நேபாள பேரிடர் : தற்போதைய நிலவரம் என்ன? அரசு வெளியிட்ட ரிப்போர்ட்!!
உலகை உலுக்கிய நேபாள பெருவெள்ளம் ஏற்பட்டு ஒரு மாதத்தை கடந்திருக்கும் நிலையில், இந்த வெள்ளத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்தான அறிக்கையை நேபாள அரசு தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, நேபாளத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,453 ஆக உயர்ந்துள்ளதாக நேபாள தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது.
இதுவரை 13,795 பேர் மீட்கப்பட்டு, 3 மருத்துவமனைகளில் 7 பேருக்கு தற்போது வரை சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எனவும் உயிரிழந்தவர்களில் 336 பேர் பெண்கள், 585 பேர் ஆண்கள், 532 பேர் அடையாளம் காண முடியாத உடல்களாக உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த அறிக்கையின்படி, இன்னும் 5,285 பேர் காணாமல் போனவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களை தேடும் பணியில் 20,477 பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 21 தற்காலிக தங்குமிட மையங்களில் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மாதம் ரூ.15,000, வீடு மற்றும் வாழ்வாதார உதவித்தொகை வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
இந்த பேரிடரில் சிக்கியவர்களை அடையாளம் காண இந்தியாவில் இருந்து 10 DNA நிபுணர்கள் கொண்ட குழு நேபாளத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுதவிர சிங்கப்பூர் 2 பேர், தென்கொரியா 3 பேர், அமெரிக்கா 3 பேர், சீனா 19 பேர் என மொத்தம் சர்வதேச தடயவியல் நிபுணர்கள் குழு உடல்களை அடையாளம் காணும் பணியில் உள்ளது. 312 உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மீட்பு பணிக்காக தாங்செங்கில் 5 அகழ்வாராய்ச்சி இயந்திரங்கள், 3 பேக்ஹோ லோடர்கள், 3 டிப்பர்கள் களத்தில் உள்ளன என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

