\
oru marunthu virpanai prathinithiyin diary kurippu 6 at family doctors clinic closeing reason
Model Imagegoogle gemeni

ஒரு மருந்து விற்பனைப் பிரதிநிதியின் டைரிக் குறிப்பு - 6 | தனி மருத்துவர் கிளினிக்கை மூடக் காரணம்!

மருத்துவமனைகளில் அப்படிப்பட்ட இரத்தம் தோய்ந்த பஞ்சுகளை மற்ற குப்பைகளைப்போல சாதாரண குப்பை வாளியில் போட முடியாது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.
Published on

வைகை ஆற்றோரமாகப் புதிதாக அமைத்திருக்கும் சாலையில் சென்று கொண்டிருக்கையில் என்னை ஓர் இருசக்கர வண்டி முந்துகிறது. முந்தியவர் தன் முன்னால் ஒரு குழந்தையை நிற்க வைத்து ஓட்டிக்கொண்டிருந்தார். என் இருசக்கர வாகனத்தை முந்திய மாத்திரத்தில் எந்தவித சமிக்ஞையுமின்றி இடப்பக்கமாக திரும்பிவிட்டார். கண் முன் ஒரு குழந்தையை முன்பக்கம் நிற்கவைத்து வருபவரை மோதிவிடக்கூடாது என்ற ஜாக்கிரதை உணர்வு மேம்பட என் ஸ்கூட்டரின் இரு பிரேக்குகளையும் அமுக்கிவிட்டேன் போலிருக்கிறது. ஸ்கூட்டருக்குச் சின்ன சக்கரங்கள் என்பதால் மண்ணில் வாரிவிட்டன.

ஸ்கூட்டர் அங்கேயேதான் விழுந்தது. நான்தான் 'லார்ட்ஸ்' கிரிக்கெட் மைதானத்தில் பந்தைச் சறுக்கிக்கொண்டு பிடிக்கும் 'நியூஸ்லாண்ட்' கிரிக்கெட் வீரர் போல மதுரை ரோட்டில் சறுக்கிக்கொண்டிருந்தேன். அக்கம் பக்கம் நின்றவர்கள், பின் தொடர்ந்து வந்தவர்கள் என அனைவரும் தூக்கிவிட உதவி செய்தார்கள்.

Model Image
Model ImageChat Gpt

எழுந்ததும் எனக்குத் தோன்றியது- 'கை கால்களை அசைக்க முடிகிறது. எலும்பு முறிவு இல்லை. ஹெல்மெட் போட்டிருந்ததால் தலையில் அடிபடவில்லை. இதை உடனடியாக உணர முடிந்தது. பொதுவாக மருத்துவமனைகளில் காத்திருக்கும்போது விபத்தில் அடிபட்டவர்களைத் தூக்கிக்கொண்டு வருவார்கள், அவசர சிகிச்சைப் பிரிவில் முதலில் பார்ப்பது தலையில் அடிபட்டிருக்கிறதா என்றுதான், ஆதலால் ஹெல்மெட்டைக் கழற்றி ஒருமுறை தலையில் கைவைத்துப் பார்த்துக்கொண்டேன். நிதானமாகத்தான் இருந்ததுபோல் பட்டது. ஆனாலும் சுற்றியிருந்தவர்கள் எனக்கிருக்கும் பதற்றத்தைக் குறைக்க அருகில் இருக்கும் கறிக்கடையில் அமரவைத்தும், தண்ணீர் குடியுங்கள் என்றும் அறிவுறுத்திக்கொண்டிருந்தார்கள். நான் ஓரளவிற்கு நிலைத்தன்மையுடன் இருப்பதாகக் கூறினாலும், வயதானவர் ஒருவர், "இல்ல தம்பி, பதற்றம் கொஞ்சம் குறையும், கொஞ்சம் தண்ணீ குடியுங்க" என்று ஒரு செம்பில் தண்ணீர் கொடுத்தார். அன்பிற்காக வாங்கிக் குடித்துக்கொண்டேன். விழுந்துகிடந்த வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு பின்தொடர்ந்து வந்தவர், "சார், அவர் குழந்தையோட குறுக்க வந்துட்டாரா?" என்று கேட்டார். அவர் காண்பித்த பக்கம் திரும்பிப் பார்த்தால் என்னை விழுக வைத்தவர், பக்கத்துக் கடையில் கறி வாங்கிக்கொண்டு வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார்.

கணக்குப் பாடத்தில் நிகழ்தகவு வகை கணக்குகள் எனக்குச் சுவாரஸ்யமானவை. 'நான்கு பேர் சேர்ந்து ஒரு வேலையை ஐந்து நாட்களில் முடித்தால் இரண்டு பேர் சேர்ந்து எத்தனை நாட்களில் வேலை முடிப்பார்கள்'? போன்ற கணக்குகள் கேட்பார்கள்.

அதே நிகழ்தகவை வாழ்க்கையில் போட்டுப்பார்த்தால், இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும், இதோ, இந்த வண்டியில் எந்தச் சமிக்ஞையும் இல்லாமல் குறுக்கே புகுந்தவரை ஒருவேளை நான் இடித்திருந்தால், இதே இந்தச் சமூகம், "ஏம்ப்பா, அவன்தான் குழந்தையோட வரான்ல, நீ கொஞ்சம் மெதுவா வந்தருக்கக்கூடாதா?" என்று கேட்டிருப்பார்கள். அப்படியொரு நிகழ்தகவு நிகழ்ந்திருந்தால்கூட நான் விழுந்தவரிடம் சென்று மன்னிப்பு கேட்டிருப்பேன். இப்போது பக்கத்துக் கடையில் நின்றுகொண்டு குற்றவுணர்ச்சியுடன் பார்வையை மறுபக்கம் திருப்பிக்கொண்டு கறி வாங்கிக்கொண்டிருக்க மாட்டேன்.

ஒரு சம்பவம் நமக்கு நேரும்போது ஒரு மாதிரியாகவும், அடுத்தவருக்கு நிகழும்போது வேறொரு மாதிரியாகவும் இருப்பதாகத் தோன்றலாம். அதற்குப் பெயர்தான் எதார்த்தம்.

google gemeni

வாழ்க்கையில் நிகழ்தகவுகள் எப்படித் தற்செயல்களால் ஆனவையோ, அப்படித்தான் நம் செயல்பாடுகளும். தற்செயல்களுக்கான நமது செயல்பாடுகள்தான் நம் வாழ்வைத் தீர்மானிக்கின்றன.

ஒரு மருந்து விற்பனைப் பிரதிநிதியின் டைரியில் எதற்காக இந்தத் தத்துவார்த்த வியாக்கியானங்கள் என்று வியக்கலாம். அதற்கும் காரணம் இருக்கிறது.

அடிபட்டு விழுந்தபின், தெரிந்த மருத்துவருக்கு அழைத்து, நடந்ததைச் சொல்லி, மருத்துவமனைக்கு முதலுதவிக்கு வருகிறேன் என்று தெரிவித்துவிட்டு, ஸ்கூட்டரை ஓட்ட முடிந்ததால், நானே ஓட்டிச் சென்றேன்.

கால் முட்டிக்குக் கீழே ஒருசிராய்ப்பு, அந்த இடத்தில் 'பேண்ட்'டில் ஒரு ஓட்டையே விழுந்திருந்தது. பின்னங்கையில் ஒரு சிராய்ப்பு. மற்றபடி உள்குத்துதான்.

தெரிந்த மருத்துவர் என்பதால், உடனடியாக முதலுதவிக்குச் செவிலியர்கள் தயாராய் இருந்தார்கள்.

செவிலியர் என் சட்டைக் கையை மேல் ஏற்றிவிட்டு,' கொஞ்சம் எரியும் சார்', என்று சொல்லியபடி, சிராய்ப்புகளைக் கழுவினார். பொதுவாக சறுக்கிக்கொண்டு விழும்பொழுது கடினமான தரை , மண், கல் போன்றவை நம் தோலுடன் உராய்வுக்கு உட்பட்டு அதனால் வரும் சூட்டின் காரணமாக நம் தோலைப் பொசுக்கிவிடுவது வழக்கம். மேலும் உராய்வு அதிகமாக அதிகமாக மேலே இருக்கும் மெல்லிய தோல் பாகம் பாதிக்கப்படும்போது அங்கிருக்கும் இரத்த நாளங்களும் பாதிக்கப்படும். அதனுடன் காற்று படும்போது மண், கல் படும்போது அங்கிருக்கும் நரம்புகள் 'யார்றா இவைங்க?' என்று மூளைக்குத் தூண்டல்களை அனுப்பும்- அதன் மொழிதான் நமக்கு எரிச்சலாகப் படும். இவ்வளவு தெரிந்திருந்தும், செவிலியர் 'ஆண்ட்டி செப்டிக் (ANTI SEPTIC)' போடும்போது எரியத்தான் செய்தது.

google gemeni

காலில் கொஞ்சம் ரத்தம் வந்தது, அதையும் பஞ்சால் துடைத்தெடுத்தார், விழுந்ததால், தோலின் சிறு பிசிறு ஒட்டிக்கொண்டிருந்தது, அதையும் துடைத்தெடுத்தார். இந்த இரத்தம் தோய்ந்த பஞ்சுகளைப் போட ஒரு குவளை வைத்திருந்தார், பிறகு காயத்தைக் கழுவி மறுபடியும் பஞ்சால் துடைத்தார், அந்தப் பஞ்சையும் அந்தக் குவளைக்குள் போட்டார். சில திரைப்படங்களில் ஆபரேஷன் முடிந்தது என்பதைக் காட்ட வெளியில் இருக்கும் பல்பை அணைத்துக் காண்பிப்பர், எனக்கு முதலுதவி முடிந்தது என்பதைக் காட்ட அந்த நிறைந்த குவளையைக் காண்பிக்கலாம்.

செவிலியர்களுக்கு எவ்வளவு நேர்த்தி! நம் இரத்தம் அவர்கள் கைகளில் படாதவாறு ஒரு கத்தரிக்கோலைக் கொண்டு பஞ்சைப் பிடித்து நம் காயத்தை அழுத்தவும் கூடாது, ஆனால் சுத்தம் செய்யவும் வேண்டும் என்று இலகுவாக செய்கிறார்கள். முதலுதவி முடிந்ததும் ’நன்றி’ கூறிவிட்டு அந்தக் குவளையை அந்தச் செவிலியர் என்ன செய்கிறார் என்று பார்த்தேன். முழுக்க இரத்தம் தோய்ந்த பஞ்சுகளும், மருந்து போட தடவிக்கொண்ட பஞ்சுகளும் இருந்த குவளை.

நீங்கள்கூட மருத்துவமனைக்குப் புண்ணிற்கு 'டிரஸ்ஸிங்' போட போயிருப்பீர்கள், அந்த இரத்தம் தோய்ந்த பஞ்சைப் பார்த்திருப்பீர்கள், ஏன், உங்கள் குழந்தைக்கு ஊசியோ, தடுப்பூசியோ, போடும்போது ஒரு பஞ்சைக்கொண்டு தடவியிருப்பார்கள், பிறகு அந்தப் பஞ்சை அவர்கள் ஒரு குப்பைவாளியில் போட்டிருப்பார்கள். சில நோயாளிகளுக்குச் செவிலியர்கள் அழுத்தித் தேய்ப்பது பத்தாது என்று உறவினர்கள் வந்து தேய்த்துவிட்டு அந்தப் பஞ்சை எங்கே போடுவது என்று தேடிக்கொண்டிருப்பார்கள். மருத்துவமனைகளில் அப்படிப்பட்ட இரத்தம் தோய்ந்த பஞ்சுகளை மற்ற குப்பைகளைப்போல சாதாரண குப்பை வாளியில் போட முடியாது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

google gemeni

மருத்துவமனைகளில் இப்படி உற்பத்தியாகும் குப்பைகளை ’பயோ மெடிக்கல் வேஸ்ட் (BIO MEDICAL WASTE) என்றழைக்க வேண்டும். இந்த இரத்தம் தோய்ந்த பஞ்சுகளில் அல்லது பயோ மெடிக்கல் வேஸ்ட் குப்பைகளில் கிருமிகள் இருக்கலாம், அதனால் அவற்றைத் தனியே சேகரிக்க தனிக் குப்பை வாளிகள் இருக்கும் என்பதையும் நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். மருத்துவமனை என்பதால் முதியவர்களும், குழந்தைகளும், நோயாளிகளும் வருவார்கள், நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்களுக்கு இந்தப் பயோ மெடிக்கல் கழிவுகளால் தொற்று நோய் வரும் அபாயம் இருப்பதால், அவற்றை முறைப்படி அப்புறப்படுத்த வேண்டும் என்பதை நீங்கள் தெரிந்துகொள்வது நல்லது.

பயோ மெடிக்கல் கழிவுகளைத் தனிக்குப்பை வாளியில் சேகரிப்பது சரி, அந்தக் குப்பைகளை எங்குக் கொண்டுபோய்ப் போடுவார்கள் என்ற சந்தேகம் உங்களுக்கு எழலாம்தானே?

இப்போது எல்லாம் மாநகராட்சி, நகராட்சிகளுக்கு உட்பட்ட குப்பை வண்டிகளில் ஒலிபெருக்கி ஒலிப்பதை நீங்கள் கேட்டிருக்கலாம், மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் என்று நம்மையே பிரித்து அதனதன் குப்பை வாளியில் துப்புரவுப் பணியாளர்கள் கேட்டு வாங்குவார்கள். அதையும் நீங்கள் கேட்டிருக்கலாம். எந்த மாநகராட்சி குப்பை வண்டியாவது, ’பயோ மெடிக்கல் வேஸ்ட் குப்பைகளைக் கொடுங்கள்’ என்று கேட்டு வாங்கிக்கொண்டு வருவதை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? பார்த்திருக்கிறீர்களா? மாட்டீர்கள். ஏனென்றால், மருத்துவமனைகளில் நமக்கு வழியும் இரத்தத்தை அல்லது நமக்குச் சிகிச்சையளித்த பஞ்சுகளை மருத்துவமனை நிறுவனங்களால் சாதாரண குப்பைகளில் போடமுடியாது. நோய் தொற்று வந்துவிடும் போன்ற சுகாதார காரணங்களால் அதற்கு அனுமதி கிடையாது. அப்படியென்றால், நம் இரத்தத்தைத் துடைத்து மிச்சமான அந்தப் பஞ்சை, இந்த மருத்துவமனை என்ன செய்கிறது என்று என்றாவது யோசித்திருக்கிறீர்களா?

google gemeni

ஒரு மருத்துவமனை செல்கிறோம், அடிபட்ட காயத்திற்குச் செவிலியர் மருந்து போட தாமதமாகிறது என்று கோபப்படுகிறோம், அழுத்தித் தேய்க்கிறார் என்று திட்டுகிறோம், காசைக் கட்டுகிறோம், அதிகமாக பணம் வாங்குகிறார்கள் என்று புலம்புகிறோம், பிறகு, வெளிவந்துவிடுகிறோம். அதற்குப் பின்னால் நடக்கும் ஒரு மருத்துவமனை அலுவலக நிமித்த செயல்பாடுகளைத் தெரிந்து கொள்ளவேண்டும்.

மருத்துவமனைகளில் இப்படி உற்பத்தியாகும் பயோ மெடிக்கல் கழிவுகளை நீக்க அல்லது எடுத்துக்கொண்டு போக ஒரு நிறுவனம் இருக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு நிறுவனம் இப்படி இருக்கும். அந்த நிறுவனம் இந்தக் குப்பைகளை ’முறைப்படி’ எடுத்து ’முறைப்படி’ அழிப்பார்கள். அதுதான் அவர்களுக்கு வேலை. இதற்காக ஒரு கட்டணம் அவர்கள் வசூலிப்பார்கள். (அதாவது குப்பையை அள்ள பணம் ).

மருத்துவமனைகளில் உற்பத்தியாகும் இந்த மாதிரியான பயோ மெடிக்கல் கழிவுகளை அள்ளிக்கொண்டு போக மருத்துவமனைகள் இந்த நிறுவனத்திற்குப் பணம் கட்டுவதோடு அல்லாமல் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட வேண்டும். அதுதான் விதி. குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் இட்டு, ஒரு வருடத்திற்கு முன்னதாகவே அதற்கான கட்டணத்தை மருத்துவமனை கட்டிவிடவேண்டும்.

நீங்கள் ஒரு கார் வைத்திருக்கிறீர்கள். ஒரு ஆள் வந்து ’தினமும் உங்கள் காரைச் சுத்தம் செய்து, கழுவி வைத்துவிட்டுச் செல்கிறேன், பணம் தாருங்கள்’ என்று கேட்டால் தருவீர்கள். நியமித்துக்கொள்வீர்கள், அதே ஆள், ’ஒரு வருடத்திற்குரிய பணத்தை முன்கூட்டியே தந்துவிடுங்கள், நான் தினமும் வந்து கழுவி விடுகிறேன்’ என்று கூறினார் என்றால், உங்களுக்கு அடிப்படையாக எழும் சந்தேகம் என்னவாக இருக்கும், "முன்கூட்டியே பணத்தைத் தந்துவிட்டால், இந்த ஆள் வராம போயிட்டால் என்ன பண்றது, இந்த ஆளை எப்படிப் பிடிப்பது? போன்ற அடிப்படைச் சந்தேகங்கள் வரும் அல்லவா? இந்த மாதிரியான வாய்ப்புகள் மருத்துவமனை நிர்வாகத்திற்கு வழங்கப்படவில்லை. அதுதான் பெருவாரியான மாவட்டங்களில் பிரச்னை.

நிறைய மருத்துவமனைகளில் இந்த பயோ மெடிக்கல் கழிவுகளை அந்த நிறுவனம் முறைப்படி அகற்றுவது கிடையாது என்ற குற்றச்சாட்டுகளை மருத்துவமனைகள் முன்வைக்கின்றன.

google gemeni

இப்போது முன்கூட்டியே பணம் கட்டிய ஒரு முதலாளியாக உங்களுக்கு எழும் கேள்விகள் என்னென்ன?

"நீ வந்து காரைக் கழுவ தினமும் வராட்டி நான் எதுக்கு முன்கூட்டியே பணம் தரணும்?

நீ எப்ப வந்து சுத்தம் செய்கிறியோ, அன்று பணத்தை வாங்கிக்கோ.. இல்லாட்டி மாதாமாதம் ஒன்றாம் தேதி கடந்த மாதம் வேலை பார்த்ததற்கு வாங்கிக்கோ " இப்படியெல்லாம் உங்களுக்குச் சொல்ல தோன்றும், ஆனால் இதையெல்லாம் மருத்துவமனைகள் சொல்ல உரிமை இல்லை என்று உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

ஒரு மருத்துவமனையில் மருத்துவரைப் பார்க்க காத்திருக்க நேரிட்டது. ஒரு வயோதிகரை படுத்தபடுக்கையாக ஸ்ட்ரெச்சரில் கொண்டுவந்து அட்மிட் செய்திருந்தார்கள். பெரியவர் , படுக்கையிலேயே சிறுநீர் மற்றும் மலம் கழித்துவிட்டார், சில செவிலியர்களும், துப்புரவுப் பணியாளர்களும் படுக்கையிலிருந்து பெரியவரை நகர்த்தி, சுத்தம்செய்து, அவரையும் சுத்தம்செய்து வேறொரு படுக்கையில் படுக்கச் செய்து சிகிச்சை தடைபடாதபடி பார்த்துக்கொண்டார்கள். அந்த வயோதிகரின் உடல் மற்றும் படுக்கையிலிருந்து உற்பத்தியான கழிவுகளை ஒரு பெரிய குப்பை பேப்பரில் போட்டு மருத்துவமனை ஊழியர் வெளியில் கொண்டு வந்து வைத்தார். அங்கு மூன்று பேப்பர்களில் குப்பைகள் (மருத்துவமனை கழிவுகள்) அகற்றப்படாமல் இருந்தன, ஏனென்றால் பயோ மெடிக்கல் மேனேஜ்மென்ட் நிறுவனம் சரிவர வரவில்லை என்று பேசிக்கொண்டிருந்தார்கள்.

அந்தக் குப்பை எங்குச் செல்லும்? சாதாரண குடிமக்கள் பயன்படுத்தும் மாநகராட்சி குப்பைக்கா அல்லது எங்கு? சாதாரண குப்பைகளில் போட்டால் மாநகராட்சி அந்த மருத்துவமனை மீது நடவடிக்கை எடுத்துவிடும். பிறகு என்ன செய்யும் மருத்துவமனை?

google gemeni

மருத்துவமனைகளுக்கு இது பெரும் தலைவலிதான். இதுகூட குடும்ப மருத்துவர்களாக இருக்கும் சில தனி மருத்துவர்கள் தங்கள் கிளினிக்கை மூடிக்கொண்டு போவதற்குக்கூட காரணமாக இருக்கலாம்.

மருத்துவமனைக்கு வெளியில் நின்று கொண்டுதானே பார்த்தீர்கள். வாருங்கள் மருத்துவமனைக்கு உள்ளே சென்று பார்க்கலாம்...இது ’ஒரு மருந்து விற்பனைப் பிரதிநிதியின் டைரிக்குறிப்பு..’

இதன் முந்தைய பகுதியைப் படிக்க.. ஒரு மருந்து விற்பனைப் பிரதிநிதியின் டைரிக்குறிப்பு - 5 | தோயும் குடும்ப மருத்துவர் தத்துவம்!

(டைரிக்குறிப்பு தொடரும்..)

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com