தவெக|விஜயின் பரப்புரை பயணத்திற்கு அனுமதி... ரோடு ஷோ-க்கு அனுமதி மறுப்பு!
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் செப்டம்பர் 13 ஆம் தேதி முதல் டிசம்பர் 20 வரை (சனிக்கிழமைகளில் மட்டும்) தமிழ்நாடு முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் விவரங்கள் அடங்கிய அறிக்கையை தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் நேற்று (செப்டம்பர் 9) வெளியிட்டிருந்தார். அதன்படி, முதற்கட்டமாக திருச்சியில் இருந்து இந்த பயணம் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும், அனைத்துப் பகுதிகளிலும் காவல்துறை தவெக தலைவர் விஜயின் பயணத்திற்கு அனுமதியளிக்காமலேயே இருந்து வந்தது. இதனால், தேர்தல் பரப்புரைக்கு அனுமதி கோரி தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மற்றும் துணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர் நிர்மல்குமார் இருவரும் டிஜிபி அலுவலகத்தில் கடிதம் அளித்திருந்தனர்.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திருச்சி மரக்கடையில் பேசுவதற்கு திருச்சி மாவட்ட காவல் துறை 23 நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது. தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் ஆனந்த், திருச்சி மாவட்ட நிர்வாகி கரிகாலன் இருவரும் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்கிறேன் என எழுத்துப்பூர்வமாக கடிதம் கொடுத்தவுடன், அனுமதி கடிதத்தை காவல் துறை துணை ஆணையர் சிபின் வழங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரோடு ஷோ-க்கு அனுமதி மறுப்பு !
திருச்சி மரக்கடையில் காலை 10.30 மணியில் இருந்து 11 மணி வரை மட்டுமே விஜய் பேச முடியும். காலை 9.30 மணி அளவில் மரக்கடை பகுதிக்கு தொண்டர்களை வரவழைத்து இருக்க வேண்டும். விஜய் வரும்போது அவருடைய வாகனத்துக்கு முன் பின் 5 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி என காவல் துறை தரப்பில் நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கிறது.
தொடர்ந்து, மருத்துவ வசதி, ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் அனைத்தும் தவெகவினரே செய்து கொள்ள வேண்டும். குழந்தைகள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகளை அழைத்து வரக்கூடாது, பொதுமக்கள் யாருக்கும் போக்குவரத்தில் இடையூறு செய்யக்கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தவெக தலைவர் விஜய் ரோடு ஷோ செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.