புதிய உச்சத்தில் பலி எண்ணிக்கை.. மீட்புப் படையினர் சொன்ன வார்த்தை.. இதயத்துடிப்பை நிறுத்தும் தகவல்!
செய்தியாளர் - கார்த்திகேயன்
கடந்த ஆகஸ்டு 26-ஆம் தேதி அன்று, இமயமலை பகுதியில் உள்ள மிகப்பெரிய பனிப்பாறை உருகியதால், நேபாளத்தின் கோஷி மற்றும் திரிசூலி ஆகிய ஆறுகளில் மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 300 கிலோ மீட்டர் வேகத்தில் வந்த வெள்ளநீர், சேற்றையும் அடித்துக்கொண்டு வந்ததால், ஆற்றங்கரையோரம் இருந்த பல்வேறு குடியிருப்புகளும், கட்டடங்களும் அடித்துச் செல்லப்பட்டன.
நேபாளம் மட்டுமின்றி, சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் பகுதியிலும், இந்த வெள்ளம் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்தது. தற்போதுவரை வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்காக, ராணுவம், காவல்துறையைச் சேர்ந்த 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், மலைப்பாங்கான நிலப்பரப்பு என்பதால், மீட்புப் பணிகள் மிகவும் கடினமாக உள்ளது என்று கூறப்படுகிறது.
மேலும், வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட அடர்த்தியான சேறு, மோசமான வானிலை காரணமாகவும், மீட்புப் பணிகள் தாமதமாகியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இருப்பினும், சீனா, இந்தியா, நேபாளத்தைச் சேர்ந்த மீட்புப் படையினர், தங்களது முடிந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த இயற்கைப் பேரிடரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை என்ன என்ற விவரத்தை, நேபாள அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, இதுவரை 1,010 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்ற அதிர்ச்சித் தகவலை, நேபாள அரசு தெரிவித்துள்ளது. மேலும், 4,000க்கும் மேற்பட்டோர் மாயமாகியிருப்பதாகவும், 11,800 பேரை இதுவரை மீட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு மீட்கப்பட்டவர்களில் 324 பேர் வெளிநாட்டவர்கள் என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, பேரிடர் நிகழ்ந்து 72 மணி நேரத்துக்கு மேல் கடந்துவிட்டதால் காணாமல் போனவர்களை உயிருடன் மீட்பதற்கான வாய்ப்பு குறைந்து வருவதாக மீட்பு நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இருப்பினும், தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

