பரிசுத் தொகையில் பாதியை இழக்கும் டென்னிஸ் சாம்பியன்.. அமெரிக்க வரி காரணமா?
அமெரிக்க ஓபன் டென்னிஸில் சாம்பியன் ஆகி, மொத்த பரிசுத் தொகையையும் பெற்ற ஸ்பெயின் வீரர் அல்காரஸால் அதை முழுவதுமாகச் சொந்த நாட்டுக்கு கொண்டு செல்ல முடியாது எனக் கூறப்படுகிறது.
அமெரிக்காவில் நடைபெற்ற ஓபன் டென்னிஸ் போட்டியில், ஸ்பெயின் வீரர் அல்காரஸ் 6-2, 3-6, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் இத்தாலியின் ஜானிக் சின்னரை வீழ்த்தினார். இது அல்காரஸின் இரண்டாவது அமெரிக்க ஓபன் பட்டம் மற்றும் ஆறாவது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். இந்த வெற்றியின் மூலம், உலகத் தரவரிசையில் அல்காரஸ் மீண்டும் முதல் இடத்தைப் பிடித்தார். இந்தப் போட்டியில், கடந்த ஆண்டைவிட 39 சதவீதம் பரிசுத்தொகை உயர்த்தப்பட்டது. அதன்படி இறுதிப் போட்டியில் வென்றதன் மூலம் 5 மில்லியன் டாலர் பரிசுத் தொகையாக கிடைத்தது. இந்திய பண மதிப்பில் சுமார் 44 கோடி ரூபாய் ஆகும். ஒட்டுமொத்தமாக 6.09 மில்லியன் டாலர் (52.80 கோடி ரூபாய்) பரிசுத் தொகை கிடைத்தது.
ஆனால், மொத்த பரிசுத் தொகையையும் அல்காரஸால் சொந்த நாட்டுக்கு கொண்டுசெல்ல முடியாது எனக் கூறப்படுகிறது. ஏனென்றால், அமெரிக்க சட்டப்படி 37 சதவீதம் வரி செலுத்த வேண்டுமாம். அதன்படி 1.7 மில்லியன் டாலர் வரியாக செலுத்த வேண்டும். அதுவும் இல்லாமல் 1.08 மில்லியன் முதல் 5 மில்லியன் வரையில் வருவாய் ஈட்டினால், நியூயார்ச் மாநிலத்திற்கு 9.65 சதவீதம் வரி செலுத்த வேண்டும். அப்படி பார்த்தால், சுமார் பாதி அளவு பணத்தை வரியாக மட்டுமே செலுத்த வேண்டுமாம். அதேவேளையில் அமெரிக்கா - ஸ்பெயின் நாட்டின் வரி ஒப்பந்தத்தின்படி ஒருமுறை வரி கட்டினால், அதன்பின் வரி கட்ட வேண்டாம். அதனால் சொந்த நாடு திரும்பும்போது மீண்டும் வரி கட்டத் தேவையில்லை.