான் போன்ற முக்கிய ஆசியச் சந்தைகள் ஹார்முஸ் வழியான எண்ணெய்யை அதிகம் சார்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இதை ஈரான் மூடியிருப்பதால், உலக எண்ணெய் விநியோகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த மூலோபாய நீர்வழியைக் கடக்க முயற்சிக்கும் எந்தவொரு கப்பலும் தாக்கப்படும் என ஈரான் அரசு எச்சரித்திருந்தது. இதனால், இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் சமையல் எரிவாயுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனினும், எண்ணெய் மற்றும் எரிபொருள் நெருக்கடியைச் சமாளிக்க இந்தியா போதுமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுதொடர்பாக வரும் வதந்திகளையும் நம்ப வேண்டாம் என மத்திய அரசு பொதுமக்களிடம் அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில், வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியக் கொடி ஏந்தி வரும் கப்பல்கள், ஹார்முஸ் நீரிணையைக் கடக்க ஈரான் அனுமதி வழங்கியுள்ளது. ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியுடன் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில் இந்தியாவின் எரிசக்தி விநியோகம் தடையின்றி இருப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு இந்த விவாதங்கள் நடத்தப்பட்டன. இதையடுத்து, இந்தியாவின் Pushpak, Parimal கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேநேரத்தில், இந்திய கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையைப் பயன்படுத்த தொடர்ந்து அனுமதித்ததாகக் கூறப்பட்டாலும், அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இஸ்ரேலுடன் இணைக்கப்பட்ட கப்பல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

