ஹங்கேரி எழுத்தாளருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு.. அமைதிக்கான பரிசு ட்ரம்புக்கு கிடைக்குமா?
இன்று மாலை அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட இருக்கிறது. அது, ட்ரம்புக்கு கிடைக்குமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
உலகில் பல்வேறு துறைகளில் தலைசிறந்து விளங்கும் நபர்களைத் தேர்வுசெய்து அவர்களுக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டு வருகிறது. ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரெட் நோபல் நினைவாக, ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் என 6 துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. நடப்பு ஆண்டுக்கான விருதுகள் கடந்த அக்டோபர் 6ஆம் தேதி முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2025-ஆம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு, உடலில் உள்ள நோயெதிர்ப்பு அமைப்பானது, அதன் சொந்த உடல் உறுப்புகளைத் தாக்காமல் எப்படி கட்டுக்குள் வைக்கிறது என்ற ஆராய்ச்சிக்காக மேரி இ.பிரன்கோவ், பிரெட் ராம்ஸ்டெல் மற்றும் ஷிமோன் சகாகுச்சி என்ற 3 மருத்துவ வல்லுநர்களுக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, இயற்பியலுக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் எம்.மார்டினிஸ், பிரிட்டனைச் சேர்ந்த ஜான் கிளார்க், பிரான்ஸைச் சேர்ந்த மைக்கேல் டெவோரெட் ஆகியோருக்கு வழங்கப்பட இருக்கிறது. குவாண்டம் ஊடுருவல் குறித்த ஆய்வுக்காக அவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதனைத் தொடர்ந்து, ஜப்பானைச் சேர்ந்த க்யோடோ பல்கலை பேராசிரியர் சுசுமு கிடகவா, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மெல்போர்ன் பல்கலை பேராசிரியர் ரிச்சர்ட் ராப்சன், அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலை பேராசிரியர் ஒமர் எம்.யாகி ஆகியோருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. கார்பன் அடிப்படையிலான மூலக்கூறுகள் இணைந்து உருவாக்கும் ஒரு புதிய வகை மூலக்கூறு கட்டமைப்பைக் கண்டுபிடித்ததற்காக இந்தப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, 2025-ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாஹோர்காய்க்கு வழங்கப்படவுள்ளது. பயங்கரவாதத்திற்கு மத்தியில் கலைத்திறனை உறுதிப்படுத்திய தொலைநோக்குப் பார்வைக்காக இவ்விருது அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று மாலை அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த விருதை அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு வழங்க வேண்டும் என பாகிஸ்தான், இஸ்ரேல், கம்போடியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
என்றாலும், அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு வழங்கப்படவேண்டும் என விதியை 1895ஆம் ஆண்டு ஸ்வீடன் தொழிலதிபர் ஆல்ஃபிரட் நோபல் வகுத்து வைத்துள்ளார். ஒவ்வொரு ஆண்டுக்கான விருதுக்கும் விண்ணப்பங்கள் ஜனவரி 31ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஆனால் ட்ரம்புக்கான பரிந்துரை ஜனவரி 31க்குப் பிறகே அளிக்கப்பட்டுள்ளதால் இந்தாண்டுக்கான விருதுக்கு ட்ரம்ப் தகுதி படைத்தவர் அல்ல. விதிகள்படி அடுத்தாண்டுதான் அவரது பெயர் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். எனினும் விதிகளில் மாற்றம் செய்யப்பட்டால் ட்ரம்ப்பின் பெயரை இந்தாண்டே பரிசீலிக்கலாம் என்று நிபுணர்கள் சிலர் கூறி வருகின்றனர். வியக்கத்தக்க வகையில் ட்ரம்ப் பெயர் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு விருது அறிவிக்கப்படவும் வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. அவர் பதவியேற்றபிறகு 8 போர்களை நிறுத்தியதற்காக, அமைதிக்கான நோபல் பரிசை தனக்கே வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.