நோபல் 2025 | வேதியியலுக்கான பரிசு மூவருக்கு அறிவிப்பு!
வேதியியலுக்கான நோபல் பரிசு சுசுமு கிடகாவா, ரிச்சர்ட் ராப்சன் மற்றும் ஒமர் எம்.யாகி ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் பல்வேறு துறைகளில் தலைசிறந்து விளங்கும் நபர்களைத் தேர்வுசெய்து அவர்களுக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டு வருகிறது. ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரெட் நோபல் நினைவாக, ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் என 6 துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. நடப்பு ஆண்டுக்கான விருதுகள் கடந்த அக்டோபர் 6ஆம் தேதி முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், முதலில் மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. 2025-ஆம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு, உடலில் உள்ள நோயெதிர்ப்பு அமைப்பானது, அதன் சொந்த உடல் உறுப்புகளைத் தாக்காமல் எப்படி கட்டுக்குள் வைக்கிறது என்ற ஆராய்ச்சிக்காக மேரி இ. பிரன்கோவ் (Mary E.Brunkow), பிரெட் ராம்ஸ்டெல் (Fred Ramsdell) மற்றும் ஷிமோன் சகாகுச்சி (Shimon Sakaguchi) என்ற 3 மருத்துவ வல்லுநர்களுக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, இயற்பியலுக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் எம்.மார்டினிஸ், பிரிட்டனைச் சேர்ந்த ஜான் கிளார்க், பிரான்ஸைச் சேர்ந்த மைக்கேல் டெவோரெட் ஆகியோருக்கு வழங்கப்பட இருக்கிறது. இந்த மூன்று விஞ்ஞானிகளும் தற்போது அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகின்றனர். குவாண்டம் ஊடுருவல் குறித்த ஆய்வுக்காக அவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், இன்று இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
அதன்படி, ஜப்பானைச் சேர்ந்த க்யோடோ பல்கலை பேராசிரியர் சுசுமு கிடகவா, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மெல்போர்ன் பல்கலை பேராசிரியர் ரிச்சர்ட் ராப்சன், அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலை பேராசிரியர் ஒமர் எம்.யாகி ஆகியோருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. கார்பன் அடிப்படையிலான மூலக்கூறுகள் இணைந்து உருவாக்கும் ஒரு புதிய வகை மூலக்கூறு கட்டமைப்பைக் கண்டுபிடித்ததற்காக இந்தப் பரிசு அறிவிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்தப் புதிய கண்டுபிடிப்பின் காரணமாக, பல்வேறு துறைகளில் பல புதிய மாற்றங்கள் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இலக்கியம், அமைதி மற்றும் பொருளாதார பரிசுகள் முறையே அக்டோபர் 9, அக்டோபர் 10 மற்றும் அக்டோபர் 13 ஆகிய தேதிகளில் அறிவிக்கப்படும். நோபல் பரிசு வென்றவர்களுக்கு தங்கப் பதக்கம், சான்றிதழ் மற்றும் 11 மில்லியன் ஸ்வீடிஷ் குரோனர் (சுமார் $1.17 மில்லியன்) மதிப்புள்ள குறிப்பிடத்தக்க ரொக்கப் பரிசு வழங்கப்படுகிறது. ஆல்ஃபிரட் நோபலின் நினைவு தினத்தை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் டிசம்பர் 10ஆம் தேதி முறையான நோபல் பரிசு விழா நடைபெறுகிறது.